அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வாரன் (யோவான் 14:6).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/4eR4Q6HDJ7s
பூமியில் பல வழிகள், மார்க்கங்கள் காணப்படுகிறது. ஒவ்வொருவரும் எங்களது வழி தான் சரி என்றும் சொல்லுகிறார்கள். இயேசு கூறினார், நானே வழி என்பதாக. பரலோகத்திற்குச் செல்லும் ஒரே வழி இயேசுவாய் காணப்படுகிறார். அவராலேயன்றி ஒருவனும் பிதாவினிடத்தில் கடந்து செல்லமுடியாது. பல வழிகளோடு இயேசுவும் ஒரு வழியல்ல, இயேசுவே ஒரே வழியாய் காணப்படுகிறார். அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை, நாம் இரட்சிக்கப்படும் படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை. உலகம் முழுவதும் ஜனங்கள் இரட்சிப்படைவதற்கு பல வழிகளை தேடிப் பின்பற்றுகிறார்கள். ஆனால் இயேசுவாலேயன்றி நாம் இரட்சிக்கப்படுவதற்கு வேறொரு வழியே இல்லை. நீங்கள் இரட்சிப்பின் வழியை கண்டு கொண்டீர்களா? இல்லையெனில் இயேசுவண்டை இன்றே வந்துவிடுங்கள். இயேசு சீஷர்களை அழைக்கும் போது என்னைப் பின்பற்றி வாருங்கள் என்று அழைத்தார். உலகத்தில் பின்பற்றிச் செல்லக்கூடிய மாதிரியின் வாழ்க்கையை இயேசு மட்டுமே வைத்துச் சென்றார். அவர் ஒருவரே எல்லாவிதங்களிலும் நமக்கு முன்மாதிரியாய் காணப்படுகிறார். என்னில் பாவம் உண்டு என்று யார்தான் கூறமுடியும் என்று சவால் விட்டார். இந்தப் பூமியில் பிறந்து, வாழ்ந்தவர்களில் இயேசுவைத் தவிர ஒருவராலும் இந்த அறிக்கையைச் செய்ய முடியாது.
கர்த்தருடைய பிள்ளைகளே, புறஜாதிகளுடைய வழிகளைக் கற்றுக் கொள்ளாதிருங்கள், உலகம் காட்டுகிற வழியைப் பின்பற்றாதிருங்கள். காயீனுடைய வழியைக் கற்றுக்கொள்ளாதிருங்கள், அவனுடைய கிரியைகள் பொல்லாதது, ஆகையால் நீதியுள்ள தன் சகோதரனைக் கொலை செய்தான். அவனுடைய வழியைப் பின்பற்றினால் உங்கள் கிரியைகளும் பொல்லாததாய் போய்விடும். பிலேயாமின் இடறுதலின் வழியைப் பின்பற்றிவிடாதிருங்கள். நீங்களும் மற்றவர்களுக்கு இடறுதலாய் காணப்படுவீர்கள். மார்க்கம் தப்பி நடக்கிற நட்சத்திரங்களைப் போல, இயேசுவாகிய உத்தம மார்க்கத்தை விட்டு அலைந்து திரியாதிருங்கள்.
இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள், கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது, அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது, அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர் என்று வேதம் கூறுகிறது. இயேசுவே ஜீவனின் வழி, அந்த வழியாய் உட்பிரவேசித்து நித்திய ஜீவனைச் சுதந்தரிக்கிறவர்களாய் காணப்படுங்கள். அது இடுக்கமும் நெருக்கமுமான வழி தான். உலகத்தானைப் போல மனம் போகிற போக்கில் நாம் வாழமுடியாது. கண்களின் இச்சைகளிலும், மேட்டிமைகளிலும், சிற்றின்பங்களிலும் நாம் மூழ்கிக் காணப்பட முடியாது. இப்படித்தான் ஜீவிக்க வேண்டும் என்று வேதம் கற்றுத்தருகிற வழியில் மட்டும் தான் வாழமுடியும். ஆனால் அதில் பழகும் போது இயேசுவின் பிரசன்னத்தை நம் வாழ்வில் உணர்ந்து, நித்திய ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பூமிக்குரிய ஓட்டம் ஒரு நாள் நிற்கும் போது, மறுமையில் இயேசுவோடு நித்திய நித்தியமாய் வாழ்கிற பாக்கியத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae