பக்குவப்பட்ட இருதயம் (Prepared heart).

எஸ்றா 7:10. கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/s0vYj3Bdl5U

சிறுவயதுள்ளவர்களை பார்த்து இவன் இன்னும் பக்குவப்படாதவன் என்று சொல்லுவோம். பணியில் திறம்பட வேலை செய்யவில்லையென்றால், வேலையில் இவனுக்கு பக்குவமில்லை என்று சொல்லுவோம். ஆனால், கர்த்தருடைய பார்வையில் நாம் எந்த வயதில் இருந்தாலும், நம்முடைய இருதயம் பக்குவப்பட்டதாய் இருக்க வேண்டுமென்றால் மூன்று காரியங்களில் நாம் தேறியிருக்க வேண்டும்.

முதலாவது, வேதத்தை ஆராய்ந்து படிக்கிறவர்களாய் காணப்பட வேண்டும். வேதாகமத்தில் மிகப்பெரிய புஸ்தகமாகிய சங்கீத புஸ்தகத்தின், முதல் அதிகாரத்திலேயே அவருடைய வசனத்தை தியானம் செய்ய வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது. வசனம் என்ன சொல்லுகிறது என்பதை அறிந்தால் போதாது, அதன் பொருள் என்ன என்பதை ஆராய்கிறவர்களாய் நாம் காணப்பட வேண்டும். நாள் முழுவதும் சாப்பிட்டுக்கொண்டோ, விளையாடிக்கொண்டோ இருக்க முடியாது, ஆனால், கர்த்தருடைய வேதத்தை இரவும் பகலும் தியானிக்க முடியும். அவருடைய வேதம் நம்முடைய கால்களுக்கு தீபமாய் இருக்கிறது. நாம் வேதத்தை வெறுமனே வாசிக்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதை தியானிக்கிறவர்களாய் காணப்பட வேண்டும். இது கணினி உலகம், எல்லாம் துரிதமாக கிடைக்க கூடிய நாட்களில் இருக்கிறோம் என்று சொல்லி, வேதாகமத்தை தியானிப்பதில் அவசரப்பட கூடாது. வேதாகமத்தை படிக்க ஆராய்ச்சி நூல்கள் , பிற மொழியாக்கங்கள், வேதமாக அகராதிகள், ஆராய்ச்சி வேதங்கள், வேதாகம சொல்லகராதிகள், வேதாகம வியாக்கியனங்கள் போன்றவற்றை உதவியாக பயன்படுத்துவது நம்முடைய வேதாகம ஆராய்ச்சிக்கு பயனுள்ளதாய் இருக்கும். D L மூடி சொன்னார், பைபிள் இல்லாத நாள் பாழான நாள் என்பதாக.

இரண்டாவது, வேதாகமத்தில் எழுதியிருக்கிறவைகளின்படி செய்ய வேண்டும். ஒரு ஊழியக்காரர் சொன்னார், கிறிஸ்தவர்களாகிய நமக்கு தேவையானது கூடுதல் வெளிப்பாடல்ல, கூடுதல் கீழ்ப்படிதல் என்பதாக. இயேசு எல்லாவற்றிலேயும் பிதாவுக்கு கீழ்ப்படிந்திருந்தார். அதுபோல நாம், அவருடைய சித்தத்தின் படி செய்ய மனதுள்ளவர்களாய் (யோவா 7:17) நாம் காணப்பட வேண்டும். இலவசமாக அறிவுரை சொல்லுபவர்கள், செயலில் வலிமை குன்றியவர்களாக காணப்படுவார்கள். ஆகையால் முதலாவது, நாம் கர்த்தருடைய வார்த்தையின்படி செய்து, பின்பு, பிறருக்கு ஆலோசனைகளையும், அறிவுரையும் வழங்குவது, கேட்கிறவர்களுக்கும் ஆசீர்வாதமாக இருக்கும்.

மூன்றாவது, கர்த்தருடைய வார்த்தைகளை பிறருக்கு உபதேசிக்க வேண்டும். இந்த இராஜ்யத்தின் சுவிசேஷம் பூலோகத்திலிருக்கும் அனைவருக்கும் சாட்சியாக அறிவிக்கப்பட வேண்டும். இது நம் மேல் விழுந்த கடமை என்பதை அறிந்து மற்றவர்களுக்கு சுவிசேஷத்தை போதிக்க வேண்டும். நீங்கள் வேதாகமத்தில் கற்பவைகளை பிறருடன் பகிர்ந்துகொள்ளுங்கள். கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடுங்கள் (கொலோ 3:16) என்று வசனம் கூறுகிறது. பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதும்போது, அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி (2 தீமோ 2:2) என்று மற்றவர்களுக்கு போதிக்கும்படி சொல்லிக்கொடுப்பதை பார்க்கிறோம்.

இந்த மூன்று காரியங்களையும் வரிசை மாறாமல் கடைபிடிக்கிறவர்கள் எவர்களோ அவர்களே பக்குவப்பட்ட இருதயத்தை உடையவர்கள். இப்படிப்பட்ட பக்குவம் நம்முடைய இருதயத்தில் வருவதற்கு, கர்த்தர் ஒவ்வொருவருக்கும் உதவி செய்வார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *