தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது, உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக (லூக்கா 1:13).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/S34pbjxRuII
ஆசாரியனாகிய சகரியாவும், அவன் மனைவி எலிசபெத்தும் கர்த்தருடைய சகல கற்பனைகளின் படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள். அவர்களுக்கு பிள்ளைகள் இல்லை, வயது சென்றவர்களாகக் காணப்பட்டார்கள். திடீரென்று ஒரு நாள் ஆசாரிய முறைமையின் படி தேவாலயத்திற்குள் பிரவேசித்து தூபம் காட்டுகிற சீட்டைப் பெற்றான். சுமார் பதினெட்டாயிரம் ஆசாரியர்கள் இருபத்துநான்கு வகுப்புகளாய் காணப்பட்டு தேவாலயப் பணிகளைச் செய்வார்கள். அவர்கள் அத்தனை பேரிலும் குறிப்பாய் ஏரோது ராஜா ஆட்சி செய்த நாட்களில் இவனுடைய பெயரில் சீட்டு விழுந்தது கர்த்தருடைய கிருபையாய் காணப்படுகிறது. அவன் ஆலயத்தில் பிரவேசித்து தூபம் காட்டுகிற வேளையில் காபிரியேல் தூதன் வெளிப்பட்டு, சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது, உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக என்றான். அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான். அவன் இஸ்ரவேல் சந்ததியரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான். பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான். சகரியா அந்தச் செய்தியை விசுவாகிக்க கூடாமல், இதை எதினால் அறிவேன், நான் கிழவனாயிருக்கிறேன், என் மனைவியும் வயதுசென்றவளாயிருக்கிறாளே என்றான். சகரியாயும் எலிசபெத்தும் தங்களுடைய இளவயதில் அதிகமாய் கர்ப்பத்தின் கனிக்காக ஜெபித்தார்கள். ஆனால் இப்போது வயோதிப வயதிற்குள்ளாய் கடந்து வந்து விட்டார்கள். பிள்ளைகளுக்காக ஜெபிப்பதைப் பல வருடங்களுக்கு முன்பாகவே நிறுத்தி விட்டார்கள். பிள்ளைகள் இல்லை என்பதையும் இப்போது மறந்து விட்டார்கள். ஆகையால் பதில் வந்த வேளையிலும் கூட அவர்களால் நம்ப முடியவில்லை. ஆனால் கர்த்தர் அவர்கள் ஜெபித்தின்படியே ஏற்ற வேளையில் பதில் கொடுத்தார், பெரிய ஒரு தீர்க்கதரிசியைப் பெற்றெடுக்கும் பாக்கியத்தைக் கொடுத்தார்.
கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் அனேக நாட்களாய் குறிப்பிட்ட காரியங்களுக்காக ஜெபித்திருக்கக் கூடும். கர்த்தரிடத்திலிருந்து பதில் வராததினால் இப்போது அவைகளுக்காக ஜெபிப்பதைக் கூட நிறுத்தியிருக்கலாம், தேவ சித்தம் இல்லை என்பதாகக் கூட நீங்கள் நினைத்து அவைகளை மறந்திருக்கலாம். ஆனால் கர்த்தர் உங்கள் விண்ணப்பங்களை மறக்கவில்லை, உங்கள் வேண்டுதல்களை அவர் கேட்டிருக்கிறார். அவருடைய வேளையில் அவர் உங்களுக்குப் பதில் செய்வார். அந்த நாட்கள் துரிதமாக வருகிறது. கர்த்தர் காலம் தாழ்த்தும் போது, அதற்கு இல்லை என்பது அர்த்தமல்ல. உங்களுக்காக ஒரு பெரிய அற்புதத்தை அவர் செய்யப் போகிறார். அதினிமித்தம் உங்களுக்குச் சந்தோஷமும், மகிழ்ச்சியும் உண்டாகும். ஆகையால் உங்கள் ஜெபங்களை விட்டுவிடாதிருங்கள், அவிசுவாசத்திற்கு இடம் கொடாதிருங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
http://www.wogim.org
https://youtube.com/uthamiyae