நீதிமானாகிய லோத்து (Righteous Lot):-

2 பேது 2: 8,9. நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க; கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/EqZctAwrknU

விசுவாசத்தினால் ஆபிரகாம் நீதிமானாக்கப்பட்டான். சவுல் தாவீதை பார்த்து சொல்லுவான், நீ என்னைப்பார்க்கிலும் நீதிமான்; நீ எனக்கு நன்மை செய்தாய்; நானோ உனக்கு தீமைசெய்தேன். யோபு சொல்லுவான் நான் நீதிமான் என்பதாக. அதுபோல சோதோம் கொமோரா பட்டணத்தில் வாழ்ந்த லோத்து நீதிமான் என்று அழைக்கப்பட்டான். எப்படி பாவம் நிறைந்த பட்டணத்தில் வாழ்ந்த அவன் நீதிமான் என்று அழைக்கப்பட்டான்?

லோத்து சோதோம் கொமோரா பட்டணத்தை தன் வாழ்வில் தெரிந்தெடுத்து தவறான முடிவு. இப்படித்தான் பல சமயங்களில் நாம் தவறான முடிவை எடுத்து தேவன் அழைக்காத, அவர் விருப்பப்படாத இடத்திற்கு கடந்து சொல்லுகிறோம். ஆபிரகாம் திறப்பிலே நின்று லோத்திற்காக ஜெபித்தான். பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டால் அந்த தேசத்தை அழிப்பீரோ என்றான். அதற்கு அவர்: பத்து நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார். ஆனால் வருத்தம் என்னவென்றால் அந்த பட்டணத்தில் பத்து நீதிமான்கள் கூட காணவில்லை. இருந்தாலும் பத்துக்கும் குறைவாக காணப்பட்ட லோத்தின் குடும்பத்தை, ஆபிரகாமின் கெஞ்சுதலினிமித்தமும், லோத்தின் மனம் திரும்புதலினிமித்தமும், கர்த்தர் லோத்தை நீதிமானாக கண்டார். இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்து என்று அவனை குறித்து எழுதப்பட்டிருக்கிறது.

லோத்தை போல நம்முடைய தப்பிதங்களுக்காக இருதயத்தில் வாதிக்கப்பட்டு, பாவத்தை அறிக்கை செய்வோமென்றால், லோத்தை நீதிமானாக அழைத்த தேவன் நம்மையும் நீதிமானாக மாற்றுவார். இந்த உலகத்தில் வழக்கறிஞர்களாக படித்தவர்கள் அநேகர் இருக்கலாம். அதன்பின்பு அவர்கள் உயர் பதவியை அடைந்து நீதிபதி என்ற ஸ்தானத்தில் நீதிமன்றத்தில் பணிபுரியலாம். உலகத்திலிருக்கும் எவ்வளவு பெரிய நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றினாலும், குற்றவாளிகளை நீதிமான் என்று தீர்ப்பு செய்வதை காட்டிலும், நீதிபதிகளாக இருக்கும் அவர்களே, தங்கள் தாங்களாகவே நீதிமானாக்கிக்கொள்ள முடியாது. ஆண்டவருடைய பார்வையில் பாவத்திலிருப்பவர்கள் நீதிமானாக்கப்பட வேண்டுமென்றால், லோத்தை போல இருதயத்தில் வாதிக்கப்பட்டு மனம் திரும்ப வேண்டும். அப்பொழுது பரலோக நீதிபதி நம்மை நீதிமானாக மாற்றுவார்.

ரோமர் 5:9ல் வசனம் கூறுகிறது, இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே என்பதாக. இப்படி இயேசுவின் இரத்தம் நம்மை நீதிமானாக்கும். லோத்தை நீதிமானாக கண்டவர் உங்களையும் நீதிமானாக மாற்றுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *