யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த கன்னியாகிய மரியாள் இருந்த வீட்டில் தேவ தூதன் பிரவேசித்து, நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய், இதோ நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய். அவருக்கு இயேசு என்று பெயரிடு வாயாக என்றார். அதற்கு மரியாள் தூதனை நோக்கி, இது எப்படி ஆகும் புருஷனை அறியேனே என்றாள். அதற்கு தூதன், தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை என்றார். புருஷனை அறியாத கன்னியாகிய மரியாள் இயேசுவை பெற்றார்.( லூக் 1:26-37)
தாயின் வயிற்றிலேயே சப்பாணியாய் பிறந்த ஒரு மனுஷன் பேதுருவையும் யோவானையும் பார்த்து பிச்சை கேட்டான். அப்போது பேதுரு, வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை, என்னிடத்தில் உள்ளதை உனக்குத் தருகிறேன், நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எழுந்து நட என்று சொல்லி அவனைத் தூக்கி விட்ட போது அவன் எழுந்து நின்று நடந்தான். மனுஷனால் கூடாதது இயேசு என்ற நாமத்தினால் கூடும்.( அப். 3:1-8)
தன் வேலைக்காரன் சுகமாகும்படி ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும் என்று கேட்ட நூற்றுக்கு அதிபதியிடம் இயேசு, நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நாளிகையிலேயே அவன் வேலைக்காரன் சுகமானான். மனுஷனால் கூடாதது தேவனுடைய வார்த்தையினால் கூடும்.( மத் 8:5-13)
நடக்கவே நடக்காது, சாத்தியமே இல்லை என்று நாம் நினைக்கும் காரியங்கள் எல்லாம் தேவனால் மிக சாதாரணமாக நடந்திருப்பதைக் காணலாம். வார்த்தையினால் உலகம் உண்டானது, மண்ணிலிருந்து மனுஷன் உருவானான், செங்கடல் இரண்டாகப் பிளந்தது, யோர்தான் நதி குவிந்தது, பிறவிக் குருடன் பார்வை அடைந்தான், முடவன் துள்ளி எழுந்து நடந்தான், மரித்தவன் உயிர்த்தான், இரண்டு அப்பம் ஐந்து மீன் ஐயாயிரம் பேருக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டது, இன்னும் இன்னும் எத்தனையோ!!!
இன்று நம் அனைவருக்கும் எத்தனையோ தேவைகள் உண்டு. எதிர்பார்ப்புகள் உண்டு. காத்திருப்புகள் உண்டு. இது எப்படி ஆகும் என்று கேட்ட மரியாளைப் போல் நமக்குள்ளும் பல கேள்விகள், சந்தேகங்கள். இது நடக்குமா? எனக்கு பிள்ளை பேறு உண்டாகுமா? வேலை கிடைக்குமா? சமாதானம் உண்டாகுமா? திருமணம் நடக்குமா? கெட்ட பழக்கங்கள் சகவாசங்கள் என்னை விட்டு விலகுமா? கடன் மாறுமா? இன்னும் இன்னும் எத்தனையோ.
தேவ பிள்ளைகளே, உங்களால் கூடாதது தான் ஆனால் தேவனால் கூடும், இயேசு என்னும் நாமத்தினால் கூடும், அவருடைய வார்த்தையினால் கூடும். தேவனால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை.நடக்கவே நடக்காது என்று சோர்ந்துபோய் கைவிட்ட காரியங்களை, தேவனால் கூடும், இயேசுவின் நாமத்தில் ஆகும் என்ற முழு விசுவாசத்தோடு மீண்டும் முயற்சி செய்யுங்கள். சோர்ந்து போகாதிருங்கள், அதிசயங்களைக் காண்பீர்கள்.
தேவ கிருபையும் ஆசீர்வாதமும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
Sis. Sharmila Anand
Word of God Church
Doha – Qatar
www.wogim.org