செப் 3:15. கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Nd_wUYicZHg
நாம் ஆண்டவரோடு ஒப்புரவாகிறபடியால், இந்த வருஷத்தில் நாம் செய்த பாவங்களுக்கும், மீறுதலுக்கும் வரவேண்டிய ஆக்கினைகளை கர்த்தர் அகற்றிவிட்டார். காரணம் நாம் பெற்றுக்கொள்ள இருந்த தண்டனைகளை இயேசு சிலுவையில் ஏற்றுக்கொண்டுவிட்டார். நம்முடைய பாவங்களை அவர் கார்மேகத்தை போல அகற்றிவிட்டார். இப்பொழுது நாம் வானத்தில் காண்கிற மேகத்தை நாளைக்கு அதே இடத்தில் காணமுடியாது. அதுபோல நம்முடைய பாவங்கள் அனைத்தையும் கர்த்தர் ஒன்றுமில்லாமல் அகற்றிவிட்டார். புதிய வருஷத்திற்குள்ளாக நுழைய ஆயத்தமாகிக்கொண்டிருக்கிற நாம் இந்த நிச்சயத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த வருஷத்தில் நீங்கள் சந்தித்த சத்துருக்களை கர்த்தர் விலக்கிவிட்டார். ஜன்னலில் காணப்படும் திரைசீலையை விலக்கும்போது, வெளியே இருக்கும் வெளிச்சம் வீட்டிற்குள் வரும். அதுபோல, கர்த்தர் உங்கள் சத்துருக்களை விலக்கி, மெய்யான ஒளியாம் இயேசு உங்கள் உள்ளத்தில் வந்துவிட்டார்.
இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார். நம்முடைய ஆண்டவர் மனிதர்கள் மத்தியில் வாசம் செய்கிறவர். கோடான கோடி தூதர்கள் ஓய்வில்லாமல் கர்த்தரை பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என்று பாடினாலும், அவர் எப்பொழுதும் உங்கள் மத்தியில் வாசம் செய்ய விரும்புகிறார். தாவீது சொல்லுகிறான் கர்த்தரை எனக்கு முன்பாக எப்பொழுதும் வைத்திருக்கிறேன் என்பதாக. நம் ஆண்டவருடைய நாமங்களில் ஒன்று இருக்கிறேன் என்பதாய் காணப்படுகிறது. அவர் இருக்கிறவராகவே இருக்கிறார். சத்தமிட்டு கூப்பிடும் தூரத்தில் இருக்கிறார் என்று சொல்லுவதை பார்க்கிலும், அவரோடு மெதுவாக பேசும் தூரத்தில், உங்கள் அருகாமையில் அவர் காணப்படுகிறார்.
மாத்திரமல்ல, கர்த்தர் கொடுக்கும் வாக்குத்தத்தம் இனித் தீங்கைக் காணாதிருப்பாய் என்று கர்த்தர் சொல்லுகிறார். சத்துருவினால் வைக்கப்பட்ட கண்ணிகள் தெறிப்புண்டு போய்விட்டது. நீங்கள் சந்திக்க இருந்த பேராபத்துகள், சங்காரங்கள் ஒன்றும் உங்களுக்கு சம்பவிப்பதில்லை. ஆகையால் மகிழ்ந்து களிகூருங்கள். கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பதே தேவ பெலன்.
சம்பவிக்க இருந்த ஆக்கினைகளை அகற்றினார், சத்துருக்களை விலக்கினார். எப்பொழுதும் யோசேப்போடு இருந்தவர், மோசேயோடு இருந்தவர், யோசுவாவோடு இருந்தவர், உங்களோடு எப்பொழுதும் இருக்கிறார். ஆகையால் இனி நீங்கள் தீங்கை காண்பதில்லை.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org