யோபு 42:10. யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/H-_rKY8cixU
பலர் சொல்லுவார்கள் எனக்கே ஆயிரம் பிரச்சனைகள் இருக்கிறது, இப்படி இருக்கும்போது நான் எப்படி மற்றவர்களை பற்றி நினைக்கமுடியும் என்பதாக. என் பிரச்சனையே என் தலைக்கு மேல் இருக்கிறது என்பதாய் சிலர் சொல்லுவார்கள். யோபுவுக்கு இருந்த பிரச்னை நமக்கு இல்லை என்பதை நாம் ஒவ்வொருவரும் ஆணித்தரமாக சொல்ல முடியும். யோபு தன்னுடைய இக்கட்டான நேரத்திலும், தன்னுடைய நண்பர்கள் மீது கரிசனை நிறைந்தவனாய், அவர்களுக்காக ஜெபித்தான். நம்முடைய ஜெபத்திற்காக வருகிற ஜனங்களுக்காக ஜெபிக்க தவறிவிட கூடாது. சரி, நான் உங்களை என் ஜெபத்தில் வைத்துக்கொள்ளுகிறேன் என்று கூறிவிட்டு, அவர்களை மறந்துவிட கூடாது. இந்நாட்களில் மற்றவர்களை பற்றி சற்றும் கரிசனை இல்லாத ஜனங்களாய் விசுவாசிகள் காணப்படுகிறார்கள். ஆனால், ஆண்டவர் ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்திடுங்கள் (கலா 6:2) என்று கூறினார். பேதுருவின் கேள்வி, இவன் காரியம் என்ன (யோவா 21:20-22) என்பதாய் காணப்பட்டது. பேதுருவுக்கு மற்றவன் மேல் கரிசனையும் இல்லை, அக்கறையும் இல்லை. ஆகையால் தான் இயேசு அவனை பார்த்து கடிந்துகொண்டார்.
யோபு எல்லா சூழ்நிலையிலும் பிறர் மீது கரிசனை உள்ளவனாய் இருந்தான். யோபு பிறர் மீது மரியாதை வைத்திருந்தான், வேலைக்காரருக்கு நியாயம் கிடைக்கும்படி செய்தான், எளியவர்களுக்கு உணவு உடைகளை கொடுத்தான், தகப்பனில்லாதவர்களை தேற்றினான். இப்படிப்பட்ட யோபு தன்னலமில்லாமல் பிறர்நலம் பார்த்து அவர்களுக்காக வேண்டுதல் செய்தான். யாக் 4:3 கூறுகிறது, உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள் என்பதாக. இதன் அர்த்தம் தன்னலமாக ஜெபிக்கும் ஜெபம் கேட்கப்படமாட்டாது என்பதாய் காணப்படுகிறது.
யோபு பிறர் நலம் பார்த்து ஜெபித்ததால், ஆண்டவர் அவனுக்கு இரண்டத்தனையாய், இழந்ததை திரும்ப பெற்றுக்கொள்ளும்படி செய்தார். எப்படி பிந்தைய ஆலயத்தின் மகிமை பெரிதாய் இருந்ததோ, எப்படி பின்மாரி மழையை அனுப்புவேன் என்று ஆண்டவர் வாக்களித்தாரோ, எப்படி தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டானோ, எப்படி மூன்று முறை மறுதலித்து பேதுருவிற்கு ஆண்டவர் 3000 ஆத்துமாக்களை கொடுத்தாரோ, அதுபோல நீங்களும் இழந்தவைகளை இரண்டு மடங்கு பெறுவீர்கள். இழந்துபோன ஆசீர்வாதம், இழந்துபோன நன்மைகளை கர்த்தர் இரண்டு மடங்கு கொடுப்பார். இழந்து சம்பளம், இழந்துபோன சரீர நன்மைகள், இழந்துபோன ஆவிக்குரிய நன்மைகளை இரண்டு மடங்கு கொடுத்து கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பது உறுதி.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org