2 கொரி 12:15. ஆதலால், நான் உங்களில் எவ்வளவு அதிகமாய் அன்புகூருகிறேனோ அவ்வளவு குறைவாய் உங்களால் அன்புகூரப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/RJqzwUx5N6k
இயேசு தன்னுடைய பசிக்காக கல்லுகளை அப்பங்களாக மாறும்படி ஜெபிக்கவில்லை. ஆனால், ஜனங்கள் பசியாயிருந்தபோது அப்பங்களும், மீன்களும் பெருகும்படி செய்தார். இயேசு தன்னை பாதுகாக்க ஜெபிக்கவில்லை; ஆனால் பேதுரு மற்றும் தன்னுடைய சீஷர்களுடைய பாதுகாப்பிற்க்காக ஜெபித்தார். எனக்கு கிடைக்கும் என்ற சூழ்நிலை மாறி, நான் என்னத்தை கொடுக்கலாம் என்ற மனநிலையில் சபைக்கு வந்தால் அது நலமாய் இருக்கும். காரணம் வசனம் சொல்லுகிறது, உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும் (நீதி 11:25) என்பதாக.
பல வருட கிறிஸ்தவர்களாக இருந்த பின்னர், என்னை ஆசீர்வதியும் ஆண்டவரே என்று மாத்திரமே ஜெபித்துக்கொண்டிருப்பது, அது குழந்தைத்தனமான ஜெபம். ஆண்டவரே, என்னை ஆசீர்வாதமாக்கும் பாத்திரமாக மாற்றும் என்று ஜெபிப்பது முதிர்ச்சியடைந்தவர்களின் ஜெபம். நாம் எப்பொழுதும் ஆத்துமாக்களை குறித்து கரிசனை கொண்டவர்களாக காணப்பட வேண்டும். சுவிசேஷத்திற்க்காக, ஆத்தும அறுவடைக்காக செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் முன்வர வேண்டும். நமது வாழ்விலும் ஊழியத்திலும் தியாகம் காணப்பட வேண்டும். பொருளாதார சிந்தை தியாகத்திற்கு எதிரி என்றார் ஒரு ஊழியக்காரர். பொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா போச்சய்யா உன் அபிஷேகம் என்று பாதர் பெர்க்மான்ஸ் அழகாக பாடி இருப்பார். இயேசு ஆத்துமாக்களுக்காக தன்னையே பானபலியாக வார்த்திருப்பாரென்றால், பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் பதினோரு பேர் இரத்த சாட்சிகளாக தங்கள் உயிரை தியாகம் செய்திருப்பார்களென்றால், நாம் எவ்வளவாய் ஆத்துமாக்கள் மீது கரிசனை உள்ளவர்களாக காணப்பட வேண்டும்.
இப்படி ஆத்துமாக்களுக்காக, அவர்களுடைய இரட்சிப்பிற்காக செலவு செய்து கர்த்தருடைய ஊழியத்தை செய்தால் கர்த்தர் என்ன செய்வார் என்று நீங்கள் கேட்கலாம். ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார் (யோவா 12:26) என்ற வசனத்தின்படி உங்களை கர்த்தர் கனப்படுத்துவது உறுதி. மாத்திரமல்ல, கர்த்தர் சொல்லுவார், நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி (மத் 25:21) என்பதாக.
ஆகையால் ஆத்தும அறுவடைக்காக செலவு செய்ய முன்வருவோம், கர்த்தருடைய பார்வையில் கனம்பெற்ற பாத்திரங்களாக திகழ்வோம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org