அன்னாள் என்னும் தீர்க்கதரிசி (Anna, the Prophetess).

அவளும் அந்நேரத்திலே வந்து நின்று,    கர்த்தரைப் புகழ்ந்து,    எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கும் அவரைக்குறித்துப் பேசினாள்(லூக்கா 2:38).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/ibw2W9a5acc

இயேசு பிறந்த பின்பு,    அவருடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறின போது,    யோசேப்பும் மரியாளும்,    மோசேயின்  நியாயப்பிரமாணத்தின் படி அவரைக் கர்த்தருக்கென்று  ஒப்புக்கொடுக்க  எருசலேம் தேவாலயத்திற்குக் கொண்டு போனார்கள். அந்த வேளையில் வயோதிகர்களாகிய சிமியோனும்,    அன்னாளும் அவரை மேசியாவாகக் கண்டு,    அவரைக் குறித்து மற்றவர்களுக்குப் பேசினார்கள்.  அவர்களில் அன்னாள்,    கன்னிப்பிராயத்தில்  விவாகமானதுமுதல் ஏழுவருஷம் புருஷனுடனே வாழ்ந்தவளும்,    ஏறக்குறைய எண்பத்துநான்கு வயதுள்ளவளுமாயிருந்தாள். அவள் தேவாலயத்தை விட்டு நீங்காமலும்,    இரவும் பகலும் உபவாசித்து ஜெபம் பண்ணி,    ஆராதனை செய்து கொண்டிருந்தாள். மேலும் மீட்புண்டாக  காத்திருந்த யாவருக்கும் இயேசுவைக் குறித்து பேசினாள். அவள் விதவையாய் இருந்த போதும்,    பலபாடுகளையும் அவமானங்களையும் வாழ்க்கையில் சந்தித்த போதும்,    தேவனுடைய சமூகத்தைத்  தேடுவதையும்,    ஜெபிப்பதையும்,    அவரைக்குறித்து மற்றவர்களுக்குச்  சொல்லுவதையும் கைவிடவில்லை.

கர்த்தருடைய பிள்ளைகளே,    இயேசு பிறந்து இரண்டாயிரம் வருடங்கள் ஆனபின்பும் கர்த்தருடைய சுவிசேஷம் இன்னும் உலகத்தின் எல்லா ஜனங்களுக்கும் சென்றடையவில்லை. இயேசுவின் பிறப்பு,    எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியாய் காணப்பட்டிருந்தும்,    அவர் சகல ஜனங்களுக்காகவும் ஆயத்தம் பண்ணின இரட்சண்யமாயிருந்தும்  அவரை அறியாதவர்களும்,    அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்களும் இன்னும் அனேகர் காணப்படுகிறார்கள். பண்டிகை காலங்களில் நாம்,    நம்முடைய வீட்டாரோடும்,    சபையாரோடும் மகிழ்ந்து களிகூருகிற இந்த நாட்களில்,    இயேசுவைக் குறித்து மற்றவர்களுக்கு அறிவிக்கிற பொறுப்பு நம்மேல் காணப்படுகிறது என்பதை உணர்ந்திருக்கிறோமா? கர்த்தருடைய சுவிசேஷம் சகல ஜனங்களுக்கும் கடந்து செல்ல நாம் எடுத்த முயற்சிகள் என்ன? என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.

நம்முடைய பிரச்சினைகளையும்,    பாடுகளையும்,    கஷ்டங்களையும்,    பற்றாக்குறைகளையும் குறித்து அனேக வேளைகளில் எண்ணிக் கொண்டிருக்கிறோம். அன்னாள் ஒரு விதவை,    நம்மைக் காட்டிலும் அனேக வேதனைகளையும் பாடுகளையும் பற்றாக்குறைகளையும் சந்தித்திருந்தும்,    அவள் கர்த்தருடைய தீர்க்கதரிசியாக,    அவருடைய வாயாகக்  காணப்பட்டாள்.  தேவ ஜனமே,    இந்த பண்டிகை நாட்களில் இயேசுவின் பிறப்பின் நற்செய்தியை மற்றவர்களுக்குச் சொல்லுங்கள். கர்த்தருடைய பணிக்காகவும்,    சுவிஷேசத்திற்காகவும்,    ஏழைகளுக்காகவும் அதிகமாய் விதையுங்கள். அப்போது கர்த்தர் உங்களையும் உங்களை குடும்பங்களையும் ஆசீர்வதித்துத் தழைக்கப் பண்ணுவார். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *