ஆரம்பமும்,    முடிவும் (Beginning and ending).

ஆவியினாலே ஆரம்பம் பண்ணின நீங்கள் இப்பொழுது  மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா?(கலா. 3:3).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Ykqcwz0YkHg

அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்திய நாட்டுச் சபைகளின் விசுவாசிகளைப் பார்த்து கேட்ட கேள்வியாய்  மேற்குறிப்பிடப்பட்ட வசனம்  காணப்படுகிறது. அவர்களுக்கு முன்பாக இயேசு கிறிஸ்துவை  சிலுவையிலறையப்பட்டவராய் பிரத்தியட்சமாக பவுல் வெளிப்படுத்தினான். ஆகையால் அவர்கள் இயேசுவின் மேல் விசுவாசம் வைத்து,    கிருபையினால் இரட்சிக்கப்பட்டார்கள். ஆவியானவருடைய நிறைவும் அவர்கள் மேலிருந்தது.   சிலகாலம் சென்ற பின்பு,    பாதை மாறுகிறவர்களாய் காணப்பட்டு,    மோசேயின்  நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால் ஈர்க்கப்பட்டு,    இயேசு கிறிஸ்துவின் மேல் வைத்திருந்த விசுவாசத்தை விட்டு விலகுகிறவர்களாய் காணப்பட்டார்கள். இந்நாட்களில் காணப்படுகிற அனேக விசுவாசிகள்,    நன்கு ஓட்டத்தைத் துவங்கினவர்கள்,    இப்போது பாதை மாறி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் வைராக்கியமாய் கர்த்தரை  சேவித்தவர்கள்,    இப்போது குளிர்ந்து போன நிலையில் காணப்படுகிறார்கள். இயேசுவோடு கூட சிலுவையில் அறையப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவர்கள்,    இப்போது சிலுவைக்குப்  பகைஞர்களாய் காணப்படுகிறார்கள். பிசாசு அனேகர் மேல் கண்களை வைத்து,    நயங்காட்டி,    அவர்களை மயக்கி,    உலகத்தின் மேல் ஆசை வைக்கும் படிக்குச் செய்து,    கிறிஸ்துவை விட்டு விலகும் படிக்குச் செய்துவிட்டான். கலாத்திய நாட்டு சபை விசுவாசிகளை மயக்கி,    அவர்களைச் சத்தியத்தை விட்டு விலகும்படிககு  செய்ததுபோல,     இந்நாட்களிலும் செய்கிறவனாய் காணப்படுகிறான்.

கர்த்தருடைய பிள்ளைகளே,    ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் முடிவு நன்கு காணப்பட வேண்டும். ஆரம்பம் அற்பமாயிருந்தாலும் முடிவு சம்பூரணமாய் காணப்பட வேண்டும். பவுலின் வாழ்க்கையைப் பார்க்கும் போது,    துவக்கத்தில் யூத மார்க்கத்தின் மேல் வைராக்கியம் கொண்டு,    கிறிஸ்தவர்களைப் பகைக்கிறவனாய் காணப்பட்டான். முதல் கிறிஸ்தவ இரத்த சாட்சியாய் மரித்த ஸ்தேவானுடைய மரணத்திலும் அவனுக்குப் பங்கு காணப்பட்டது.   பின்பு கிறிஸ்தவர்களைச் சிறைபிடித்து,    அழிக்கும் படிக்கு தமஸ்குவிற்கு நேராய் சென்ற வேளையில் இயேசுவால் சந்திக்கப்பட்டான். அதன்பின்பு அவருக்காகவே வாழ்ந்தான். கடைசியில் அவன்    பானபலியாக வார்க்கப்பட்டு,    மரிக்கும் காலம் வந்தவேளையில்,     நல்ல போராட்டத்தைப் போராடினேன்,    ஓட்டத்தை முடித்தேன்,    விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.  இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது,    நீதியுள்ள நியாயாதிபதியாகக் கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்,    எனக்கு மாத்திரமல்ல,    அவர் பிரசன்னமாகுதலை  விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார் என்றான். அவனுடைய ஜீவியம் மாம்சத்தில் துவங்கினாலும்,    ஆவியில் முடிவு பெற்றது. சிலுவையில் அறையப்பட்ட ஆண்டவரின் மேல் கண்களை வைத்து ஓடிக்கொண்டிருந்த வேளையில்,    கலாத்திய சபை விசுவாசிகளின் ஓட்டம் சரியாயிருந்தது. ஆனால் சிலுவையில் அறையப்பட்ட ஆண்டவரின் மேலிருந்து கண்களை விலக்கி,    சத்தியத்தை விட்டு விலகின வேளையில் அவர்கள் பாதை மாறினது. ஆகையால் சிலுவையில் அறையப்பட்ட ஆண்டவரை நோக்கிப் பார்த்து அவரை இலக்காக வைத்து அனுதினமும் வாழுங்கள்,    அப்போது உங்கள் முடிவு சம்பூரணமாயிருக்கும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *