யோவா 15:2. என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/ICKFr_QvuN0
கனிகொடுக்காதிருக்கிறவர்கள் கனிகொடுக்கவேண்டுமென்பதே ஆண்டவருடைய வாஞ்சையாய் இருக்கிறது. நாம் கனியுள்ள வாழ்க்கை வாழ்வதற்கு ஒரே ஒரு நிபந்தனை நாம் கிறிஸ்துவுக்குள் நிலைத்திருக்க வேண்டும். யோவா 15:4 கூறுகிறது, என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். கிறிஸ்துவுக்குள் எப்படி நிலைத்திருப்பது என்பதை யோவான் 15ஆம் அதிகாரம் விவரிக்கிறது.
15:1ன் படி, மெய்யான திராட்சச்செடியாகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு பிதாவின் குடும்பத்தில் அங்கம் வகிக்கிறவர்களாக நாம் காணப்படவேண்டும். 15 :3,7ன் படி நாம் அவருடைய வார்த்தையை மகிழ்வோடு ஏற்று, அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, வார்த்தையில் நிலைத்திருக்க வேண்டும். 15:8ன் படி நாம் அவருடைய சீஷர்களாக, இயேசுவை மாத்திரம் மாதிரியாக வைத்து, அவர் ஒருவரையே நமது குருவாக வைத்து ஜீவிக்கவேண்டும். 15:9ன் படி நாம் அவருடைய அன்பில் நிலைத்திருக்க வேண்டும். 15:11ன் படி கிறிஸ்துவுக்காக படுகிற அவமானத்தை எண்ணாமல், பரம சந்தோஷத்தில் நிலைத்திருக்கிறவர்களாக காணப்பட வேண்டும். 15:27ன் படி பரிசுத்த ஆவியின் வல்லமையில் நிலைத்திருந்து சாட்சியாக வாழ வேண்டும். இப்படிப்பட்டவர்கள் தான், தங்கள் வாழ்க்கையில் கிறிஸ்துவுக்காக கனி கொடுக்க முடியும்.
நம்முடைய பழைய வாழ்க்கையை நினைத்து நம்மை நாமே மட்டம் தட்டாமல், இனிவரும் காலங்களில் கனியுள்ள வாழ்க்கை வாழ அர்பணிப்போம். அதுமாத்திரமல்ல, கனிகொடுக்கிற வாழ்க்கை நம்முடைய விருப்பு வெறுப்பை பொறுத்ததல்ல, நல்ல கனிகொடாத மரம் எவையாக இருந்தாலும் அவற்றை கர்த்தர் அறுத்துப்போடுவார் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். நாம் கனிகொடுக்க வேண்டும் என்பதற்காக ஆண்டவர் நம்மை சுத்தம் செய்கிறார். ஒரு ஊழியக்காரர் சொன்னார், கழுவப்படாவிட்டால் வெள்ளி பாத்திரமும் பயன்படாது; கழுவப்பட்டால் மண் பாத்திரமும் பயன்படும் என்பதாக. நாம் கழுவப்படாமல் வெள்ளையடிக்கப்பட்ட சுவர்களை போல இருப்பதை பார்க்கிலும், இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்ட நொறுங்குண்ட பாத்திரமாக இருப்பதே மேல். இவர்களே கனிகொடுக்க முடியும். பிதாவானவர் நம்மை சுத்தம் செய்யும்போது, புடமிடும்போது சற்று வலிக்க தான் செய்யும். யோசேப்பு கனி தரும் செடி என்று அழைக்கப்பட்டான்; ஆனால் அவன் ஆண்டவரால் புடமிடப்பட்ட பின்பே கனிதரும் திராட்சைச்செடி என்று அழைக்கப்பட்டான்.
தேவனே, எங்களைச் சோதித்தீர்; வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர். எங்களை வலையில் அகப்படுத்தி, எங்கள் இடுப்புகளின்மேல் வருத்தமான பாரத்தை ஏற்றினீர். மனுஷரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகப்பண்ணினீர்; தீயையும் தண்ணீரையும் கடந்துவந்தோம்; செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர் (சங் 66:10-12) என்ற வசனத்தின்படி புடமிடுதலுக்கு பிறகு செழிப்பு உண்டு என்பதையும் மறந்துவிடாதிருங்கள். ஆண்டவருக்காக கனிகொடுங்கள், அப்பொழுது கர்த்தர் உங்களை செழிப்பான இடத்தில் கொண்டு வந்து நிறுத்துவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org