ரோம 9:5 … மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/2RB8HBbDs2o
கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடலாமா வேண்டாமா என்ற கேள்வியை அநேகர் வைக்கிறார்கள். மாத்திரமல்ல, இயேசு உண்மையாகவே டிசம்பர் 25ஆம் தேதி தான் பிறந்தாரா என்ற கேள்வியும் அநேகருக்கு இருக்கிறது. சில நாடுகளில் டிசம்பர் மாதத்திலும், சில நாடுகளில் பெப்ரவரி மாதத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதுண்டு. பார்வோன், ஏரோது போன்றோர்கள் தங்கள் பிறந்தநாளை கொண்டாடினார்கள், ஆனால் இயேசு தன் பிறந்தநாளை கொண்டாடவில்லை என்றும் சொல்பவர்கள் உண்டு. இப்படியிருக்க வசனம் சொல்லுகிறது நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளுகிறான்; நாட்களை விசேஷித்துக்கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான். புசிக்கிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று புசிக்கிறான்; புசியாதிருக்கிறவனும் கர்த்தருக்கென்று புசியாதிருந்து, தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறான் (ரோம 14:6) என்பதாக. நாமும் கிறிஸ்துமஸ் நாளை கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்வதில் தவறொன்றும் இல்லை. ஆனால் கிறிஸ்துமஸ் பண்டிகையை எப்படி கொண்டாடுகிறோம் என்பது தான் முக்கியம். அநேகருக்கு கிறிஸ்துமஸ் என்றாலே குடியும், வெறியும், காளியாட்டமும் நிறைந்த வியாபார பண்டிகையாய் மாறிவிட்டது தான் கவலைக்குரிய காரியமாய் காணப்படுகிறது. தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது (ரோம 14:17) என்று வசனம் கூறுகிறது.
இந்த உலகத்தில் முதன் முதலில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியவர்கள் மேய்ப்பர்கள். அந்த மேய்ப்பர்கள் எப்படி கிறிஸ்துமஸ் நாளை கொண்டாடினார்கள்? வசனம் சொல்லுகிறது இயேசுவின் பிறப்பைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள் என்பதாக. இதிலிருந்து நாம் எப்படி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடவேண்டும் என்று அறிந்துகொள்ளலாம். இந்த நாட்களில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் நற்செய்தியை சொல்வதிலும், அவர் பாவிகளை இரட்சிக்க இந்த உலகத்திற்கு வந்தார் என்ற சுவிசேஷத்தையும் தீவிரமாக சொல்ல நாம் செயல்பட வேண்டும். மாத்திரமல்ல, மேய்ப்பர்கள் இயேசுவை குறித்து அறிந்த ஜனங்களுக்கு அல்ல, இயேசுவை குறித்து அறியாத ஜனங்களுக்கு இயேசுவின் பிறப்பை சொன்னார்கள். இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரம் வாழ்த்துதலை பரிமாறிக்கொள்வதோடு நின்றுவிடாமல், இந்நாட்களில் எப்படியாவது குறைந்தது ஒருவர் பத்து நபர்களுக்காகவாவது கிறிஸ்துவை அறியாத ஜனங்களுக்கு சொல்ல செயல்படுவேன் என்ற தீர்மானம் எடுக்கிறவர்களாய் நாம் காணப்படவேண்டும்.
கிறிஸ்துவின் முதல் வருகையை நினைக்கும் இந்த நாட்களில், சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாகியும் அவருடைய இரண்டாம் வருகையை பற்றி அறியாத கோடிக்கணக்கான ஜனங்களை நினைவில் வைத்து, அவர்களுக்கு இயேசுவை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக செயல்படுங்கள். இதுவே நாம் கொண்டாடும் நல்ல கிறிஸ்துமஸ் பண்டிகை.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
www.wogim.org
Doha, Qatar