எசே 1:28. மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ, அப்படியே சுற்றிலுமுள்ள அந்தப் பிரகாசம் காணப்பட்டது; இதுவே கர்த்தருடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாயிருந்தது; அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்; அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/QynZI7CgFtw
எசேக்கியேல் தீர்க்கதரிசி பழைய ஏற்பாட்டில் வாழ்ந்த மிக பெரிய தீர்க்கதரிசி. கர்த்தருடைய மகிமையின் சாயலை கண்டவன். கர்த்தருடைய மகிமை கேருபீனின் மேலிருந்து எழும்பி, ஆலயத்தின் வாசற்படியிலே வந்தது; ஆலயம் மேகத்தினாலே நிறைந்திருந்தது, பிராகாரமும் கர்த்தருடைய மகிமையின் பிரகாசத்தினால் நிரம்பிற்று (எசே 10:4) என்ற வசனத்தின் படி கர்த்தருடைய மகிமையை ஆலயத்தில் பார்த்தவன். இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கீழ்த்திசையிலிருந்து வந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்தின் இரைச்சலைப் போல இருந்தது; அவருடைய மகிமையினால் பூமி பிரகாசித்தது (எசே 43:2) என்ற வசனத்தின் படி, பூமி முழுவதும் கர்த்தருடைய மகிமையினால் நிறைந்ததை பார்த்தவன்.
இப்படி கர்த்தரின் மகிமையின் சாயலை பார்த்தவன், கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பியதை பார்த்தவன், கர்த்தருடைய மகிமை பூமி முழுவதையும் நிரப்பியதை தரிசனத்தில் பார்த்தவன் சொல்லுகிறான், பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன் என்பதாக. நம்முடைய ஆண்டவர் பேசுகிற தேவன். அவர் பேசாமல் இருக்க கல்லோ மரமோ கிடையாது. அவர் பேசும் சத்தத்தை நம்மால் கேட்க முடியும். வழி இதுவே என்று சொல்லும் சத்தத்தை நம்முடைய காதால் கேட்கமுடியும். ஆண்டவர் எசேக்கியேலிடம் சொல்லுகிறார் மனுபுத்திரனே, உன் காலூன்றி நில்; உன்னுடனே பேசுவேன் (எசே 2:1) என்பதாக. எசே 2:2ல் மீண்டும் எசேக்கியேல் சொல்லுகிறான், அவர் என்னுடனே பேசுகிறதைக் கேட்டேன் என்பதாக.
இப்படி எசேக்கியேலிடம் பேசின தேவன், நம்மோடும் கர்த்தருடைய வார்த்தையை கொண்டு இந்த வருஷத்தில் அநேக முறை பேசினார். இடிந்துபோன சூழ்நிலைகள் வந்தபோது எடுத்துக்கட்டுகிற, சமயத்துக்கேற்ற வார்த்தைகளை பேசினார்; பயப்படும் சூழ்நிலை வந்தபோது பயப்படாதே என்று சொல்லி தைரியப்படுத்தினார்; கலக்கமுற்ற சூழ்நிலை வந்தபோது கலங்காதே நான் உன்னோடே இருக்கிறேன் என்று நம் கூடவே இருந்தார். கர்த்தருடைய வார்த்தையை கேட்கக்கூடாது பஞ்சகாலம் வரும் நாட்களில், நமக்கு ஆரோக்கியமான வார்த்தைகள் கிடைத்தது மிகப்பெரிய பாக்கியமாய் காணப்படுகிறது. கர்த்தருடைய வார்த்தையை கொண்டு, வாக்குத்தங்களை கொண்டு பேசிய தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். கர்த்தருடைய வார்த்தை நம்முடைய ஆவிக்கு நல்ல ஆகாரமாக இருந்தது. சரீரத்திற்கு தேவையான ஆகாரத்தை பார்க்கிலும் நம்முடைய ஆவிக்கு தேவையான ஆகாரம் மிகவும் முக்கியம். அப்படிப்பட்ட தெய்வீக ஆகாரத்தினால் திருப்தியாக்கி, வார்த்தையை கொண்டு பேசிய தேவனுக்கு நன்றி செலுத்துவோம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org