கவலைகள் (Worries).

ஆகையால்,     என்னத்தை உண்போம்,     என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்,     என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று,     உங்களுக்குச் சொல்லுகிறேன்,     ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும்,     உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? (மத். 6:25). 

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/q2ieUU1T0VI

கர்த்தருடைய ஜனங்கள் உலகத்திற்குரிய காரியங்களைக் காட்டிலும்,     நித்தியத்திற்குரிய காரியங்களைக் குறித்து அதிகமாய் கவலைப்பட வேண்டும். உலகத்தில் காணப்படுகிறவர்கள் உணவிற்காகவும்,     உடைக்காகவும்,     மற்ற தேவைகளுக்காகவும் அதிகமாய் கவலைப் படுவார்கள். கர்த்தருடைய ஜனங்கள் தேவனுடைய ராஜ்யத்திற்குரியதையும்,     அவருடைய நீதிக்குரியதையும் தேடும் போது,     இப்படிப்பட்ட உங்கள்    தேவைகளை  கர்த்தர் சந்திப்பார்.  ஆகாயத்துப் பறவைகளைப் போஷிக்கிற தேவன்,     அவைகளைப்  பார்க்கிலும் அதிக விஷேசித்தவர்களாய் காணப்படுகிற,     அவருடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட உங்களைப் போஷிப்பது அதிக நிச்சயம். அது போலக் காட்டுப் புஷ்பங்களை அழகாகப் பலவர்ணங்களில் உடுத்துவிக்கிற தேவன்,     அவருடைய பிள்ளைகளாய் காணப்படுகிற உங்களை உடுத்துவிப்பது அதிக நிச்சயமாய் காணப்படுகிறது.

கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள்  நமக்குக் காணப்பட்டிருந்தும்,     கவலைப்படுகிற சுபாவம்   நம்மை விட்டு நீங்கியதாகத் தெரியவில்லை. நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல்,     எல்லாவற்றையுங்குறித்து  உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் கர்த்தருக்குத் தெரியப்படுத்துங்கள்,     அப்பொழுது,     எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும்  உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும் என்ற கர்த்தருடைய வார்த்தையின் படி,     கவலைகள் வரும் போது,     அவைகளை ஜெபத்திலே ஆண்டவருக்குத் தெரியப்படுத்தி விடுங்கள். நீங்களே அவற்றைச் சுமக்க வேண்டிய அவசியமில்லை. அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால்,     உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார். அன்னாள்,     ஒருபுறம் பிள்ளை இல்லை என்ற துக்கம்,     மறுபுறம் சக்களத்தியாகிய பெனின்னாளுடைய ஏளனம்,     இப்படிப்பட்ட பாரங்களோடு ஆண்டவருடைய சமூகத்தில் சென்று,     தன்னுடைய பாரங்களை எல்லாம் ஜெபத்திலே கர்த்தர் பேரில் இறக்கி வைத்தாள். அதன்பின்பு அவள் துக்கமுகமாய் காணப்படவில்லை,     ஒரு ஆண் குழந்தையைக் கேட்ட அவளுக்கு 6 பிள்ளைகளைக் கர்த்தர் கொடுத்து அவளை மகிழப்பண்ணினார்.  

 கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? என்று வேதம் கேட்கிறது. கவலைப்படுவதினால் வியாதிகளின் எண்ணிக்கை கூடுமே ஒழிய ஒருநாளும் சரீரத்தின் அளவு கூடுவதில்லை. ஆகையால்,     உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் காணப்படுகிற கவலைகள்,     குடும்ப வாழ்க்கையில் காணப்படுகிற தேவைகள்,     ஊழியப் பாரங்கள் எல்லாவற்றையும் ஆண்டவரிடம் கூறிவிட்டு,     உங்களை இலகுவாக்கிக் கொண்டு சந்தோஷமாய் வாழுங்கள். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *