என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால், அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய். பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படி பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று (ஏசாயா 58:13-14).
கர்த்தருடைய பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளை கனம்பண்ணும்போது, கர்த்தர் நம்மை உயர்த்துவேன் என்று வாக்களிக்கிறார். ஆதி. 2:2-ல் தேவன் ஓய்ந்திருந்தார் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார் என்று யாத். 20:11-ல் வாசிக்கிறோம். ஓய்வுநாளை ஆசரிக்கவேண்டும் என்பது கர்த்தருக்கும் நமக்கும் உள்ள உடன்படிக்கையின் அடையாளமாக காணப்படுகிறது (யாத். 31:13). எகிப்தின் அடிதைத்தனத்திலிருந்து கர்த்தர் விடுவித்ததை நினைவுகூரும்படி ஒய்வுநாளை கர்த்தர் கட்டளையிட்டார் (உபா.5:15). இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெபஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார் என்று லூக். 4:16 – ல் வாசிக்கிறோம். இயேசு தவறாமல் ஜெப ஆலயத்திற்கு கடந்து செல்கிறவராக காணப்பட்டார். யூதர்களுக்கு சனிக்கிழமை, அதிகமான உலக நாடுகளில் ஞாயிற்றுக்கிழமை, மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படுகிறவர்களுக்கு அது வெள்ளிக்கிழமையாக காணப்படுகிறது. எதுவாயிருந்தாலும் வாரத்தில் உள்ள 7 நாட்களில், குறைந்தது ஒருநாளாகிலும் நாம் கர்த்தருக்காக முழுமையாக கொடுக்கவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.
சங்கீதக்காரனாகிய தாவீது கர்த்தருடைய ஆலயத்திற்கு போவதை மனமகிழ்ச்சியாக கருதினான் (சங். 122:1). உலகத்தில் செலவிடுகிற ஆயிரம் நாளைப்பார்க்கிலும், கர்த்தருடைய ஆலயப்பிரகாரங்களில் கடந்து செல்லும் ஒருநாளை மேன்மையாக நினைத்தான். கர்த்தருடைய வீட்டைக்குறித்து பக்திவைராக்கியம் உள்ளவனாக காணப்பட்டான். ஆகையால் ஆடுகளுக்கு பின்னால் அலைந்தவனை கர்த்தர் அரசனாக்கி உயர்த்தினார். மேன்மையாய் உயர்த்தப்பட்டவன் என்று 2 சாமு. 23:1-ல் தாவீது தன்னைக்குறித்து தன்னுடைய கடைசி வார்த்தைகளாக சாட்சி கூறுகிறான்.
ஓய்வுநாட்களில் மூன்று காரியங்களை நாம் செய்யக்கூடாது (ஏசா. 58:13).
1. நமக்கு இஷ்டமானதைச் செய்யக்கூடாது – மாறாக கர்த்தருக்கு பிரியமானது எது என்பதை சோதித்தறிந்து அதைச்செய்யவேண்டும். ஆனால் இந்நாட்களில் நமக்கு இஷ்டமானதைச்செய்கிற ஒரேநாளாக ஒய்வுநாளை மாற்றிவிட்டோம்.
2. நமது வழிகளில் நடவாதபடி நமது கால்களை விலக்கவேண்டும் – கர்த்தருடைய வழிகள், கர்த்தருடைய நீதி நியாயங்கள் என்ன என்று அறிந்து, வேதம்காட்டுகிற வழிகளில் நடக்க நம்மை அர்ப்பணிக்கவேண்டும்.
3. நமது சொந்தப்பேச்சுகளை பேசக்கூடாது – கர்த்தரைக்குறித்து அவருடைய நாமத்தின் மகத்துவங்களைக்குறித்து, அவருடைய கிரியைகளைக்குறித்து பேசவேண்டும். இயேசுவைக்குறித்து பேசுகிற நாளாக ஓய்வுநாளை நியமிக்கவேண்டும்.
