நீ பெரிய காரியங்களை செய்வாய்.

அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி: என் குமாரனாகிய தாவீதே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன், நீ பெரிய காரியங்களைச் செய்வாய், மேன்மேலும் பலப்படுவாய் என்றான். அப்படியே தாவீது தன் வழியே போனான், சவுலும் தன் ஸ்தானத்துக்குத் திரும்பினான். 1 சாமுவேல் 26:25.

சவுல் ராஜா தாவீதைப்பிடிப்பதற்கு இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம்பேரோடுங்கூட கடந்துவந்தான். ஒருநாள் இரவு தாவீது என்னோடேகூடச் சவுலிடத்திற்குப் பாளயத்தில் இறங்கி வருகிறவன் யார் என்றதற்கு, அபிசாய்: நான் உம்மோடேகூட வருகிறேன் என்றான். அப்படியே தாவீதும் அபிசாயும் இராத்திரியிலே அந்த ஜனங்களுக்குள்ளே வந்தார்கள். இதோ, சவுல் இரதங்களிருக்கிற இடத்திலே படுத்து நித்திரைபண்ணினான், அவன் தலைமாட்டில் அவனுடைய ஈட்டி நிலத்திலே குத்தியிருந்தது. அவனைச் சுற்றிலும் அப்னேரும் ஜனங்களும் படுத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அபிசாய் தாவீதைப் பார்த்து: இன்று தேவன் உம்முடைய சத்துருவை உம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார், இப்போதும் நான் அவனை ஈட்டியினால் இரண்டு குத்தாகக் குத்தாமல், ஒரே குத்தாக நிலத்தில் உருவக்குத்தட்டுமா என்றதற்கு தாவீது கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவன் மேல் என்கையை போடுவதில்லை என்று அறிக்கையிட்டு சவுலை கொல்லாமல் விட்டுவிட்டான். காலையில் சவுல் எழுந்து,  நடந்தவற்றை அறிந்து, தாவீதைப்பார்த்து சொன்ன வார்த்தைகள் இவை.

கர்த்தருடைய ஜனங்களாகிய நீங்கள் பெரிய காரியங்களை செய்யும்படி அழைக்கப்பட்டவர்கள். சாலோமோன் ராஜா, எங்கள் தேவன் எல்லா தேவர்களைப்பார்க்கிலும் பெரியவர், ஆகையால் நான் கட்டப்போகிற ஆலயம் பெரியதாயிருக்கும் (2 நாளா. 2:5) என்றும்,  நான் கட்டப்போகிற ஆலயம் பெரியதும் ஆச்சரியப்படத்தக்கதுமாயிருக்கும் (2 நாளா. 2:9) என்றும் தீருவின் ராஜாவாகிய ஈராமிடத்திற்கு எழுதி அனுப்பினான். அப்படியே, அந்நாட்களில்  உலக அதிசயங்களில் ஒன்றாக எருசலேம் தேவாலயத்தை கட்டி எழுப்பினான். அந்த நாட்களில் கர்த்தர் அவனுக்கு அரண்மனையைக் கட்டிக்கொடுத்து அவனை ஆசீர்வதித்தார்.

நம்முடைய கர்த்தர் பெரியவர், நம்முடைய ஆண்டவர் எல்லா தேவர்களுக்கும் மேலானவர் (சங். 135:5). அவருக்காக பெரியகாரியங்களை செய்ய விருப்பமுள்ளவர்களாய் காணப்பட்டு அதற்காய் பிரயாசங்களை ஏறெடுத்தால் நம்மைக்கொண்டு கர்த்தர் செய்யும் காரியங்கள் ஆச்சரியமாய், பயங்கரமாயிருக்கும். கர்த்தருக்காக பெரிய காரியங்களைச் செய்ய எப்போதாகிலும் விரும்பினதுண்டா? செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய் (பிர. 9:10) என்ற வார்த்தையின்படி முழு பெலத்தோடு செய்திருக்கிறோமா? இதுவரைக்கும் இல்லையென்றால், இனியாகிலும் ஆண்டவருக்காக பெரிய காரியங்களை முழு பெலத்தோடு செய்ய பிரயாசப்படுவோம். தேவன் தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார் (பிலிப்பியர் 2:13).  நாம் விரும்பி, பிரயாசங்களை ஏறெடுத்தால், கர்த்தர் அதைசெய்து முடிக்க உதவிசெய்து நம்முடைய விருப்பங்களை நிறைவேற்றுகிறவர். Attempt great things for God and Expect great things from God,  என்ற வாத்தையின்படி பெரிய காரியங்களை கர்த்தருக்காக செய்யும் போது அவர் உங்கள் வாழ்வில் பெரிதான ஆசீர்வாதங்களை தந்து, உயர்த்தி மகிழ்வார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆண்டவருக்காக பெரிய காரியங்களை செய்கிற பாத்திரங்களாக உயர்த்தி ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar
https://www.wogim.org

Ennai Belappaduthum Christhu Yesuval, Uthamiyae Vol.1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *