நடனம் (Dance)

சங் 149:3. அவருடைய நாமத்தை நடனத்தோடே துதித்து, தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணக்கடவர்கள்.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/UL1yRn3wCmI

வேதாகமத்தில் அநேக இடங்களில் தேவ ஜனங்கள் நடனத்தோடு கர்த்தரை துதித்ததையும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதையும் நாம் பார்க்கமுடிகிறது. அவருடைய நாமத்தை நடனத்தோடே துதித்து, தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணக்கடவர்கள் என்று சங் 150:4 கூறுகிறது. அதேவேளையில் நடனத்தோடு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது சபைக்கு வெளியே என்பதையும் கர்த்தருடைய ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

பார்வோனின் சேனையையும், குதிரையையும், குதிரை வீரர்களையும் கர்த்தர் சமுத்திரத்தில் மூழ்கடித்தார். அப்பொழுது மிரியாம் தம்புரை எடுத்துக்கொண்டாள்; சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள் (யாத் 15:20). இஸ்ரவேலை நிந்தித்த பெலிஸ்தியனை தாவீது கொன்று, திரும்பி வருகையில், ஸ்திரீகள் இஸ்ரவேலின் சகல பட்டணங்களிலுமிருந்து, ஆடல் பாடலுடன் புறப்பட்டு, மேளங்களோடும் கீதவாத்தியங்களோடும் சந்தோஷமாய் ராஜாவாகிய சவுலுக்கு எதிர்கொண்டு வந்தார்கள் (1 சாமு 18:6). தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்துக்கு மகிழ்ச்சியுடனே கொண்டுவந்தான். அப்பொழுது தாவீது தன் முழுப் பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம்பண்ணினான் (2 சாமு 6:14). புலம்ப ஒரு காலமுண்டு; நடனம் பண்ண ஒரு காலமுண்டு என்று ஞானி கூறுகிறார். புதிய ஏற்பாட்டில், காணாமற்போன இளையகுமாரன் மனம்திரும்பி தன் தகப்பனிடம் வந்தான். வயலில் வேலை செய்து வீட்டிற்கு திரும்பி வந்த மூத்தகுமாரன் கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டான் (லுக் 15:25) என்று வசனம் கூறுகிறது.

இப்படி நடனம் ஆடி தேவனை துதிக்கும்போதும், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்போதும், யாருக்கும் இடறல் உண்டாகாமல் இருக்க வேண்டும் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். இந்நாட்களில் நடனம் ஆடி ஆராதிக்கும் கலாச்சாரத்தில், அநேக இடங்களில் பரிசுத்தத்தை காணமுடியவில்லை. நாம் எதை செய்தாலும் தேவனுடைய நாமம் மகிமைக்கென்றே செய்ய வேண்டும். ஒரு ஊழியக்காரரின் நடனத்தை ஜனங்கள் கண்டு களிகூறுவார்களென்றால், அவற்றில் ஆண்டவர் பிரியப்படமாட்டார். தன்னுடைய நடனத்தை மக்களுக்கு காண்பிக்க வேண்டும் என்று ஊழியக்காரர்கள் முயற்சிக்கும்போதும் ஆண்டவர் மகிமைப்பட மாட்டார். ஆகையால் நடனம் ஆடி துதிக்கும்போதும் ஒழுக்கம் காணப்பட வேண்டும். நம்முடைய ஆண்டவர் கலகத்திற்கு தேவன் அல்ல. நடனம் என்ற பெயரில் திரையரங்கிற்குள் ஆடுவதைப்போல சபைக்குள் குத்தாட்டம் போடுவது எவ்வகையிலும் தேவனை மகிமைப்படுத்தாது. ஆண்களும் பெண்களும் இணைந்து ஆடுகிற இடங்களிலும் தேவன் மகிமைப்பட முடியாது. பெண்கள் தங்கள் துப்பட்டாவை கழட்டி, அதை சுழற்றி ஆடும்போதும் தேவன் பிரியம்கொள்ள மாட்டார். ஆகையால் சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது (1 கொரி 14:40) என்ற வசனத்தின்படி நாம் நடனம் ஆடி துதிக்கும்போது ஒழுக்கத்துடன் தேவ நாமம் மகிமைக்கென்று, எதை செய்தாலும் பரிசுத்தத்துடன் செய்வோம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *