கிறிஸ்துமஸில் சிலுவை (The cross at Christmas)

லுக் 2:34,35 பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்றான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/tFXz7GWwVwU

கிறிஸ்துமஸ் பிறப்பின் கொண்டாட்டத்தில் பிரபலமானவைகள் வாழ்த்து அட்டைகள், பாடல் பவணிகள், மெழுகுவர்த்திகள், கேக், பாடல்கள், போட்டிகள் போன்றவைகள். ஆனால் இயேசுவின் பிறப்பு மிகவும் பாடுகள் நிறைந்தவைகளாய் இருந்தது. குடிமதிப்பு எழுதும்படி யோசேப்பு கற்பவதியாகிய மரியாளுடன் கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான். சுமார் 50 மைல் தூரம் மரியாள் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது இந்த பிரயாணத்தை மேற்கொண்டாள். சுமார் 400 வருடங்கள் அமைதியாய் இருந்த தேவன் சில மாதங்கள் மரியாள் கர்ப்பமடைவதை தள்ளிப்போட்டிருக்கலாம். இருந்தாலும் இயேசு பெத்லகேம் என்னும் ஊரில் பிறக்க வேண்டும் என்பது ஆண்டவருடைய தீர்மானமாய் இருந்தது.

இயேசு பிறப்பதற்கு சத்திரத்தில் இடமில்லை. பெத்லகேம் பட்டணம் யூதேயா தேசத்தில் ஆயிரம் பட்டணங்களில் சிறியது. நாசரேத்திலிருந்தது ஒரு நன்மை வருமா என்று கேள்வி கேட்கக்கூடிய சாதாரண கிராமத்தில் இயேசு வளர்ந்தார். நான் இன்ன இனத்தான், இந்த பெரிய பட்டணத்தில் பிறந்தவன், இந்த பெரிய மருத்துவமனையில் பிறந்தவன் என்று தங்கள் மார்பை தட்டிக்கொள்ளுபவர்கள் அநேகம் உண்டு. ஆனால் இயேசு எளிமையான இடத்தில், எளிமையாக வாழ்ந்தார். ஆண்டவர் தாழ்மையுள்ளவர்களை உயர்த்துகிறவர். இளம் பிராயத்திலிருந்து நுகத்தை சுமந்தார்.

அவருடைய பொருளாதாரம் எப்படி இருந்திருக்கும் என்று பார்த்தால் அவருடைய தகப்பன் யோசேப்பு சாதாரண தச்சு வேலை செய்து பிழைத்துக்கொண்டிருந்தான். இயேசுவும் தச்சன் என்று அழைக்கப்பட்டார். இதினிமித்தம் அவருக்கு வந்திருக்கும் சம்பளம் மிகவும் அற்பமாகவே இருந்தது. எனக்கு சொத்து வேண்டும், அதிக பணம் வேண்டும் என்ற நோக்கத்தை மாத்திரம் வைத்து ஜீவிப்பவர்களுக்கு, இயேசு நம் எல்லாருக்கும் நல்ல முன்மாதிரி. பணம் எல்லாவற்றிற்கும் அவசியம். அதேவேளையில் பணம் நம்மை ஆளுகை செய்ய அனுமதித்துவிட கூடாது. இப்படி இயேசு தம்மை தாமே தாழ்த்தினார். ஆனால் தேவன் அவரை உயர்த்தினார்.

மிகுந்த சந்தோசம் உண்டாக்கும் நற்செய்தி என்று இயேசுவின் பிறப்பை குறித்து மேய்ப்பருக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆசீர்வாத வார்த்தையில் மரியாளின் நெஞ்சை பிளக்கும் செய்தி அவளுக்கு வந்தது, இயேசுவின் மரணத்தை குறித்தது. மரியாள் எவ்வளவாய் பாதிக்கப்பட்டிருப்பாள் என்பதை வார்த்தையால் சொல்லிமுடியாது. ஒரு குழந்தை பிறந்தவுடன் மரிக்கப்போகிறான் என்று சொன்னால், நம்மால் எப்படி ஜீரணித்துக்கொள்ள முடியும். ஆனால் மரியாள் இவையெல்லாவற்றையும் தன் இருதயத்தில் வைத்துக்கொண்டாள். இயேசுவின் பிறப்பை குறித்து கொண்டாடுகிற நாம், அவர் பிறப்பில் இருந்த பாடுகளையும் நினைவுகூருவோம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
www.wogim.org
Doha, Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *