இயேசு இவைகளைக் கேட்டு அவனைக் குறித்து ஆச்சரியப்பட்டு, திரும்பி, தமக்குப் பின்செல்லுகிற திரளான ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்(லூக்கா 7:9).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/8P9BkjrhSu8
இயேசுவை ஆச்சரியப்பட வைத்த இரண்டு காரியங்களைக் குறித்து சுவிஷேச பகுதியில் வாசிக்கமுடிகிறது. மரண அவஸ்தையில் காணப்பட்ட தனது வேலைக்காரனுக்காக வேண்டுதல் செய்த நூற்றுக்கதிபதியின் விசுவாசம் ஆண்டவரை ஆச்சரியப்பட வைத்தது. அவன் ஒரு புறஜாதியானாய் காணப்பட்டிருந்தும் இயேசுவின் வல்லமையின் மேல் அதிக நம்பிக்கை உடையவனாகக் காணப்பட்டான். இவனுடைய வேலைக்காரன் வியாதியாய் காணப்படுவதை இயேசு அறிந்தவுடன், அவன் வீட்டிற்குச் சென்று அவனைக் குணமாக்கத் தீர்மானித்தார். அவர் வீட்டுக்குச் சமீபமானபோது, நூற்றுக்கு அதிபதி தன் சினேகிதரை நோக்கி, நீங்கள் அவரிடத்தில் போய், ஆண்டவரே! நீர் வருத்தப்படவேண்டாம், நீர் என் வீட்டு வாசலுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல, நான் உம்மிடத்தில் வரவும் என்னைப் பாத்திரனாக எண்ணவில்லை, ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான் என்றும், நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு, நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்று அவர்களை அனுப்பினான். ஒரு சாதாரண ரோம அதிகாரியாய் காணப்படுகிற என்னுடைய வார்த்தைக்கு என்னுடைய அதிகாரத்திற்கு உட்பட்டவர்கள் கீழ்ப்படியும் போது, நீர் சர்வ வல்லமையுள்ள தேவன், காண்கிறவைகள் எல்லாம் உம்முடைய வார்த்தையால் உருவானது என்பதை நான் அறிந்திருக்கிறேன், ஆகையால் நீர் இருக்கிற இடத்திலிருந்து ஒரு வார்த்தை மாத்திரம் சொன்னால் போதும் என்னுடைய வேலைக்காரன் பிழைப்பான் என்பதாகக் நூற்றுக்கதிபதி கூறினான். இந்த வார்த்தைகளை இயேசு கேட்டவுடன், அவனுடைய விசுவாசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டு, தன் சொந்த ஜனங்களாகிய இஸ்ரவேலருக்குள்ளும் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று ஆச்சரியப்பட்டார்.
இன்னொரு முறை, இயேசு தான் வளர்ந்த தன்னுடைய சொந்த ஊராகிய நாசரேத்திற்கு வந்தார். இயேசு ஒரு தச்சனாக இந்த ஊரை விட்டுச் சென்றார், இப்போது ஒரு போதகராகத் திரும்ப வருகிறார், அவருக்கு சீஷர்களும் இப்போது காணப்படுகிறார்கள். ஓய்வுநாளானபோது, ஜெப ஆலயத்தில் உபதேசம் பண்ணத் தொடங்கினார். அநேகர் கேட்டு, ஆச்சரியப்பட்டு, இவைகள் இவனுக்கு எங்கேயிருந்து வந்தது? இவன் கைகளினால் இப்படிப்பட்ட பலத்த செய்கைகள் நடக்கும்படி இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது? இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு யோசே யூதா சீமோன் என்பவர்களுக்குச் சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லாவா? என்று சொல்லி, அவரைக் குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களுடைய அவ்விசுவாசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டு, அங்கே அனேக அற்புதங்களைச் செய்யாமல் அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப் போனார்.
கர்த்தருடைய பிள்ளைகளே, நாம் யாரைப் போலக் காணப்படப் போகிறோம். இயேசுவின் வார்த்தையின் மேல் விசுவாசம் உள்ளவர்களாய் காணப்படுகிறோமா?, இல்லையேல் அவருடைய வல்லமையைச் சந்தேகிக்கிற அவ்விசுவாசிகளாய் காணப்படுகிறோமா? உங்களுக்குள் இருக்கிற கடுகளவு விசுவாசம், மலைகளைப் பெயர்க்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். மனுஷகுமாரன் திரும்ப வரும் போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்று லூக்கா 18:8ல் எழுதப்பட்டிருக்கிறது. ஆகையால் உங்கள் விசுவாசம் இயேசுவின் மேல் உறுதியாயிருக்கட்டும், அப்போது அவர் உங்கள் வாழ்வில் அதிசயங்களைச் செய்து உங்களை மகிழப்பண்ணுவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae