நிழலும், நிஜமும் (Shadows and Substance).

ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக. அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது, அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது(கொலோ. 2:16,17).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/s9J4wq9y4UY

பழைய ஏற்பாட்டில் எழுதப்பட்டிருக்கிற அனேக காரியங்கள் நிழலாய் காணப்படுகிறது, அவற்றின் நிஜம் கிறிஸ்துவாய் காணப்படுகிறார். குறிப்பாக, வனாந்தரத்தில் இஸ்ரவேல் சபை நடுவில் தேவன் வந்து வாசம் பண்ணுவதற்கு ஆசரிப்புக் கூடாரத்தை ஸ்தாபிக்கும் படிக்குக் கூறினார், அவருடைய பிரசன்னம் கூடாரத்தை நிரப்பி வைத்திருந்தது. யோவான் 1:14ல், வார்த்தையாகிய இயேசு மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், ஜனங்களுக்குள்ளே வந்து சரீரத்தோடு வாசம் பண்ணினார், அவருடைய மகிமையை சீஷர்கள்  கண்ணாறக் கண்டார்கள் என்பதாக எழுதப்பட்டிருக்கிறது. ஆசரிப்புக் கூடாரம் ஒரு நிழலாகவும், அதின் பொருளாகிய இயேசு நிஜமாகவும் காணப்படுகிறார். ஆகையால் இனி ஆசரிப்புக் கூடாரம் தேவையில்லை, மணவாட்டி சபை கூடிவரும் போது, அங்கே மணவாளனாகிய இயேசு வந்து நம் நடுவில் வாசம் பண்ணுவார். 

லேவியராகமம் 1 முதல் 7 அதிகாரங்களை வாசிக்கும் போது, அங்கே சர்வாங்க தகனபலி, போஜன பலி, சமாதான பலி, பாவ நிவாரண பலி மற்றும் குற்ற நிவாரண பலிகளைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. இந்த ஐந்து பலிகளும் இயேசுவைக் குறிக்கிறது. பழைய ஏற்பாட்டின் பலிகள் நிழலாகவும், அதின் நிஜம் இயேசுவாகவும் காணப்படுகிறார். இயேசு கல்வாரிச் சிலுவையில் நமக்காக ஒரேபலியாய் தொங்கி, ஜீவனைக் கொடுத்ததினால் பழைய ஏற்பாட்டின் பலிகளை முடிவுக்குக் கொண்டுவந்தார். ஆகையால் இனி நாம் பலி செலுத்த வேண்டிய அவசியமில்லை, சிலுவையில் நமக்காகப் பலியான  ஆண்டவரைப் பின்பற்றி   வாழ்வதே போதுமானது. 

லேவியராகமம் 23ம் அதிகாரத்தில்  ஏழு பண்டிகைகளைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. அவைகள் மனிதர்கள் தேவனைச்  சந்திக்கும்படியாக நியமிக்கபட்டவைகள், பஸ்கா பண்டிகை, புளிப்பில்லாத அப்பப் பண்டிகை, முதற்பலன்களின்  பண்டிகை, பெந்தெகோஸ்தே பண்டிகை, எக்காள பண்டிகை, பாவநிவிர்த்தியின் பண்டிகை, கூடாரப்பண்டிகையாய் காணப்படுகிறது. அவைகள் ஒவ்வொன்றும் இயேசுவைக் குறிக்கிறது. இயேசு சிலுவையில் பஸ்கா ஆட்டுக்குட்டியாய் பலியாகி, புளிப்பில்லாத அப்பத்தைப் போல பாவமறியாதவராய் அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாவது நாள் மரித்தோரிருந்து  முதற்பலனாய் உயிர்தெழுந்தார்,  அதன்பின்பு பெந்தெகோஸ்தே நாளன்று ஆவியானவராய் இறங்கி வந்தார், இனி எக்காள சத்தத்தோடு மணவாட்டி சபையை சேர்த்துக் கொள்ள வரப்போகிறார்,  அதன்பின்பு உபத்திரவக் காலத்தில் நம்முடைய மூத்த சகோதரர்களாகிய யூதர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்த்து மனம் திரும்பி, மன்னிப்பை பெற்றுக் கொள்ளுவார்கள். பின்பு எடுத்துக் கொள்ளப்பட்ட மணவாட்டியாகி நாமும், யூதர்களும் ஆயிரம் வருட அரசாட்சியில் ஆண்டவரோடு கூட வாசம் பண்ணுவோம். அதுபோல, பழைய ஏற்பாட்டில் பலவீனமுள்ள மனுஷர்கள்; பிரதான ஆசாரியர்களாகக் காணப்பட்டார்கள், அவர்கள் தங்கள் பாவங்களுக்கு தாங்களே பலி செலுத்த வேண்டியதாயிருந்தது. ஆனால் இயேசு, என்றென்றைக்கும் நிலைத்திருக்கிற நித்திய நிஜமான ஒரே ஆசாரியராயிருக்கிறார்.

கர்த்தருடைய பிள்ளைகளே, நமக்கு எல்லாம் இயேசுவாய் காணப்படுகிறார். நிழல்களுக்கு ஒத்த காரியங்கள் நிலையற்றது, இயேசு நிலையானவர். நிழல்களைப் போன்ற உலகக் காரியங்களின் மேல் நம்பிக்கையை வைக்காதபடிக்கு, என்றென்றைக்கும்  நிலைத்திருக்கிற இயேசுவைச் சார்ந்து கொள்ளுங்கள். அப்போது நீங்கள் வாழ்ந்து ஆசீர்வாதமாயிருப்பீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *