மத் 26:31. அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/cTmLuow8pEE
மேய்ப்பனை வெட்டு, அப்பொழுது ஆடுகள் சிதறிப்போகும்; ஆனாலும் என் கரத்தைச் சிறுவர்மேல் திரும்ப வைப்பேன் (சக 13:7) என்று சகரியா தீர்க்கதரிசி மூலம் சொன்ன வார்த்தை மத் 26:31ல் நிறுவேறுகிறதாய் காணப்படுகிறது. சத்துரு எப்பொழுதும் மேய்ப்பனை சேதப்படுத்த, பல்வேறு வகையில் முயற்சி செய்கிறவனாய் காணப்படுகிறான். ஒரு மரத்தை வெட்டவேண்டும் என்றால் யாரும் முதலாவது இலைகளை பறிப்பதும் இல்லை, கிளைகளை வெட்டுவதும் இல்லை. மாறாக கோடரியை வேரின் மேல் வைத்து மரத்தை வெட்டுகிறவர்களாக காணப்படுவார்கள். அதுபோல தான் இந்நாட்களில் சத்துரு சபையிலிருக்கும் ஆடுகளை வெட்டுவதை பார்க்கிலும் சபையின் மேய்ப்பனை வெட்டுவதற்கு அதிகமாக செயல்படுகிறான். ஆகையால் ஆடுகளாகிய சபை மக்கள் ஒருவரும் ஒருபோதும் சபையை நடத்துகிற மூப்பர்களுக்கு, மேய்ப்பர்களுக்கு விரோதமாக செயல்படுகிறவர்களாகவும், அவர்களை பார்த்து பொறாமை கொள்ளுகிறவர்களாகவும் இருக்கலாகாது.
மேய்ப்பனாக இருக்கும்படி தெரிந்துகொள்ளப்பட்ட ஒவ்வொருவரையும் ஆண்டவரே பல நேரங்களில் கட்டாயப்படுத்தி அழைக்கிறார். மோசே நான் வாக்குவல்லவன் அல்ல; நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன் என்றும், நீர் வேறே யாரையாவது அனுப்பும் என்று கூறும்போது, கர்த்தர் அவன் மேல் கோபமூண்டவராய் அவருடைய ஊழியத்திற்கு அழைப்பார்(யாத் 4 :10-14). ஆரோனை போல கனமான ஊழியத்திற்கு தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் அனைவரும் பல்வேறு சோதனைகளிலும், கஷ்டத்திலும் செல்லுகிறார்கள் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். எரேமியாவை ஆண்டவர் அழைக்கும்போது, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன் என்பதாக சொல்லுவான். அதற்கு கர்த்தர் சொல்லுவார் நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக (எரே 1:7) என்பதாக. மேய்ப்பர்களுக்கு பல்வேறு பொறுப்புகளும், அழுத்தங்களும், உண்டு என்பதை அறிந்து கர்த்தருக்காக உத்தமமாக ஓடுகிற மேய்ப்பர்களை தாங்குகிற நல்ல ஆடுகளாய் சபை மக்கள் காணப்பட வேண்டும். எலியா சொல்லுவான் போதும் ஆண்டவரே என் உயிரை எடுத்துக்கொள்ளும் (1 இராஜ 19:4) என்பதாக. இயேசுவுக்கு தலை சாய்க்க இடமில்லாமல் இருந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் பல்வேறு மேய்ப்பர்கள் காணப்படுகிறார்கள்.
மேய்ப்பர்கள் ஆடுகளுக்காக அதாவது சபை ஜனங்களுக்காக போதுமான அளவிற்கும் அதிகமாகவே ஜெபித்துவிட்டார்கள். இந்த நிலை மாறி சபை மக்கள் ஊழியர்களுக்காக, சபையின் தலைமை பணியில் இருப்பவர்களுக்காக ஜெபிக்கிறவர்களாய் ஜனங்கள் எழும்ப வேண்டும். மிக பெரிய அப்போஸ்தலன் பவுல் தனக்காக ஜெபிக்கும்படி சபை ஜனங்களை கேட்டுக்கொண்டான். அதுபோல மேய்ப்பர்களுக்காக ஆடுகள் ஜெபிக்க வேண்டிய நாளாய் இந்நாட்கள் காணப்படுகிறது.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org