2 பேது 3:13. அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/oSIHEVeBWso
தேவனுடைய ஜனங்களே நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற பூமியும், நாம் காண்கிற வானமும் பழையவைகள். இவைகளெல்லாம் அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டிருக்கிறது. இவைகளெல்லாம் ஒருநாளில் வெந்து உருகி ஒன்றுமில்லாமல் போய்விடும். ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன் (ரோம 8:18) என்று பவுல் சொன்னதுபோல, நாம் மகிமையான காரியங்களை பார்க்கப்போகிறோம். நமக்கு முன்பாக புதிய வானமும் புதிய பூமியும் காணப்படுகிறது. இந்த தரிசனமும், இந்த வெளிப்பாடும் இல்லையேல், நாம் இந்த உலகில் சந்திக்கும் போராட்டங்கள் கவலைகளினிமித்தம் அழிந்துபோய்விடுவோம். ஆகையால் நம்முடைய கண்கள் இனிவரும் புதிய எருசலேமின் மேல் பதிக்கப்பட்டதாய் காணப்படட்டும். நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம் (பிலி 3:20) என்று வசனம் கூறுகிறது. நாம் இவ்வுலகத்தில் இருந்தாலும், இவ்வுலகத்திற்குரியவர்களல்ல; காரணம் நம்முடைய குடியிருப்பு புதிய எருசலேமில் காணப்படுகிறது. நாம் ஒவ்வொருவரும் இந்த பூமியில் வாந்துகொண்டிருக்கும் பரலோக பிரஜைகள் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
ஆண்டவர் இவ்வுலக வாழ்விலும் உங்களுக்கு புதிய காரியங்களை செய்ய வல்லவர். உங்கள் வாழ்க்கையில் வருகிற நாட்களில் புதிய காரியங்களை செய்வார். உங்கள் வாழ்க்கையில் பழையவைகள் ஒழித்துப்போயின; எல்லாம் புதிதாயின என்ற வார்த்தையின்படி, பழைய தானியத்தை ஒதுக்கி, புதிய தானியம் உண்டாகும்படி வழிசெய்வார். யோவான் தன்னுடைய தரிசனத்தில் சொல்லுகிறான், பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று என்று வெளி 21:1ல் கூறுகிறான். சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர் வெளி 21:5ல் கூறுகிறார்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்பதாக. நாம் குறைவில்லாமல், பரிபூரண நிறைவோடு வாழும் வாழ்வை, புதிய வானம் புதிய பூமியில் தான் பார்ப்போம்.
முடிவு நெருங்க நெருங்க நாம் கூடுதல் கவனம் கொண்டவர்களாய் காணப்பட வேண்டும். புதிய எருசலேமில் கண்ணீர் இல்லை, கவலை இல்லை என்பது உண்மை தான். ஆனால் அதை நாம் சுதந்தரிப்பதற்கு வேண்டிய பரிசுத்தம், கீழ்ப்படிதல், தாழ்மை போன்றவைகள் நம்முடைய வாழ்க்கையில், இவ்வுலகில் காணப்பட வேண்டும். நாம் பரலோகத்தை குறித்து அறிந்ததைவிட நரகத்தை குறித்தும் அறிந்துகொள்ள வேண்டும். இல்லையேல், புதிய எருசலேமிற்குள் சேர, நமக்கு வேண்டிய விழிப்புணர்வு இருக்காது. இயேசுவும் பரலோகத்தைவிட நரகத்தை குறித்தே அதிகம் பிரசங்கம் செய்தார். இந்த பொல்லாத நரகத்தில், சாத்தானுக்கும் அவனுடைய தூதர்களுக்கும் உண்டாக்கின இடத்திற்கு நாம் கடந்து செல்ல வேண்டும் என்பது ஆண்டவருடைய விருப்பம் இல்லை. அவர் விருப்பம் நாமெல்லாரும் புதிய வானம் புதிய பூமியில் அவரோடு யுகா யுகமாக வாழ வேண்டும் என்பதே. ஆகையால் இவ்வுலக வாழ்வில் பரிசுத்த ஜீவியம் செய்து புதிய வானம் புதிய பூமியை சுதந்தரிப்போம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org