யோவேல் 2:25. நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/3r-_FJN7O1w
கர்த்தருடைய பிள்ளைகளே, இந்த வருஷத்தில், வாழ்க்கையில் வந்த சில தோல்விகள், சில ஏமாற்றங்கள், சில எதிர்பாராத சம்பவங்களினிமித்தம் வாழ்க்கை அவ்வளவுதான், இதற்கு மேல் ஒரு முன்னேற்றமும் என் வாழ்க்கையில் வராது என்ற நிலைக்கு வந்துவிடாதிருங்கள். காரணம் நம்முடைய ஆண்டவர் ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் திரும்ப எடுத்துக்கட்டுவார். இந்த 2024ஆம் வருஷத்தில் வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த சில காரியங்கள் இருக்கலாம். இழப்புகள் இருக்கலாம். ஆனால் கர்த்தர் சொல்லுகிறார் அவைகள் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன், அதாவது, வரப்போகும் வருஷத்தில் திரும்ப அளிப்பேன் என்பதாக கூறுகிறார். ஆகையால், யோவேல் 2:21ல் கூறியிருக்கிறபடி பயப்படாமல் மகிழ்ந்து களிகூருங்கள்; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.
ஆண்டவர் சொல்லுகிறார் “நான்” உங்களிடத்தில் அனுப்பின வெட்டுக்கிளிகள் என்பதாக. அழித்துப்போடும் இந்த வெட்டுக்கிளிகளை சத்துரு அனுப்பவில்லை, கர்த்தரே சில வேளைகளில் அனுப்புகிறார். ஏன் ஆண்டவர் இவ்வகையான வெட்டுக்கிளிகளை நம்முடைய வாழ்க்கையில் இந்த வருஷத்தில் அனுமதித்தார்?. காரணம், எந்த ஒரு காரியத்திலும் மேட்டிமையடையாதிருக்கும் படி தேவனே இவற்றை செய்கிறார். மேட்டிமை, பெருமை போன்றவைகள் நாம் வீழ்ந்து போகும்படி செய்துவிடும். நாம் வீழ்ந்துபோவது கர்த்தருக்கு சித்தமில்லை. ஆகையால் தான் வெட்டுக்கிளிகள், பச்சை புழுக்கள் வந்தது இந்த வருஷத்தில் வந்தது. ஆனால் வரப்போகும் வருஷத்தில் இவைகள் பட்சித்தவைகளை கர்த்தர் திரும்ப அளிப்பார்.
எழுப்புதல் நாட்களில் நடப்பதில் ஒன்று, நாம் இழந்ததை திரும்ப பெற்றுக்கொள்ளுவோம். யோவேல் 2ஆம் அதிகாரத்தில் 21 ஆம் வசனத்தில் பெரிய காரியங்களை செய்வேன் என்று கர்த்தர் கூறுகிறார், 23 ஆம் வசனத்தில் பின்மாரிமழையை வருஷிக்கப்பண்ணுவேன் என்று கூறுகிறார். 25 ஆம் வசனத்தில் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன் என்று கூறுகிறார். 28ஆம் வசனத்தில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று கூறுகிறார். இந்த வசனத்தின்படி இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பாக பெந்தேகோஸ்தே நாளில் ஆவியானவர் அருள்மாரியை ஊற்றினார். நம்முடைய நாட்களில் ஆவியானவர் பின்மாரி மழையை ஊற்றுவார். அப்பொழுது ஆண்டவர் இழந்துபோன வருஷங்களின் விளைவை, வரப்போகும் வருஷங்களில் திரும்ப அளிப்பார். இந்த வருஷத்தில் எந்த நன்மை குறைவுபட்டிருந்தாலும் வரப்போகும் வருஷத்தில் ஆண்டவர் திரும்ப அளிப்பார். ஆகையால் இப்பொழுதே தேவனை மகிமைப்படுத்த ஆரம்பியுங்கள். ஒரு பெரிய எதிர்பார்ப்போடு இழந்துபோனதை பெற்றுக்கொள்ள ஆயத்தமாகிக்கொள்ளுங்கள். எழுப்புதல் வருவது நிச்சயம், ஆவியானவர் பின்மாரிமழையை ஊற்றுவதும் நிச்சயம், அதுபோல நீங்கள் இழந்துபோனதை மீண்டும் பெற்றுக்கொள்ளுவதும் நிச்சயம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org