விழுகிறவர்களை நிற்க்கப்பண்ணுங்கள் (Help who is stumbling to stand)

யோபு 4:4. விழுகிறவனை உம்முடைய வார்த்தைகளால் நிற்கப்பண்ணி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தினீர்.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/CxEUycM_5Po

ஒரு அலுவலகத்தில் பணிபுரிந்த உயர் அதிகாரி மற்றவர்களை குறை கூறி மேலே வருவதையே தன்னுடைய குறிக்கோளாக கொண்டார். அவருடைய சுபாவமே மற்றவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்தி, மற்றவர்களை மட்டம் தட்டுவது தான் தன்னுடைய குறிக்கோளாக கொண்டார். யார் பேசுவதையும் அவர் கேட்கமாட்டார். தன்னுடைய சொந்த அறிவே மேலானது என்று நினைப்பார். யாரவது நல்ல புதுமையான யோசனையை கூறினால், அவர்களை மட்டம் தட்டிவிடுவார். இதனால் அவருடன் வேலை செய்த அனைவரும் மனச்சோர்வடைந்தனர்.

அதுபோல, ஒரு விசுவாசியின் வீட்டுக்கு அருகாமையில் வசிக்கும் நபர், அந்த விசுவாசி பாடுவதையோ, ஜெபிப்பதையோ பார்த்து ஏளனம் செய்துகொண்டே இருப்பார். தன்னுடைய வாயின் வார்த்தையால் அவர்களை இகழுவார். அந்த விசுவாசியும் அமைதியாக இருந்து பதிலுக்கு எதுவும் பேசாமல் தன்னுடைய பொறுமையை காத்துக்கொண்டார்கள். உனக்கு ஆசீர்வாதம் வேண்டும் என்று தானே உன் கடவுளை கூப்பிடுகிறாய், உனக்கு ஆசீர்வாதம் வர நான் உனக்கு ஒரு யோசனை கொடுக்கிறேன் என்று சொல்லி, தன்னுடைய கரங்களில் இருக்கும் ஒரு கழுதை படத்தை காண்பித்து, என்னை பார் உனக்கு யோகம் வரும் என்று எழுதியிருக்கிறது. ஆகையால் நீ ஆண்டவரை பார்ப்பதை விட்டு, இந்த கழுதையை பார் என்று கிண்டல் அடித்தார். இவைகளெல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த அந்த விசுவாசி பொறுமையாக, தானியேல் மூன்று வேலை ஜெபித்ததுபோல, அவர்களும் ஜெபித்து வந்தார்கள்.

இப்படித்தான், உலகத்திலிருக்கும் ஜனங்கள் அநேக வேலைகளில் மற்றவர்களை இடித்து தள்ளுகிற வார்த்தைகளையே பேசுவார்கள். சிலருக்கு கபடுசெய்யும் நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது (சங் 52:2). ஆனால் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம், எப்பொழுதும் மற்றவர்களை பார்த்து இடித்து தள்ளுகிற வார்த்தையை பேசாமல், ஊன்ற கட்டுகிற வார்த்தைகளை பேசவேண்டும். யாரையும் பழித்துப்பேசக்கூடாது. யோபுவின் மூன்று நண்பர்கள் பேசியவைகள் சரியில்லாதவைகளென்றும், அவர்கள் கர்த்தரை குறித்து நிதானமாய் பேசவில்லை என்றும் கர்த்தரே கூறினார். ஆனால் அவர்கள் யோபுவை குறித்து பேசிய அநேக வார்த்தைகள், யோபுவை குற்றப்படுத்துகிறதாகவே காணப்பட்டது. ஆகையால் யோபுவின் உள்ளம் மனமடிந்து சோர்வுக்குள்ளானது. இருந்தாலும், எலிப்பாஸ் என்னும் ஒரு நண்பன், யோபுவை குறித்து சொல்லுகிறான், யோபுவின் வார்த்தைகள் விழுகிறவனை நிர்க்கப்பண்ணியது என்றும், தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தினது என்றும் சொல்லுகிறான். நாமும் யோபுவை போல விழுந்துகிடக்கிற நம்முடைய சகோதர சகோதரிகளை வார்த்தையால் இடித்து அவர்களை கலங்கப்பண்ணாமல், அவர்களை எழுந்து நிர்க்கப்பண்ணுகிற வார்த்தைகளை பேச வேண்டும். எப்பொழுதும் கிருபை நிறைந்த வார்த்தைகள் நம்முடைய நாவிலிருந்து வர வேண்டும். நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது (நீதி 10:20). ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடரின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்(நீதி 15:2). ஆரோக்கியமுள்ள நாவு ஜீவவிருட்சம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும் (நீதி 15:4) என்று ஞானி கூறுகிறார். விழுந்துகிடக்கிற மற்றவர்களை ஊன்ற நிற்கச்செய்வதே நம்மை குறித்து கர்த்தருடைய நோக்கம் என்பதையும் தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். சபையில் மற்றவர்களை பற்றி புறணி பேசி திரியாமல், எல்லாரையும் தூக்கி நிறுத்துகிற வார்த்தைகளை பேசுவோம். அப்பொழுது உங்களை பழித்து பேசுகிற மற்றவர்களிடம் கர்த்தர் உங்களுக்காக வழக்காடுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *