இரக்கம் பாராட்டுங்கள்(Be merciful).

அல்லாமலும்,     நீங்கள் பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து,     சிலருக்கு இரக்கம் பாராட்டி,     சிலரை அக்கினியிலிருந்து இழுத்துவிட்டு,     பயத்தோடே இரட்சித்து,     மாம்சத்தால் கறைபட்டிருக்கிற வஸ்திரத்தையும் வெறுத்துத் தள்ளுங்கள் (யூதா 1:22,    23).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/u8nnpzsWRvM

இரக்கம் என்பது மனதுருக்கம் மற்றும் அன்பின் வெளிப்பாடாய் காணப்படுகிறது. தேவனுடைய சுபாவங்களில் ஒன்று அவருடைய இரக்கமாகும். அவர் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர்,     ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர் என்று வேதம் கூறுகிறது. கர்த்தருடைய பிள்ளைகளும் கூட ஒடுக்கப்பட்டவர்கள்,     தரித்திரர்கள்,     கஷ்டப்படுகிறவர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும். நீங்கள் மற்றவர்களுக்கு இரக்கம் பாராட்டும் போது தேவன் உங்களுக்கு இரக்கம் பாராட்டுவார். உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல,     நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள் என்பது ஆண்டவருடைய கட்டளை (லூக். 6:36). நீங்கள் மற்றவர்களுக்குக் காட்டுகிற இரக்கங்களில் எல்லாம் மேன்மையானது,      அவர்களை   அக்கினியிலிருந்து இழுத்துவிட்டு,     பயத்தோடே அவர்களை இரட்சிப்பிற்கு ஏதுவாய் நடத்துவதாகும்.  அதாவது  அவர்களைப்  பாதாளத்தின் அக்கினிக்கு தப்புவித்து,     பரலோகத்திற்கு நேராய் நடத்துவதாகும். நம்முடைய வாழ்நாட்களில் சிலரையாகிலும் இரட்சிப்பிற்கேதுவாய் நடத்துவதற்கு நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார்.

நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மை பாராட்டும்  என்று யாக்கோபு 2:13 கூறுகிறது. கர்த்தருடைய இரக்கமானது,     அவருடைய நியாயத்தீர்ப்பின் தண்டனையைக் காட்டிலும் அதிகமாகும். நாமும் மற்றவர்களுக்குக் காட்டுகிற இரக்கம் கர்த்தருடைய நியாயத்தீர்ப்பிலிருந்து  கூட நம்மை தப்புவிக்கும். ஆண்டவர்,     ஐசுவரியமாய் வாழ்ந்து மற்றவர்கள் மேல் கொஞ்சம் கூட இரக்கமும் அன்பும் காட்டாதவர்களைக் குறித்து,     ஒரு உவமையைக் கூறினார். ஒரு ஐசுவரிய வானும்,     லாசரு என்ற தரித்திரனும் காணப்பட்டார்கள்.  ஐசுவரிய வான்  இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து,     அனுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான்.   லாசரு பருக்கள் நிறைந்தவனாய்,     அந்த ஐசுவரிய வானுடைய வாசலருகே கிடந்து,     அவனுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்,      நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கினது,     நாய்களோடு அவன் வாழ்ந்தான். ஆனால் அந்த ஐசுவரிய வான் கொஞ்சம் கூட இரக்கமும் அன்பும் இல்லாமல் மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளைக் கூட தரித்திரனுக்குக் கொடுக்க அவனுக்கு மனதில்லை. மனுகுலத்தின் வழக்கத்தின்படி  இரண்டு பேரும் மரித்தார்கள். தரித்திரனாகிய லாசரு மரித்து,     தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்,     ஐசுவரிய வானும் மரித்தான்,     ஆடம்பரமாய் அடக்கம் செய்யப் பட்டான்,     ஆனால் பாதாளத்தில் தள்ளப்பட்டான். அங்கு அவன் வேதனைப்படுகிறபோது,     தன் கண்களை ஏற்றெடுத்து,     தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே,     நீர் எனக்கு இரங்கி,     லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து,     என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்,     இந்த அக்கினி ஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான். பூமியில் காணப்பட்ட வேளையில் லாசருவுக்கு இரக்கம் காட்டவில்லை,      துணிக்கைகளையும் கொடுக்க வில்லை,     ஆகையால் அவனுடைய நியாயத்தீர்ப்பிற்கு முன்பு இரக்கம் மேன்மை பாராட்டவில்லை.    இப்பொழுதோ ஒரு சொட்டு தண்ணீருக்காக அங்கலாய்க்கிறவனாய் காணப்பட்டு,     இரக்கத்திற்காக ஆபிரகாமிடம் கெஞ்சுகிறதைப் பார்க்கமுடிகிறது. இந்த பூமியில் எளியவர்களுக்கு இரக்கம் காட்டாமல்,     கர்த்தருடைய ஊழியத்திற்கு என்று ஏதும் செய்யாமல்,     தனக்காகவும்,     தன்குடும்பத்திற்காகவும் வாழ்கிற எத்தனை பேர்,     பாதாளத்தில் ஒருச் சொட்டு தண்ணீருக்காக ஏங்கப் போகிறார்களோ தெரியவில்லை. அதற்கு ஆபிரகாம்: மகனே,     நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய்,     லாசருவும் அப்படியே தீமைகளை அனுபவித்தான்,     அதை நினைத்துக்கொள்,     இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான்,     நீயோ வேதனைப்படுகிறாய் என்றான். கர்த்தருடைய ஜனங்கள் வாழ்ந்து செழிப்பாய் காணப்படும் போது,     இரக்கம் செய்யுங்கள்,     அதைச்  செய்யத்தக்கவர்களுக்குச் செய்யுங்கள். அப்போது கர்த்தர் உங்களுக்கு இரக்கம் பாராட்டி மேன்மேலும் ஆசீர்வதித்து உயர்த்துவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *