எஸ்றா 7:6. இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான்; அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததினால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/hrh1NVUGhYg
எஸ்றா 6வது அதிகாரத்திற்கும், 7வது அதிகாரத்திற்கும் சுமார் 60 வருடங்கள் இடைவெளி காணப்படுகிறது. இந்த இரண்டு அதிகாரங்களுக்கு இடைவெளியில் வந்தது தான் எஸ்தரின் சரித்திரம். 7வது அதிகாரத்தில், செருபாபேலுக்கு பிறகு எஸ்றாவை கர்த்தர் எழுப்புகிறார். கர்த்தர் எப்பொழுதும் ஒரு தேவமனிதனுடைய வாழ்க்கைக்கு பிறகு, மற்றொரு தேவ மனிதனை எழுப்புவார்.
அர்தசஷ்டா ராஜா, எஸ்றா கேட்டவைகளெல்லாம் கொடுத்தான். அதுபோல பரலோக ராஜாவாகிய இயேசு, நீங்கள் கேட்பவைகளையெல்லாம் கொடுப்பார். நீங்கள் கேட்பவைகளையெல்லாம் அவர் கொடுக்க வேண்டுமென்றால், கர்த்தருடைய கரம் உங்கள் மீது இருக்க வேண்டும். உங்கள் மீது இப்பொழுது கர்த்தருடைய கரம் இருக்கிறதா என்று கேட்டால், அதற்கான பதில், நிச்சயமாகவே உங்கள் மீது கர்த்தருடைய கரம் இருக்கிறது என்பதே. ஒரு சிறு பிள்ளை தன்னுடைய தகப்பனுக்கு முன்பாக வந்து நின்றால், தகப்பன் அந்த சிறு பிள்ளையின் மேல் தன்னுடைய கரத்தை வைக்காமல் இருப்பாரோ? இயேசு, சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருவதற்கு இடங்கொடுங்கள், அவர்களை தடை செய்யாதிருங்கள் என்று சொல்லி அவர்கள் மேல் கைகளை வைத்து ஆசீர்வதித்தார். வேதாகமத்தில் அப்போஸ்தலர்கள் பிறரை சகோதரரே என்று அழைத்தார்கள், பிரியமானவர்களே என்று அழைத்தார்கள், எஜமான்களே வேலைக்காரர்களே என்றெல்லாம் அழைத்தார்கள். அதுபோல யோவான், பிறரை பிள்ளைகளே என்று அழைத்தார். இயேசுவும் தன்னுடைய சீஷர்களை பிள்ளைகளே (யோவா 13:33) என்று அழைத்தார். சீஷர்கள் வயதில் பிள்ளைகளா? இல்லவே இல்லை. எல்லாரும் பெரியவர்கள். இருந்தாலும், ஆண்டவர் எல்லாரையும் பிள்ளைகள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கிறவர். ஆகையால் பிள்ளைகளாகிய உங்கள் மேல் கர்த்தருடைய கரம் இருக்கிறது என்பதில் சிறிதளவும் அவிசுவாசம் வேண்டாம்.
தாவீது தன்னுடைய கடைசி நாட்களில் தன்னுடைய குமாரனுக்கு ஒரு காரியத்தை சொல்லி கொடுத்தான். நம் ஆண்டவர் எவரையும் மேன்மைப்படுத்தவும், பலப்படுத்தவும் அவருடைய கரத்தினால் ஆகும் என்பதாக. ஆகையால் எப்பொழுதும் கர்த்தருடைய கரம் உங்கள் மேல் இருக்க வாஞ்சியுங்கள். அவருடைய கரம் உங்கள் மேல் இருக்கும்போது அவரிடம் நீங்கள் கேட்டவைகளெல்லாம் உங்களுக்கு கொடுப்பார். அப்படியென்றால், கர்த்தர் எனக்கு பத்து கோடி பணம் கொடுப்பாரா? எனக்கு சொகுசு வாகனம், சொகுசு பங்களா கொடுப்பாரா? என்ற கேள்விகள் எழக்கூடும். ஆண்டவர் சொன்னார் நீங்கள் கொஞ்சத்தில் உண்மையுள்ளவர்களாக இருந்தால், அநேகத்தின் மீது அதிகாரியாக வைப்பேன் என்பதாக. கர்த்தர் உங்களுக்கு கொடுக்கும் நேரத்திலும், சம்பளத்திலும் உண்மையுள்ளவர்களாக, அவருக்கு கொடுக்க வேண்டியவற்றை உற்சாகமாக கொடுப்பீர்களென்றால், அவருடைய சித்தத்தின்படி உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார். சாலொமோனுக்கு ஆண்டவர் கேட்டதையும், கேளாததையும் கொடுத்தார். ஆனால் சாலொமோன் கர்த்தர் கொடுத்த ஆசீர்வாதத்தை சரியாக பயன்படுத்தவில்லை. உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே தான் உங்கள் மனதும் இருக்கும் என்று ஆண்டவர் கூறினார். பணத்திற்கு முன்பாக இயேசுவை நீங்கள் வைப்பீர்களென்றால், கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பார். யாபேஸ் துக்கத்தின் மகன் என்றழைக்கப்பட்டாலும், அவன் கர்த்தருடைய கரம் அவனோடிருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். அப்பொழுது அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார் (1 நாளா 4:9,10). கர்த்தருடைய கரம் உங்கள் மேல் இருக்கும்போது, அவருடைய சித்தத்தின்படியும், பிதாவாகிய தேவன் மகிமைப்படும்படியாகவும், உங்களை ஆசீர்வதித்து, நீங்கள் கேட்டவைகளையெல்லாம் கர்த்தர் கொடுப்பார். கர்த்தருடைய கரம் உங்கள் மேல் இருக்கிறது.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org