ஓய்வுநாட்களில் மூன்று காரியங்களை நாம் செய்யவேண்டும்.
1. ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளாக கருதவேண்டும் – காத்தர் நம்மை அவருடைய ஜெபவீட்டிலே அழைத்துகொண்டுவந்து மகிழப்பண்ணுகிறவர். மகிழ்ச்சியாக இருப்பதே கர்த்தருடைய பிள்ளைகளுடைய பெலன். ஆகையால் ஓய்வுநாளென்றாலே நமக்குள்ளாக மனமகிழ்ச்சி காணப்படவேண்டும்.
2. ஓய்வுநாளை பரிசுத்த நாளாக கருதவேண்டும் – நம்முடைய தேவன் பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவர். துதிகளில் பயப்படத்தக்கவர். நாமும் பரிசுத்த அலங்காரத்துடனே அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்று விரும்புகிறவர். அவர் பரிசுத்தராக இருப்பதினால் நம்முடைய நடக்கைகள் எல்லாவற்றிலும் பரிசுத்தத்தை எதிர்பார்க்கிறவர்.
3. ஓய்வுநாளை மகிமையுள்ள நாளாக கருதவேண்டும் – நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன் (ஏசா. 42:8). அவர் ஒருவரே மகிமைக்கு பாத்திரர். மகிமையின் தேவனை ஆராதிக்கும் நாளாக ஒய்வுநாள் இருப்பதால் அந்தநாளையும் மகிமையின் நாளாக நாம் கருதவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.
மேற்குறிப்பிட்ட மூன்று காரியங்களை நாம் செய்யும்போது, மூன்றுவிதங்களில் கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கிறார்.
1. கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய் – உலக மனிதர்கள் சிற்றின்பத்திற்காக ஊர் ஊராக அலைகிறார்கள். நாம் ஓய்வுநாளை ஆசரித்தாலே கர்த்தர் நம்மை மகிழப்பண்ணுகிறவர்.
2. பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படி பண்ணுவேன் – கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தரதிசையிலுமிருந்து ஜெயம் வராது (Promotion comes from God). தேவனே நியாயாதிபதி; ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார் (சங். 75:6,7). ஓய்வுநாளை நாம் கனம்பண்ணும்போது நம்மை உயர்த்துகிற கர்த்தர்.
3. உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன் – யாக்கோபை பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தரவெளியிலும் கர்த்தர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப்போலக் காத்தருளினார். கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார். பூமியிலுள்ள உயர்ந்த ஸ்தானங்களின்மேல் அவனை ஏறிவரப்பண்ணினார்; வயலில் விளையும் பலனை அவனுக்குப் புசிக்கக் கொடுத்தார், கன்மலையிலுள்ள தேனையும், கற்பாறையிலிருந்து வடியும் எண்ணெயையும் அவன் உண்ணும்படி செய்தார். பசுவின் வெண்ணெயையும், ஆட்டின் பாலையும், பாசானில் மேயும் ஆட்டுக்குட்டிகள் ஆட்டுக்கடாக்கள் வெள்ளாட்டுக்கடாக்கள் இவைகளுடைய கொழுப்பையும், கொழுமையான கோதுமையையும், இரத்தம்போன்ற சுயமான திராட்சரசத்தையும் சாப்பிட்டசெய்தார் (உபா. 32:9-14). நீங்கள் ஓய்வுநாட்களை கனம்பண்ணும்போது அப்படிப்பட்ட ஆசீர்வாதங்களால் உங்களையும் ஆசீர்வதிப்பார்.
கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று. ஆகையால், இது ஆம் என்றும் ஆமென் என்றும் நிறைவேறும். சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும் (எபி-10:25).
ஓய்வுநாட்களை கனம்பண்ணி, காத்தருடைய உன்னத ஆசீர்வாதங்களை சுதந்தரிக்க கர்த்தர் உங்கள் ஒவ்வொருவருக்கும் கர்த்தர் கிருபை செய்வாராக. ஆமென்.
Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar
www.wogim.org