எஸ்றா 4:3. அதற்குச் செருபாபேலும், யெசுவாவும், இஸ்ரவேலில் மற்றுமுள்ள தலைவரான பிதாக்களும் அவர்களை நோக்கி: எங்கள் தேவனுக்கு ஆலயத்தைக் கட்டுகிறதற்கு உங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை; பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் ராஜா எங்களுக்குக் கட்டளையிட்டபடி, நாங்களே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு அதைக் கட்டுவோம் என்றார்கள்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Re0aTm2Q4js
சபை பிறந்த நாளிலிருந்து இந்நாள் வரைக்கும் சபை கட்டுவதை சத்துரு எதிர்த்துக்கொண்டு தான் இருக்கிறான். எந்தவொரு சபைக்கடுத்த காரியங்களில் நாம் உத்தமமாக செயல்படிறோமோ, அப்பொழுதெல்லாம் எதிரிகளும் எழுப்புவார்கள் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். எப்பொழுதெல்லாம் சபை கட்டுவதில் சிக்கல்களும், எதிர்ப்புகளும் வருகிறதோ, அப்பொழுதெல்லாம் கர்த்தருடைய பிள்ளைகள் சோர்ந்து போகாமல் இன்னும் உற்சாகமாக சபை கட்டுவதில் பங்கடைய வேண்டும். சிலுவைக்கு பகைஞர்கள் இருப்பதைப்போல, ஆலயத்திற்கு அடுத்த காரியங்களிலும் நடிக்கிற ஏராளமான ஜனங்களை போல நாம் காணப்படலாகாது.
சிறையிருப்பிலிருந்து வந்த ஜனங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுகிறார்கள் என்று யூதாவுக்கும் பென்யமீனுக்கும் இருந்த சத்துருக்கள் கேள்விப்பட்டபோது(4:1), அவர்கள் செருபாபேலிடமும், யெசுவாவிடமும் வந்து தாங்களும் உதவி செய்வதைப்போல நடித்தார்கள், அதாவது அவர்கள் பாசாங்கு செய்தார்கள். இப்படி பாசாங்கு செய்கிற ஜனங்கள் இந்நாட்களில் உலகளாவிய சபைகளில் இருக்கிறார்கள். எப்படி யோவான் ஸ்நானகன் பரிசேயர்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதை நிராகரித்து, முதலாவது நீங்கள் மனம் திரும்புங்கள் என்று கூறினானோ, அதுபோல, இந்த சத்துருக்குள் கர்த்தருடைய ஆலய கட்டுமான காரியத்தில் உண்மையில்லாமல் பாசாங்கு செய்கிறார்கள், நடிக்கிறார்கள் என்பதை அறிந்த செருபாபேலும், யெசுவாவும் கர்த்தருடைய ஆலயத்தை கட்டுவதில் உங்களுக்கு பங்கில்லை; நாங்களே தேவனுடைய ஆலயத்தை கட்டிக்கொள்ளுகிறோம் என்று சொல்லிவிட்டார்கள்.
சத்துருக்கள் ஆலய கட்டுமான பணியை முடக்க தங்களுக்கு ஆலோசனைகாரர்களை வைத்துக்கொண்டார்கள்(4:5), அகாஸ்வேரு ராஜாவுக்கு தவறான மனுவை கொடுக்கிறார்கள், இதினிமித்தம் ஆலய கட்டுமான பணிகள் தடைபட்டுபோனது. இப்படி தான் சத்துரு அநேக தவறான ஆலோசனை காரர்களை சபைக்கு விரோதமாக எழுப்புவான்; தவறான அறிக்கைகளை (Report) பரப்புகிறவனாக காணப்படுவான். இருந்தாலும் கர்த்தர் இராஜரீகம் பண்ணுகிறவர், ஆகாஸ்வேரு ராஜாவை கர்த்தர் அழித்து தரியு ராஜாவை எழுப்பினார். பின்பு சபை கட்டுமான பனி துவங்கியது.
உலகளாவிய நாடுகளில் சபைக்கு விரோதமாக செயல்படுகிற தலைவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுடைய இராஜ்யத்தை கர்த்தர் மட்டிட்டு, புதிய இராஜ்ஜியத்தை எழுப்ப கர்த்தர் வல்லமையுள்ளவர். கர்த்தர் இராஜாக்களை தள்ளி ராஜாக்களை ஏற்படுத்துகிறவர். ராஜாக்களின் இருதயத்தை நீர்க்கால்களை போல திருப்புகிறவர். சபையை பாதாளம் ஒருநாளும் ஜெயிக்க முடியாது. சபையை பாதிக்க முயற்சித்தாலும், அவன் மீண்டும் மீண்டும் தோற்றுப்போவான். சபை ஒவ்வொருநாளும் வளர்ந்துகொண்டே தான் இருக்கும். கர்த்தருடைய வருகை வரைக்கும் இராஜ்ஜியங்கள் மாறினாலும், தலைவர்கள் மாறினாலும், அரசியல் சூழ்நிலைகள் மாறினாலும், உலகளாவிய பொருளாதாரம் மாறினாலும், சபை வளர்ந்து கொண்டே தான் இருக்கும். சபை ஜெயிக்கும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org