ராமாவிலே கேட்கப்பட்ட புலம்பலும் அழுகையும்  (Weeping and great mourning in Ramah).

புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய  கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது, ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாத படியால் ஆறுதலடையாதிருக்கிறாள் என்று, எரேமியா  தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று (மத். 2:17,18).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/mpjx1JiB5po

புழைய ஏற்பாட்டில் பல இடங்களில் ராமா என்ற இடம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டில் மேற்குறிப்பிட்ட ஒரே இடத்தில் மட்டும் எழுதப்பட்டுள்ளது. ஆசேர்  கோத்திரத்தின் வட எல்லையாய் ராமா காணப்பட்டது என்ற யோசுவா 19:29 கூறுகிறது. ஒரே பெண்  நியாதிபதியாய் காணப்பட்ட தெபோராள்  எப்பிராயீம்  மலைத்தேசமான ராமாவுக்கும் பெத்தேலுக்கும் நடுவிலிருக்கிற  பேரீச்சமரத்தின்கீழே  குடியிருந்தாள்,  அங்கே இஸ்ரவேல் புத்திரர்  அவளிடத்திற்கு நியாயவிசாரணைக்குப் போவார்கள் என்று வேறொரு ராமா என்ற கிராமத்தைக் குறித்து நியாதிபதிகள் 4:5 கூறுகிறது.  தாவீது  அமலேக்கியர்களை  ஜெயித்து, அவர்களிடம் கொள்ளையாடின பொருட்களை தன் சினேகிதராகிய  யூதாவின் மூப்பருக்குச் சிலவற்றை அனுப்பி: இதோ, கர்த்தருடைய சத்துருக்களின் கொள்ளையில் உங்களுக்கு உண்டாயிருக்கும் ஆசீர்வாத பாகம் என்று சொல்லச் சொன்னான், யார் யாருக்கு அனுப்பினானென்றால்,  பெத்தேலில்  இருக்கிறவர்களுக்கும், தெற்கான ராமோத்தில் இருக்கிறவர்களுக்கும் என்று 1 சாமு. 30:27ல் வேறொரு ராமாவைக் குறித்து எழுதப்பட்டுள்ளது. இப்படி பல ராமா என்ற கிராமங்கள் பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டிருந்தாலும்,  கிறிஸ்துவுக்கு முன்பு சுமார் 650 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த  எரேமியா தீர்க்கதரிசி, புலம்பலும் அழுகையும் மிகுந்த  துக்கங்கொண்டாடலுமாகிய  கூக்குரல்  ராமாவிலே கேட்கப்பட்டது, ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாத படியால்  ஆறுதலடையாதிருக்கிறாள் என்று எரேமியா 31:15ல் எழுதின தீர்க்கதரிசன வார்த்தையின் நிறைவேறுதல் இயேசு பிறந்த பின்பு சுமார் இரண்டு வருடங்களுக்குள் நிறைவேறினது.   

எப்பிராத்தா, ராமா என்ற பெயர்கள் பெத்லகேமுக்கும் அதைச் சுற்றிய பகுதிகளுக்கும் கூட காணப்பட்டது. எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள  ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும்,  இஸ்ரவேலை  ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார், அவருடைய புறப்படுதல் அநாதிநாட்களாகிய பூர்வத்தினுடையது என்று கிறிஸ்துவுக்கு முன்பு சுமார் 700 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மீகா தீர்க்கதரிசி மீகா 5:2ல் எழுதினார். ராமா என்றால் உயர்ந்த இடம் என்று பொருள். பெத்லகேம் கூட கடல் மட்டத்திலிருந்து சுமார் 2500 அடி உயரத்தில் காணப்படுகிற சிறிய கிராமம். ஏரோது சாஸ்திரிகளால்  வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான் என்று மத். 2:16 கூறுகிறது. அப்போது அந்த பிள்ளைகளின் சொந்த தாய்களின் குடல் துடித்து, அழுகையும், புலம்பலும், கூக்குரலும் பெத்லகேம் முழுவதும் கேட்டது. எங்கும் ஜனங்கள்  துக்கங்கொண்டாடுகிறவர்களாய் காணப்பட்டார்கள்.  கர்த்தருடைய பிள்ளைகளே, கர்த்தருடைய பிறப்பை நினைவு கூருகிற இந்நாட்களிலும் யுத்தங்களினாலும்,  உள்நாட்டுக் குழப்பங்களினாலும் அனேகர்  குறிப்பாக குழந்தைகள் மரித்துக் கொண்டு காணப்படுகிறார்கள். இயேசு இந்தப் பூமியில் அவதரித்ததின்  நோக்கங்களில் ஒன்று பூமியில் சமாதானத்தையும், மனிதர்கள் ஒருவருக்கொருவர் பிரியத்தையும் உண்டாகும் படிக்கு என்று மத். 2:14 கூறுகிறது. ஆனால் சமாதானக் கேடுகளும், துன்மார்க்க கிரியைகளும் எங்கும் பெருகிக் காணப்படுகிறது. கிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூருகிற கிறிஸ்தவர்கள் கூட சமாதானத்தை விதைப்பதற்குப் பதிலாக  பிரிவினைகளையும் சண்டைகளையும் குடும்பங்களிலும், சமுதாயத்திலும், சபைகளிலும் உருவாக்குகிறவர்களாய் காணப்படுகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சமாதானத்தின் தூதுவர்களாய் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நீங்கள் காணப்பட உங்களை அர்ப்பணியுங்கள். சமாதானக் கேடுகளை விதைக்கிற பொல்லாத ஆவிகளை முந்திக் கட்டுவதற்கு திறப்பிலே நின்று ஜெபிக்க உங்களை ஒப்புக்கொடுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *