ஆறுதலாய் பேசும் தீர்க்கதரிசி (A comforting prophet)

I கொரிந்தியர் 14:3 தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ மனுஷருக்கு பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/_h66Z0hEa6Q

இயேசு ரபீ என்றும் ரபூனி என்றும் அழைக்கப்பட்டு போதகராக தன்னை காண்பித்தார். நானே நல்ல மேய்ப்பன் என்று சொல்லி தன்னை நல்ல மேய்ப்பனாகவும் காண்பித்தார். பரலோக ராஜ்யத்தை குறித்து பிரசங்கம் செய்து தன்னை சுவிசேஷகனாகவும் காண்பித்தார். நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள் (எபி 3:1) என்று எபிரெயர் நிருபத்தை எழுதிய ஆக்கியோன், இயேசுவை அப்போஸ்தலன் என்று அழைக்கிறான். அதுபோல இயேசு தீர்க்கதரிசி என்றும் அழைக்கப்படுகிறார். ஸ்தேவான் சொல்லுவான், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் சகோதரரிலிருந்து என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக எழும்பப்பண்ணுவார், அவருக்குச் செவிகொடுப்பீர்களாக என்று சொன்னவன் இந்த மோசேயே (அப் 7:37) என்பதாக.

நாம் நம்முடைய வாழ்க்கையில் இயேசுவை மாத்திரம் தான் நம்முடைய முன்னோடியாக, முன்மாதிரியாக பார்க்கவேண்டும். இயேசு தீர்க்கதரிசன பார்வை உடையவராக இருந்தபடியால் எல்லாருக்கும் ஆறுதலுள்ள வார்த்தையை, கிருபை நிறைந்த வார்த்தைகளையே பேசினார். யாரையும் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கவேண்டும் என்பது அவருடைய குறிக்கோள் அல்ல. இயேசு சிட்சிப்பார், கண்டிப்பார், தண்டிப்பார், அடிப்பார் ஆனால் அவருடைய நோக்கம் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கவேண்டும் என்பதல்ல. அவர் சிட்சிக்கிறார் என்றால் நாம் சுத்த பொன்னாக மாற வேண்டும் என்ற காரணம் மாத்திரமே என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். எந்த ஒரு மனிதரை அவர் அதிகமாக சிட்சிக்கிறாரோ, அந்த மனிதரை அவர் அதிகம் நேசிக்கிறார், மாத்திரமல்ல, அவனை கொண்டு அவருடைய திட்டத்தையும் நிறைவேற்றப்போகிறார் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.

தாமார் விபச்சாரம் செய்து கர்பவதியானாள் என்று சொல்லி, அவளை வெளியே கொண்டுவாருங்கள், அவள் சுட்டெரிக்கப்படவேண்டும் என்று யூதா, தாமாரை ஆக்கினை தீர்ப்புக்குட்படுத்தினான். இதை ஆதியாகமம் 38 ஆம் அதிகாரத்தில் வாசிக்கலாம். அதுபோல புதிய ஏற்பாட்டில், ஒரு ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள். இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, ஆக்கினைத்தீர்ப்படையும்படி சொன்னார்கள். இயேசு சொன்னார், உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்பதாக. அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். அந்த ஸ்திரீயின் மீது குற்றம் சுமத்தினவர்கள் எல்லாரும், இயேசு கேள்வி கேட்ட ஒரு கேள்விக்கு முன்பாக நிற்கமுடியாமல் காணாமல் போய்விட்டார்கள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார் (யோவா 8:11). தீர்க்கதரிசி என்று அழைக்கப்பட்ட இயேசு யாரையும் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கவில்லை. சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தபோது கூட ஒரு கள்ளனை பார்த்து, நீ என்னோடு இன்று பரதீசியில் இருப்பாய் என்று கூறினாரே. அவருக்கு இருக்கும் மன்னிப்பின் சுபாவம் யாருக்குத்தான் காணப்படும்? ஆகையால், ஆக்கினைக்குள்ளாக தீர்க்கிற தீர்க்கதரிசி நமக்கில்லை; ஆறுதலாய் பேசும் தீர்க்கதரிசியே நமக்கு இருக்கிறார். கர்த்தர் சொல்லுகிறார், உங்கள் துக்கம் சந்தோசமாய் மாறும்; கவலைகள் நீங்கும்; கண்ணீரை துடைப்பார்; பாவங்களை மன்னிப்பார்; உங்களை கண்மணிபோல காப்பார்; கர்த்தர் உங்களுக்கு கொடுத்த வாக்குத்தங்களை எல்லாம் நிறைவேற்றுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *