மத்தேயு 14:29 அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக ஜலத்தின்மேல் நடந்தான்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/kUuJz70EuXg
இயேசு கடலின் மேல் நடந்து சென்று சீஷர்கள் இருந்த படவிற்கு வந்தார். சமுத்திரம் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; வெட்டாந்தரையையும் அவருடைய கரம் உருவாக்கிற்று (சங் 95:5) என்ற வசனத்தின்படி அவரே பூமியையும் உருவாக்கினார், அவரே சமுத்திரத்தையும் உருவாக்கினார். ஆகையால், பூமியின் மேல் நடக்க தெரிந்த ஆண்டவருக்கு, சமுத்திரத்தின் மேல் நடப்பது ஒன்றும் பெரிய காரியமில்லை. படவில் இயேசுவின் சீஷர்கள் பன்னிரண்டு பேர் இருந்தாலும், பேதுரு ஒருவனுக்கு மாத்திரம், இயேசு நடந்தது போல தானும் நடக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. பதினோரு பேரும் செயற்று காணப்பட்டார்கள், ஒருவன் மாத்திரம் செயல்பட முன்வந்தான். நாமும் செயலற்ற கிறிஸ்தவர்களாக காணப்படக்கூடாது. செயல்படும் செயல்வீரர்களாகவே இருக்க வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். இயேசுவிடம் ஆண்டவரே நானும் உம்மை போல கடலில் நடக்க வேண்டும் என்று பேதுரு கேட்டான். கடல் என்பது பேதுருவுக்கு ஒன்றும் புதிய அனுபவம் அல்ல. அவன் கடலில் வலையை போட்டுக்கொண்டிருந்தபோது தான் இயேசு பேதுருவை அவர் பின்னே வரும்படி அழைத்தார். கடலில் வேலை பார்ப்பது தான் பேதுருவுக்கு தொழிலாக இருந்தது. இருந்தாலும், இதுவரைக்கும் கடலில் நடந்து வந்தவர்களை பேதுரு ஒருக்காலும் பார்க்கவுமில்லை, ஒருக்காலும் இதை குறித்து சிந்திக்கவுமில்லை. எனக்கு கடலை பற்றி நன்றாக தெரியும், எனக்கு கடலின் மேல் நல்ல அனுபவம் இருக்கிறது என்று தன்னுடைய அனுபவத்தின் மீது சார்த்துக்கொள்ளாமல், இயேசுவிடம் கேட்டான், ஆண்டவரே, நான் உம்மிடத்தில் ஜலத்தின்மேல் நடந்து வர கட்டளையிடும் என்று வேண்டிக்கொண்டான். இயேசு அவனை பார்த்து வா என்று கூறினார். பேதுருவின் துணிச்சல் அவனுக்கு “அற்புதத்தையும்” செய்தது,
இயேசுவின் பாத சுவடுகளை பின்பற்ற வாஞ்சிக்கும் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு கர்த்தர் விடுக்கும் அழைப்பு, வா என்று கூறுகிறார். இயேசு அநேக இடங்களில் நீங்கள் என்னை பின்பற்றி வாருங்கள், கலியாணத்திற்கு வாருங்கள் என்று சுவிசேஷ புத்தகத்தில் கூறியிருக்கிறார். இயேசு நமக்கு முன்மாதிரியாக, இந்த உலகத்தில் எப்படி நடக்க வேண்டும் என்று வாழ்ந்து காண்பித்து சென்றிருக்கிறார். அவர் சொல்லுகிறவராக மாத்திரமல்ல, அவர் செய்ததை சொன்னார், அதையே நாமும் பின்பற்றவேண்டும் என்று அழைக்கிறார். ஆபிரகாமை ஆண்டவர் ஊர் என்னும் பட்டணத்திலிருந்து அழைக்கும்போது, முதலாவது அவனை வா என்றே அழைத்தார்.
ஆகையால், பேதுருவை போல இயேசு கடந்து சென்ற கடினமான பாதையில் நடக்க அர்ப்பணியுங்கள். அவர் உங்களுக்கு விடுக்கும் வா என்ற அழைப்பையும் விசுவாசியாமல் விட்டுவிடாதிருங்கள். அவர் பாதையில் நடக்கிறவர்களுக்கு அற்புதம் நிச்சயம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org