வசனத்தின்படி நன்றாய் நடத்தும் தேவன்.

கர்த்தாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாய் நடத்தினீர். சங்கீதம் 119:65.

வேதத்தில் காணப்படுகிற அதிகாரங்களில் சங்கீதம் 119 மிகவும் பெரியது. 176 வசனங்கள் உண்டு. எபிரேய மொழியில் காணப்படுகிற 22 எழுத்துக்களை தலைப்புகளாக கொண்டு   ஒவ்வொன்றின் கீழ் 8 வசனங்களாக இந்த சங்கீதம் பிரித்தெழுதப்பட்டுள்ளது. வசனம், பிரமாணம், சாட்சி, கட்டளை, கற்பனை என்று வேதவார்த்தைகளை முக்கியப்படுத்தி எழுதபட்ட ஒரு உன்னத சங்கீதம்.

சங்கீதக்காரன் தன் வாழ்க்கையின் முடிவிலிருந்து தன்னை நடத்திகொண்டு வந்த தேவனை திரும்பி பார்க்கிறான். நன்றி நிறைந்த இருதயத்தோடு சாட்சிசொல்லுகிறான் என்னை உம்முடைய வசனத்தின்படி நன்றாய் நடத்தினீர். இம்மட்டும் கர்த்தர் அவருடைய வசனத்தின்படி நம்மை நன்றாய் நடத்திக்கொண்டுவருகிறார். கர்த்தருடைய வருகை தாமதிக்குமேயானால், ஒருநாள் வாழ்க்கையின் முடிவில் நாமும் நிற்கும் போது இப்படியே அறிக்கைசெய்கிறவர்களாக காணப்படவேண்டும்.

வசனத்தின்படி நடத்தப்படுகிற வாழ்க்கை மேன்மையானது. என்னை நன்றாய் நடத்தினீர் என்று சொல்லுவதைப்பார்க்கிலும், உமது வசனத்தின்படி என்னை நடத்தினீர், என் குடுப்பத்தை நடத்தினீர், என் ஊழியத்தை நடத்தினீர் என்று அறிக்கையிடுவது மேன்மையானது. வசனத்தின்படி நடத்தப்படுகிற ஜீவியமே நம்முடைய வாழ்க்கைத்தரமாக (Standard of living) காணப்படவேண்டும். இந்நாட்களில் உலக ஜனங்களை முன்மாதிரியாக (Role Model) வைத்து வாழ விரும்புகிறோம். உலகத்தின் வேஷங்களை பின்பற்றி அவற்றை வாழ்க்கைத்தரமாக்க முயற்ச்சிக்கிறோம். நம்முடைய பாரம்பரியங்கள், மனுஷனுடைய கோட்பாடுகளினால் தேவனுடைய வசனத்தை மீறி அவற்றையே முக்கியப்படுத்துகிறோம். இவைகள் மணலின்மேல் கட்டியெழுப்புகிற வாழ்க்கைக்கு ஒப்பானது. அவைகள் நிலைநிற்பதில்லை.  வசனத்தின்படி கட்டப்படுகிற வாழ்க்கை தான் என்றும் நிற்கும். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, பெருங்காற்று அடித்து மோதினாலும், வசனத்தின்படி கட்டப்படும் வாழ்க்கையானது என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.

காத்தர் அவருடைய வார்த்தையின்படி வாழ விரும்புகிறவர்களை நன்றாய் நடத்துகிறவர். அவர்களுடைய வாழ்க்கையில் அவர் தீமைசெய்வதே இல்லை. அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் (ரோம.8:28). நம்முடைய வாழ்க்கையில் இதுவரை நடந்த அத்தனை சம்பவங்களும் நன்மைக்கு ஏதுவானவைகளே. நம்முடைய வியாதிகளின் பாதைகள், குடும்பங்களில் உள்ள பிரச்சனைகள், பிள்ளைகளை இழந்து நின்ற வேளைகள், கசந்து போன திருமண வாழ்க்கைகள், வெட்கப்பட்ட வேளைகள், நிந்திக்கப்பட்ட நிலைமைகள், ஏமாற்றப்பட்ட  சூழ்நிலைகள், நம்பிக்கை துரோகங்களை சந்தித்த வேளைகள்,  இப்படிப்பட்ட எல்லா நிலைமைகளிலும் கர்த்தர் நல்லவராகவே இருந்தார் என்பதை மறந்துவிடாதிருங்கள்.  நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன் என்று சங். 119:71-ல் எழுதியிருக்கிறபடி அப்படிப்பட்ட பாடுகள் நாம் கர்த்தருடைய பிரமாணங்களை இன்னும் கற்றுக்கொள்ளும்படி செய்தது. ஆண்டவரை நெருங்கி வாழும்படி செய்தது. இக்காலத்துப் பாடுகள் இனி வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவே (ரோம-8:18).

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவருரையும் அவருடைய வார்த்தையின்படி தொடர்ந்து  நன்றாய் நடத்துவாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Nadanthu Vantha Vazhikalilellam, Uthamiyae Vol. 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *