எஸ்றா 10:1. எஸ்றா இப்படி விண்ணப்பம்பண்ணி, அறிக்கையிட்டு அழுது, தேவனுடைய ஆலயத்துக்கு முன்பாக தாழ விழுந்துகிடக்கையில், இஸ்ரவேல் புருஷரும் ஸ்திரீகளும் பிள்ளைகளுமான மகா பெரிய சபை அவனிடத்தில் வந்து கூடிற்று; ஜனங்கள் மிகவும் அழுதார்கள்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/8Zi6GQNnVPo
கண்ணீர் ஜெபம் என்றால் அநேகருக்கு விருப்பமில்லை. ஆனால் இன்றைக்கு தேவையான மிக முக்கியமான ஜெபத்தில் ஒன்று கண்ணீரோடு ஜெபிக்கும் ஜெபம் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். புலம்பல் 3:50ல் வசனம் பக்தன் சொல்லுகிறான் என் கண் இடைவிடாமல் ஓய்வின்றிச் சொரிகிறது என்பதாக. நெகேமியா உட்கார்ந்து, அழுது, மன்றாடி ஜெபித்தான். இப்படி ஜெபிப்பதற்கு பதிலாக இன்று சத்துரு ஜனங்களை வஞ்சித்து அழுது ஜெபிக்கத்தேவையில்லை, மாறாக சிரிப்பு ஊழியம் செய்வோம் என்று வெறும் சிரிப்பை மாத்திரம் முக்கியத்துவம் செய்கிற ஊழியக்காரர்களை சத்துரு ஏவுகிறான். ஆகையால் தான் அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து சபைக்கு எழுதும்போது சொல்லுகிறார், தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது (2 கொரி 7:10 ) என்பதாக. பவுல் மனத்தாழ்மையுடனும் கண்ணீரோடும் பிரசங்கம் பண்ணினான். பவுலிடம் கற்றுக்கொண்ட தீமோத்தேயுவும் கண்ணீரோடு தேவ ஊழியத்தை செய்தான்.
எஸ்றா காலத்தில் எழுப்புதல் வந்ததற்கான காரணம் அவன் பாவத்தை அறிக்கையிட்டு, அழுது ஜெபித்து தான் காரணம். ஈவான் ராபர்ட்ஸ் சபையை வளையும், சமுதாயத்தை வளமாக்கும் என்று மன்றாடியதால் தான் வேல்ஸ் தேசத்தில் எழுப்புதல் வந்தது. எழுப்புதல் தாமதிப்பதேன் என்ற புத்தகத்தின் ஆசிரியர் லியோனார்டு ரேவென்ஹில்லிடம் ஒருவர் கேட்டார், நீங்கள் களைப்பாய் இருக்கிறீர்களே என்று. அதற்கு அவர் சொன்னார், நேற்றிரவு தூங்கவில்லை, அழுதுகொண்டேயிருந்தேன் என்பதாக. மற்றொரு ஊழியக்காரர் ஆண்டவரிடம், கர்த்தாவே, நான் ஜெபிப்பதற்கு கண்ணீர் தாரும் என்று விண்ணப்பம் செய்தார். இயேசு எருசலேமுக்குள் வந்து சாட்டையை எடுத்தார், சபைக்குள் வியாபாரம் செய்தவர்களை துரத்தினார் என்பது உண்மைதான். ஆனால், அவர் எருசலேமிற்குள் வருவதற்கு முன்பு கண்ணீர் விட்டு அழுதார்.
வருகிற நாட்கள் பொல்லாதவைகளாய் இருக்கிறது. பாவத்தை தண்ணீரை போல பருகுகிற கோடிக்கணக்கான ஜனங்கள் உண்டு. சத்துரு ஜனங்களை பாதாளத்தில் கொத்து கொத்தாக வாரிக்கொண்டு இருக்கிறான். பாவ உணர்வு வந்து, பரிசுத்தத்தை வாஞ்சிக்க கற்றுக்கொடுக்கிற சபைகள் குறைந்துபோயிற்று. கள்ள போதகர்களை அடையாளம் கண்டுகொள்ளமுடியாமல் தவிக்கிற எண்ணற்ற விசுவாசிகள் வாலிபர்கள் பெருகி இருக்கிறார்கள். உலகம் முழுவதும் சபைக்கு ஆபத்து பெருகுகிறது. இவைகளெல்லாம் வேடிக்கை பார்க்க அழைக்கப்பட்டவர்கள் அல்ல நாம். ஆண்டவருடைய பாதத்தில் நம்முடைய கண்ணீரை ஊற்றுவோம். அப்பொழுது கர்த்தர் மிகப்பெரிய எழுப்புதலை தேசங்களில் அனுப்புவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org