ஆயிரங்களில் சிறியது பெத்லகேம் (Bethlehem is the little of thousands).

மீகா 5:2. எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/rkdsAUCTWQI

இயேசு எருசலேம் போன்ற பெரிய பட்டணத்தில் பிறக்கவுமில்லை, அங்கே இறக்கவுமில்லை. சாதாரண ஒரு கிராமத்தில், 1000 கிராமங்களில் சிறியதான பெத்லகேமில் இயேசு பிறந்தார். நாசரேத் என்னும் ஊரில் வளர்ந்தவர், நாசரேத்திலிருந்து நன்மையா என்று கேட்கும்படி செய்தார். இயேசு தச்சன் என்று அழைக்கப்பட்டார். இன்றும் இயேசு அந்தஸ்து அருகதை இல்லாதவர்களை அழைத்து உயர்த்துகிறவராய் காணப்படுகிறார்.

இயேசுவின் பிறப்பை குறித்து சொன்ன தீர்க்கதரிசிகள் இவ்விதமாகவும் சொன்னார்கள். ஏசாயா சொன்னார் ஈசாய் என்னும் பெரிய மரத்திலிருந்து ஒரு பெரிய கிளை என்று சொல்லாமல், ஈசாய் என்ற அடிமரத்திலிருந்து ஒரு துளிர் என்று கூறினார் (ஏசா 11:1). நானோ ஒரு புழு என்று சங்கீதக்காரன் இயேசுவைக்குறித்து சொல்லுகிறான். மீகா தீர்க்கதரிசி சொல்லுகிறார் பெத்லகேம் ஆயிரங்களில் சிறியது. அப்படி சிறிய கிராமமான ஊரில் இஸ்ரவேலை ஆளப்போகிறவர் பிறப்பார் என்ற தீர்க்கதரிசனத்தை அவன் கூறினான்.

சிறு துளி பெருவெள்ளம் போல, எப்பொழுதும் சிறிய காரியம் தான் பெரிய ஆசீர்வாதத்தை கொண்டுவரும். ஆண்டவர் பயப்படாதே சிறுமந்தையே என்று கூறிவிட்டு தான், பிதா உங்களுக்கு இராஜ்யத்தை கொடுக்கப்போகிறார் என்று கூறினார். மோசே ஒரு சிறிய கோலை வைத்து தான் செங்கடலை பிளந்தான். சிம்சோன் ஒரு தாடை எலும்பை வைத்து தான் பெலிஸ்தியர்களை வீழ்த்தினான். கோலியாத்தை வீழ்த்த தாவீதின் கையில் இருந்தது சிறிய கவன் மாத்திரமே. ஆண்டவர் ஐந்து அப்பம் இரண்டு மீன்களை வைத்து தான் ஐயாயிரம் பேரை போஷித்தார். சின்னவன் தான் ஆயிரமாக பெருகுவான். சிறியவன் தான் பலத்த ஜாதியாவான். கடுகு விதையளவு விசுவாசம் தான் பெரிய மலைகளை அசைக்கும். அற்பமான ஆரம்பத்தை யார் தான் அசட்டைபண்ண கூடும்.

இயேசு அற்பமான பட்டணத்தில் பிறந்தாலும், ஆளுகிற ராஜாவாக பிறந்தார். சாத்தானை வீழ்த்தி சிலுவையில் வெற்றி சிறந்தார். ஆகையால் பிரமாண்டம், பெரிய பட்டணம், அமெரிக்காவிற்கு போய் கிறீன் கார்டு வாங்குவது தான் என் இலக்கு என்றில்லாமல், தேவன் உங்களை வைத்திருக்கும் இடத்தில உங்களை உயர்த்த வல்லமையுள்ளவராய் இருக்கிறார் என்பதை அறிந்து சிறிய காரியத்திலும் உண்மையாய் இருங்கள். கொஞ்சத்தில் உண்மையாய் இருந்தால் அநேகத்தின் மேல் அதிகாரியாக வைப்பார். ஆகையால் பெரிய காரியங்களுக்கு ஆசைப்படாமல், சிறிய காரியமானாலும் உண்மையாய் இருங்கள். கர்த்தர் உங்களை உயர்த்துவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *