பிலே 9,10 நீர் செய்யத்தக்கதை உமக்குக் கட்டளையிடும்படிக்குக் கிறிஸ்துவுக்குள் நான் துணியத்தக்கவனாயிருந்தாலும், அப்படிச்செய்யாமல், அன்பினிமித்தம் மன்றாடுகிறேன். என்னவென்றால், கட்டப்பட்டிருக்கையில் நான் பெற்ற என் மகனாகிய ஒநேசிமுக்காக உம்மை மன்றாடுகிறேன்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/kyqfY6W-k0s
பவுல் பிலேமோனுடன் ஒநேசிமுக்காக மன்றாடுகிற கடிதம் தான் பிலேமோன் புஸ்தகம். பிலேமோன் மற்றும் ஒநேசிமு பவுலினால் இரட்சிக்கப்பட்டவர்கள். 19 வது வசனத்தில் பவுல் பிலேமோனுக்கு எழுதுகிறான், நீர் உம்மைத்தாமே எனக்குக் கடனாகச் செலுத்தவேண்டுமென்று நான் உமக்குச் சொல்லவேண்டியதில்லையே என்பதாக. ஒநேசிமு என்பவன், பவுல் சிறைச்சாலையில் இருக்கும்போது இரட்சிக்கப்பட்டவன். இந்த கடிதத்தை பவுல் எழுதும்போது அவன் முதிர்வயதுள்ளவனாக இருந்தான், அவன் சிறைச்சாலையில் கட்டப்பட்டவனாக இருந்தான். இந்த வயதிலும் பவுல் ஆத்தும அறுவடை செய்துகொண்டிருந்தான். ஆகையால் ஆத்தும ஆதாய பணிக்கு வயது தடையில்லை என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். பவுல் பட்டணத்திலிருக்கும்போதும் ஆத்தும ஆதாயம் செய்தான், சிறைச்சாலையில் இருக்கும்போதும் ஆத்தும ஆதாயம் செய்தான்.
பிலேமோன் ஒநேசிமுவை ஏற்றுக்கொள்ளும்படி பவுல் கட்டளை கொடுத்திருக்கலாம், ஆனால் அவன் அன்போடு அவனிடம் மன்றாடுகிறேன். ஒநேசிமு அடிமையாக இருந்தபோது பிலேமோனை விட்டு ஓடிப்போனபடியால், அந்நாட்களின் வழக்கத்தின்படி, எஜமான் அவனை பிடித்து கொன்று போடலாம். இப்படி மரணத்திற்கு பாத்திரவனாக இருந்த ஒநேசிமுக்காக பவுல் மன்றாடினான். அதுபோல தான் நம்முடைய பாவத்தினிமித்தம், நாம் மரணத்திற்கு பாத்திரவான்களாக இருந்தபோதும், நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நம்முடைய பாவங்களை அவர் ஏற்றுக்கொண்டு, பிதாவிடம் நமக்காக மன்றாடுகிறவராக காணப்படுகிறார். பிதாவே, இவர்கள் ஒரு காலத்தில் தூரம் போயிருந்தார்கள், இப்பொழுதோ, மனம்திரும்பி திரும்ப வந்துவிட்டார்கள். ஆகையால் அவர்களை ஏற்றுக்கொள்ளும், அவர்களை கைவிடாதிரும், இவர்கள் நீர் எனக்கு தந்த பிள்ளைகள் என்று பரிந்து பேசுகிறவராக காணப்படுகிறார். ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் (யோவா 17:23) என்று என்னை நீர் ஏற்றுக்கொண்டதுபோல, நம்மையும் ஏற்றுக்கொள்ளும்படியாக இயேசு வேண்டிக்கொண்டார். ஒநேசிமு என்றால் உதவியாக இருப்பவன் அல்லது பிரயோஜனமுள்ளவன் என்று அர்த்தம். ஒரு காலத்தில் பிரயோஜனமில்லாமல் இருந்த நாம், இப்பொழுதோ, ஆண்டவருக்காக பிரயோஜனமுள்ளவர்கள்; அவருடைய கரத்தில் இருக்கும் அம்புகள் நாம் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
மாத்திரமல்ல, ஒநேசிமுவாகிய அவன் உமக்கு யாதொரு அநியாயஞ்செய்ததும், உம்மிடத்தில் கடன்பட்டதும் உண்டானால், அதை என் கணக்கிலே வைத்துக்கொள்ளும் (வச 18) என்று பவுல் கூறுகிறான். சிறைச்சாலையில் இருக்கும்போதும் ஒரு ஆத்துமாவுக்காக செலவு செய்யவும், செலவு செய்யப்படவும் பவுல் முன்வந்தான். அதுபோல தான் நம்முடைய பாவங்களின் விளைவாக நாம் செலுத்த வேண்டிய பாவ கடன்களை, இயேசு சிலுவையில் செலுத்திவிட்டார். பவுலை போல, பாவத்தில் இருக்கும் ஜனங்களுக்காக, அன்பினிமித்தம் ஆண்டவரிடம் மன்றாடுவோம். ஆத்தும அறுவடை செய்வோம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org