வா (Come).

வெளி 22:17 ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/YAVB4L3cZMU

ஆண்டவர் விடுக்கிற பிரதான அழைப்பு என்னவென்றால், நீங்கள் என்னிடத்தில் வாருங்கள் என்பதாய் காணப்படுகிறது. இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்ட இரண்டு முக்கியமான வார்த்தைகள், தாகமுள்ளவர்கள் மற்றும் விருப்பமுள்ளவர்கள். ஒரு வனாந்திரத்தில், அதிகமான வெப்பத்தில், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தண்ணீர் கிடையாமல் இருக்கும் ஒரு மனிதன், எவ்வளவாய் தாகமாய் இருப்பான் என்று யோசித்துப்பாருங்கள். அப்படிப்பட்ட தாகமுள்ளவர்கள் இந்நாட்களில் எழும்ப வேண்டும். தேவனுடைய சந்நிதானத்தில் நிற்பதற்கும், வேதத்தை கரங்களில் ஏந்தி தியானிப்பதற்கும் வருகிற தாகம் நமக்கு அதிகமாய் காணப்பட வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். இன்றைக்கு நாம் ஆண்டவரிடம் கேட்கவேண்டிய காரியம், ஆண்டவரே, தாகமுள்ளவர்களும் விருப்பமுள்ளவர்களும் சபை கூட்டங்களில் அதிகரிக்க வேண்டும் என்று விண்ணப்பம் செய்கிறவர்களாய் காணப்பட வேண்டும்.

தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன் (ஏசா 44:3) என்பது கர்த்தருடைய வாக்குத்தத்தமாய் காணப்படுகிறது. என்னுடைய வாழ்க்கை வறண்ட நிலம் போல காணப்படுகிறது, என்னை செழிக்க செய்யும் என்று ஆண்டவரிடம் தாகத்தோடு கதறுவீர்களென்றால், உங்கள் வாழ்க்கையில் உங்களையும் உங்கள் சந்ததியையும் ஆசீர்வதிக்க கர்த்தர் போதுமானவராய் காணப்படுகிறார்.

எருசலேமில் எட்டு நாள் கூடார பண்டிகை நடந்துகொண்டிருந்தது. அங்கே வந்தவர்களின் கூட்டம் ஏராளமாய் காணப்பட்டது. வந்த ஜனங்களிடம் கொண்டாட்டங்களுக்கும், சடங்காச்சாரங்களுக்கும் பற்றாக்குறையில்லை. இன்றைக்கு சபைக்கு வருகிற ஜனங்கள் அநேகரிடம் இருக்கிற சுபாவம் என்னவென்றால், கடமைக்கென்று வரவேண்டும், சபை மக்களிடம் பொழுதுபோக்கிறகாக வெளியே செல்ல வேண்டும் என்றே காணப்படுகிறது. பண்டிகையில் வந்தவர்களுக்கு ஆவிக்குரிய போஜனமும், மகிழ்ச்சியும் கிடைக்கவில்லை. இதை நன்கு உணர்ந்த இயேசு பண்டிகையின் பிரதானமான நாளில் சத்தமிட்டு கூறிய வார்த்தை என்னவென்றால், ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்(யோவா 7:37) என்று கூறினார். இயேசுவின் இந்த சத்தம் இந்நாட்களில் ஒலித்துக்கொண்டே தான் காணப்படுகிறது. இன்றைக்கு சபைக்கு ஆயிரம் பேர் வரலாம், ஐநூறு பேர் வரலாம், நூறு பேர் வரலாம். வருகிற எத்தனை பேருக்கு தாகமும் விருப்பமும் காணப்படுகிறது? ஆயிரம் பேர் வருகிற சபையென்றால், அதில் நூறு பேர் தான் தாகமுள்ளவர்களாகவும், விருப்பமுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள் என்ற நிலை மாறி, வந்தவர்கள் எல்லாரும் தாகமுள்ளவர்களாகவும், விருப்பமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற ஜெபமே நம்முடைய ஜெபமாக மாற வேண்டும். நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் தான் பாக்கியவாகள். நீ என்னிடத்தில் வா என்கிற ஆண்டவருடைய அழைப்பில் பங்குகொள்ள, திரளான தாகமுள்ள ஜனங்களையும், விருப்பமுள்ள ஜனங்களையும் கர்த்தர் தாமே இந்நாட்களில் எழுப்புவாராக.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *