நிர்மூலமாகாமல் காத்த கிருபை (Grace to keep from not consumed).

புல 3:22 நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/BAsyLkcmV7s

இந்த வருஷம் முழுவதும் கர்த்தருடைய கிருபை நம்மை காத்தது. அவருடைய கிருபை நாள்தோறும், புதியவைகளாய் இருந்தது. வாரத்தின் ஏழு நாளும், மாதத்தின் 31 நாட்களும், வருடத்தின் 365 நாட்களும் அவர் புதிய புதிய கிருபையை கொடுத்தார். ஆகையால் தான் அவருடைய கிருபையை நாம் வீணாய் பெறக்கூடாது என்று பவுல் கூறுகிறான்.

இஸ்ரவேலின் பின்மாற்றத்தை குறித்து கதறிய எரேமியாவின் இருதய குமுறல் புலம்பல் புஸ்தகமாக காணப்படுகிறது. இஸ்ரவேல் தனிமையாய் விடப்பட்ட நகர், விதவைக்கு ஒப்பனை தேசம், கப்பம் கட்டுகிற நாயகி, தேற்றுவாரற்ற நேசகி, காட்டிக்கொடுக்கப்பட்ட சிநேகிதி, சிறைபிடிக்கப்பட்டுப்போன மக்கள், மேய்ச்சலில்லாத மான், தீட்டப்பட்ட ஆடை, பரிசுத்த குலைச்சலுள்ள ஆலயம், மிதிக்கப்பட்ட கன்னிகை, நாடுகடத்தப்பட்ட ராஜா, கிரீடம் இழந்த தலை என்று இஸ்ரவேலின் பின்மாற்றத்தினால் வந்த புலம்பலாய் காணப்படுகிறது. இப்படி இஸ்ரவேல் பாவம் செய்து, பொல்லாத கிரியைகளை நடப்பித்து பின்வாங்கிப்போனது. நியாயத்தீர்ப்புக்கு தகுதியான இஸ்ரவேலை, கர்த்தர் தம்முடைய அளவற்ற அன்பினால் காலைதோறும் புதிய கிருபைகளை கொடுத்து நடத்தினார். நமக்கும் இந்த வருஷம் முழுவதும் புதிய கிருபையை கொடுத்து, இன்றும் நம்மை நிலைத்துநிற்கும்படி கர்த்தர் செய்தார். அவருடைய கிருபை பெரியது, அவருடைய கிருபை மாறாதது.

வனாந்திரத்தில் இருந்த இஸ்ரவேல் ஜனங்களுக்கு விடியற்காலந்தோறும் அவரவர் புசிக்கும் அளவுக்குத்தக்கதாக அனுதின மன்னாவை கொடுத்து (யாத் 16:21) போஷித்தவர், ஒவ்வொருநாள் காலையிலும் புதிய கிருபையையும் கொடுத்து நடத்துகிறார். வேதாகமத்தின் முதல் புத்தகமாகிய ஆதியாகமம் ஒரு சவப்பட்டியில் முடிவடைகிறது. யோசேப்பு நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரித்தான். அவனுக்குச் சுகந்தவர்க்கமிட்டு, எகிப்துதேசத்தில் அவனை ஒரு பெட்டியிலே வைத்துவைத்தார்கள் என்பதாக அந்த வசனம் கூறுகிறது. வேதாகமத்தின் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்தின விசேஷம் கிருபையில் முடிவடைகிறது. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக, ஆமென் என்று அந்த வசனம் முடிவடைகிறது. ஒரு காரியத்தின் ஆரம்பத்தை பார்க்கிலும் முடிவு நல்லது. ஆரம்பம் அற்பமாயிருந்தாலும் முடிவு சம்பூரணமாய் இருக்கும். ஆண்டவர் நமக்கு சம்பூரணமான கிருபையை வாக்களித்து எழுதிக்கொடுத்துவிட்டார். அந்த சம்பூரண கிருபை இந்த வருஷம் முழுவதும் நாம் நிர்மூலமாகாமல் இருக்கும்படி செய்தது. ஆகையால் அவர் ஒவ்வொருநாள் காலையிலும் அளித்த அளவற்ற கிருபையை எண்ணி அவருக்கு நன்றி செலுத்துங்கள். இனிமேலும் நாம் நிர்மூலமாகாமல் இருக்கும்படி கர்த்தருடைய கிருபை நமக்கு உதவி செய்யும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *