விசுவாசமும், அற்பவிசுவாசமும் (Faith and Little Faith)

எபி 11:31. விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடேகூடச் சேதமாகாதிருந்தாள்.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/pXDeEqGXkLY

ராகாப் என்பவள் எபிரேயர் நிருபத்தை எழுதுவதற்கு சுமார் 2000 வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்தவள். இரண்டாயிரம் வருடங்களுக்கு பிறகும் அவள் வேசி என்று அழைக்கப்பட்டாள், காரணம் அவளுடைய பாவம் மிகவும் கொடியதாய் இருந்தது. அவளுடைய பாவம் சிவப்பு கயிறை போல இரத்தாம்பர சிவப்பாய் காணப்பட்டது. அப்படியிருந்த ராகாப் இரட்சிக்கப்பட்டாள். எப்படி இரட்சிக்கப்பட்டாள் என்றால், அவள் விசுவாசத்தினாலே இரட்சிக்கப்பட்டு, விசுவாச வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றாள். இப்படிப்பட்ட விசுவாசம் உங்கள் ஒவ்வொருவருக்கும் காணப்படவேண்டும்.

மத்தேயு சுவிசேஷத்தில் மாத்திரம் இயேசு தன்னுடைய சீஷர்களுக்கு விசுவாச குறைச்சல் இருப்பதை கண்டு சுமார் நான்கு இடங்களில் அவர்களை கடிந்துகொண்டார். சீஷர்கள் ஒருமுறை கவலைப்பட்டு கொண்டிருப்பதை பார்த்த இயேசு, அவர்களை பார்த்து சொன்னார், அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? (மத் 6:30) என்பதாக. ஆகையால் உங்களுக்கு இருக்கும் கவலை, உங்கள் விசுவாசத்திற்கு எதிரானது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

அதுபோல, இயேசுவோடு படவில் பயணம் செய்த சீஷர்கள் காற்றையும், கடலையும் பார்த்து பயந்தார்கள். அப்பொழுது இயேசு சொன்னார், அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே, மிகுந்த அமைதலுண்டாயிற்று(மத் 8:26). ஆகையால் உங்களுக்குள் இருக்கும் எவ்வகையான பயமும், உங்கள் விசுவாசத்திற்கு எதிரானது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

ஒருமுறை பேதுரு, இயேசுவைபோல கடலில் நடக்க வேண்டும் என்று முயற்சித்தான். சூழ்நிலைகளை பார்த்த பேதுரு திடீரென்று கடலில் மூழ்க ஆரம்பித்தான். அப்பொழுது இயேசு, உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார் (மத் 14:31). ஆகையால் உங்களுக்குள் இருக்கும் சந்தேகம், விசுவாசத்திற்கு எதிரானது என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

ஒருமுறை சீஷர்கள் அப்பங்களை கொண்டு வர மறந்து, வீணான காரியத்தை குறித்து யோசித்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது இயேசு சொன்னார், அற்பவிசுவாசிகளே, அப்பங்களைக் கொண்டுவராததைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனைபண்ணுகிறதென்ன?(மத் 16:8) என்பதாக. ஆகையால் வீண் சிந்தைகள், விசுவாசத்திற்கு எதிரானது என்பதையும் தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

இப்படி கவலை, பயம், சந்தேகம், வீண் சிந்தையுள்ளவர்களாக இராமல், ராகாபை போல, ஆபிரகாமை போல, நம்முடைய பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் போல, ஆதி அப்போஸ்தலர்களை போல விசுவாமுள்ளவர்களாய் இருங்கள். விசுவாசமுள்ளவர்கள் விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள், அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன்கொண்டார்கள், யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள். விசுவாச வீரர்களின் பட்டியலின் தொடர்ச்சி இன்றும் கர்த்தருடைய புத்தகத்தில் எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது. உங்கள் பெயரும் விசுவாச வீரர்களின் பட்டியலில் எழுதப்படட்டும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *