அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம் பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள் (அப். 2:42).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/LJI0E-KS_Mo
பெந்தெகொஸ்தே நாள் வந்த போது, ஆவியானவர் பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல இறங்கி வந்து, மேல் வீட்டு அறையில் அமர்ந்திருந்த நூற்றியிருபது பேரையும் தமது வல்லமையினாலும் அபிஷேகத்தினாலும் நிரப்பினார். ஆவியினால் நிரப்பப்பட்ட அப்போஸ்தலர்கள், வல்லமையினால் நிறைந்து இயேசுவைக் குறித்து பிரசங்கித்தார்கள். அந்த வேளையில், இருதயத்தில் குத்தப்பட்ட ஏறக்குறைய மூவாயிரம் பேர் மனம் திரும்பி, அதற்கு அடையாளமாக ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டார்கள். புதிய ஏற்பாட்டின் முதல் சபை அன்றைய தினம் தோன்றினது. அதன் பின்பு முதல் விசுவாசிகள், அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம் பண்ணுதலிலுமான நான்கு காரியங்களில் உறுதியாய் தரித்திருந்தார்கள். ஆகையால் அவர்கள் வழுவிப்போகாத உறுதியான ஆவிக்குரிய ஜீவியம் செய்கிறவர்களாய் காணப்பட்டார்கள். இந்நாட்களில் காணப்படுகிற விசுவாசிகளும் கூட இந்ந நான்கு காரியங்களில் உறுதியாய் காணப்பட வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். அப்போது நெரிந்த நாணல்களைப் போலத் தள்ளாடுகிறவர்களாய் அல்ல, கர்த்தருக்குள் உறுதியானதாய் உங்கள் விசுவாச ஓட்டம்; காணப்பட முடியும்.
இயேசுகிறிஸ்துவைக் குறித்து அவர்கள் மேன்மேலும் அறிவதற்கு, அப்போஸ்தலருடைய உபதேசத்தில் தொடர்ந்து தரித்திருந்தார்கள். அதுபோல நீங்களும் நல்ல உபதேசத்தில் வளர வாஞ்சிக்க வேண்டும். தேவனுடைய சகல ஆலோசனைகளையும் கற்றுக் கொடுக்கிற சபைகளின் அங்கங்களாய் காணப்பட வேண்டும். பிரசங்கங்கள் கேட்பது நம்மை உற்சாகப்படுத்தும், ஆனால் உபதேசங்கள் கர்த்தருக்குள் நீங்கள் வளர உதவிசெய்யும். அப்படியே அந்நியோந்நியத்திலும் அவர்கள் உறுதியாய் காணப்பட்டார்கள் என்று மேற்குறிப்பிட்ட வசனம் கூறுகிறது. அந்நியோந்நியம் என்பது ஐக்கியத்தையும், சபைக் கூடிவருதலையும் குறிக்கிறது. கர்த்தருடைய பிள்ளைகள் சபைக் கூடிவருதலை ஒருநாளும் விட்டுவிடக் கூடாது. நாம் ஒருவரோடுவர் ஐக்கியமாய் காணப்பட வேண்டும் என்பது கர்த்தருடைய விருப்பம். கடைசிநாட்களில் சபைக் கூடுகை என்பது அனேகருக்கு வெறுப்பாய் காணப்படுகிறது, சபைக் கூடுகையை விட்டுவிட்டதின் பலனை மேலை நாடுகள் இந்நாட்களில் அறுவடை செய்கிறார்கள். அவர்கள் அப்பம் பிட்குதலிலும் உறுதியாய் காணப்பட்டார்கள். இயேசு என்னை நினைவு கூறும்படிக்கு இதைச் செய்யுங்கள் என்றார். அப்பம் பிட்குதலின் நேரம் சிலுவையை நாம் நினைவு கூறுகிற நேரமாய் காணப்படுகிறது. கொரிந்து சபை சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்துவை அறிய வேண்டும் என்பது பவுலின் வாஞ்சையாய் காணப்பட்டது. சபையையும் சிலுவையையும் பிரிக்கமுடியாது. நம்முடைய சுயத்தையும், மாமிசத்தையும் ஜீவபலியாய் சிலுவையில் அடிக்கும்படிக்கு ஒப்புக் கொடுத்து புத்தியுள்ள ஆராதனை செய்ய உங்களை அர்ப்பணியுங்கள். கடைசியாக அவர்கள் ஜெபம் பண்ணுதலிலும் உறுதியாய் தரித்திருந்தார்கள். இந்நாட்களில் ஜெபக்குறைவு எங்கும் காணப்படுகிறது. சபைகளில் ஜெபக் கூட்டங்கள் குறைந்து கொண்டு வருகிறது, ஜெபிக்க வருவதற்கு விசுவாசிகளுக்கும் விருப்பம் குறைவாகக் காணப்படுகிறது. வெற்றியுள்ள விசுவாச வாழ்க்கை வாழ்வதற்கு ஜெபம் இன்றியமையாதது. இப்படிப்பட்ட காரியங்களில் நாம் உறுதியாய் காணப்படும் போது ஒருநாளும் பின் மாற்றத்திற்குள்ளாய் போவதில்லை. உங்கள் ஆவிக்குரிய ஓட்டம் ஒவ்வொரு நாளும் இன்னும் மகிழ்ச்சியாய் காணப்படும். நீங்கள் முன்மாதிரியான விசுவாசிகளாய் காணப்படுவீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae