யாக் 1:5. உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/IJCqVpZx62s
அறிவை பல புத்தகங்களை படித்து பெற்றுக்கொள்ளலாம். ஆனால் ஞானம் தேவனிடத்திலிருந்து மாத்திரமே நாம் பெற்றுக்கொள்ளமுடியும். தென்தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார் (மத் 12:42) என்று வேதம் கூறுகிறது. நம்முடைய ஆண்டவர் ஞானத்தின் உறைவிடம், ஞானம் அவரிடத்திலிருந்து தான் ஊறுகிறது, ஆரம்பமாகிறது. இயேசு ஜெப ஆலயத்தில் பிரசங்கித்தபோது இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் இவருக்கு எப்படி வந்தது என்று ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள் (மத் 13:54).
ஞானத்தை பெற்றுக்கொள்ள யோபு, சங்கீதம், நீதிமொழிகள், பிரசங்கி போன்ற புத்தகங்களை ஆழ்ந்து படியுங்கள். குறிப்பாக நீதிமொழிகள் புஸ்தகத்தில் இருக்கும் 31 அதிகாரங்களையும் மாதம் மாதம் நாளுக்கொன்று என்று படிப்பதும் ஞானத்தை பெற்றுக்கொள்ளுவதற்கு உதவியாக இருக்கும். இதில் எழுதியிருக்கிற நல்யோசனைகள் உங்களை காப்பாற்றும் என்று நீதி 2:11 கூறுகிறது. இருப்பு ஆயுதம் மழுங்கலாயிருக்க, அதை ஒருவன் தீட்டாமற்போனால், அதிக பலத்தைப் பிரயோகம்பண்ணவேண்டியதாகும்; ஆகையால் ஒரு காரியத்தைச் செவ்வையாய்ச் செய்வதற்கு ஞானமே பிரதானம் என்று பிர 10:10 கூறுகிறது. அதாவது எதையும் செய்யும் முன்பும், செய்யும்போதும் நன்றாய் யோசியுங்கள். எந்தவொரு காரியத்தையும் செய்யும்போது, எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுக்க கூடாது. நல்யோசனை செய்து யுத்தம் செய்கிறவர்களாய் நாம் காணப்பட வேண்டும்.
ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி என்று நீதி 4:7 கூறுகிறது. எப்படி இந்த ஞானத்தைச் சம்பாதிப்பது?. யாக் 1:5ன் படி ஜெபத்தின் மூலம் நாம் ஞானத்தை சம்பாதிக்கலாம். சாலொமோன் ஆண்டவரிடம் சொப்பனத்தில் இப்படியாக ஜெபித்தான், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உமது ஜனங்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்றான் (1 இராஜா 3:9). சாலொமோன் கேட்ட ஞானத்தை கர்த்தர் கொடுத்தார்.
ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள் (நீதி 3:13) என்று வேதம் கூறுகிறது. ஏன் ஞானத்தைக் கண்டடைகிற மனுஷன் பாக்கியவான்? காரணம் அதின் வலதுகையில் தீர்க்காயுசும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது என்று நீதி 3:16 கூறுகிறது. ஞானத்தின் இருப்பிடமாகிய ஆண்டவரின் வலதுகையிலிருந்து நீங்கள் தீர்க்காயுசை பெற்றுகொள்ளுவீர்கள். ஆண்டவரிடம் ஞானத்தை பெற்றுக்கொள்ளுகிறவர்களுக்கு தேவன் முன் குறித்த நாளுக்கு முன்பாக மரணம் சம்பவிப்பதில்லை. முதிர்வயதிலும் கனிகொடுக்கிறவர்களாக நீங்கள் காணப்படுவீர்கள். ஞானத்தின் இருப்பிடமாகிய ஆண்டவரின் இடதுகையில் இருந்து செல்வத்தையும் கனத்தையும் நீங்கள் பெற்றுகொள்ளுவீர்கள். நீங்கள் செல்வந்தர்களாகவும், கனம்பெற்றவர்களாகவும் இருக்கும்படியே கர்த்தர் விருப்பமுடையவராய் காணப்படுகிறார். ஆகையால் ஆண்டவரிடம் நிறைவான ஞானத்தை பெற்றுக்கொள்ளும்படி அவரிடம் கேளுங்கள். அப்பொழுது அவர் சம்பூரண ஞானத்தை கொடுத்து உங்களை அவர் ஆசீர்வதிப்பார். அதினிமித்தம் அவருடைய வலது இடதுகையிலிருந்து தீர்காயுசையும், செல்வத்தையும், கனத்தையும் பெற்றுகொள்ளுவீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org