ஏற்ற காலத்தில் மழை பெய்யப் பண்ணுவேன் (I will send rain in its season).

நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழை பெய்யப்பண்ணுவேன், பூமி தன் பலனையும், வெளியிலுள்ள மரங்கள் தங்கள் கனியையும் கொடுக்கும் (லேவி. 26:4).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/QPBpK5Gzwr0

தேவன் ஆசீர்வாதத்தையும், சாபத்தையும் இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பு வைத்ததை உபாகமம் 28ம் அதிகாரத்திலும், லேவியராகமம் 26ம் அதிகாரத்திலும் வாசிக்க முடியும். அவர்கள் ஓய்வு நாட்களை ஆசரித்து, பரிசுத்த ஸ்தலத்தைக் குறித்து பயபக்தியோடு காணப்பட்டு, விக்கிரகங்களுக்கு விலகி,  கர்த்தருடைய கட்டளைகளையும் கற்பனைகளையும் கைக்கொள்ளும் போது ஆசீர்வாதத்தை, ஏற்றக் காலத்தில் மழையைப் போலப் பெய்யப்பண்ணுவேன் என்று கர்த்தர் வாக்குக் கொடுத்தார். 

கர்த்தருடைய பிள்ளைகளே, வேதத்தில் இரட்சிப்பைத் தவிர மற்ற எல்லா ஆசீர்வாதங்களும் நிபந்தனைகளோடு கூடியதாய் காணப்படுகிறது. இயேசு ஓய்வுநாட்களில் ஜெப ஆலயங்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரைப் போல நீங்களும் ஓய்வுநாட்களைப்  பரிசுத்தமாய் ஆசரிக்கப் பழகிக் கொள்ளுங்கள்.  என் பரிசுத்த நாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக  எண்ணுவாயானால்,  அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய், பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படி பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன், கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று என்று ஏசாயா 58:13,14ல் எழுதப்பட்டிருக்கிறது. அதுபோல, சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நீங்களும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர்  புத்தி சொல்லி உற்சாகப்படுத்துங்கள் என்று எபி. 10:25 கூறுகிறது. 

இந்நாட்களில் ஓய்வு நாட்கள் என்பதும், சபை கூடிவருவது என்பதும்  அனேகருக்குச் சலிப்பாகப் போய்விட்டது. சமூக ஊடகங்களும், செயற்கை நுண்ணறிவுகளும் ஜனங்களுடைய நேரத்தை ஆக்கிரமித்து, இணையதளங்களில் மூழ்கியிருக்கும் படிக்குச் செய்து,  பிஸியாக வைத்திருப்பதினால்  சபை கூடிவருவதற்குக் கூட நேரமில்லாத நிலைமை காணப்படுகிறது. வேதத்தை வாசிப்பதற்கும், அவைகளின்படி செய்வதற்கும் கூட விருப்பம் குறைந்து கொண்டே போகிறது. கர்த்தருடைய ஆசீர்வாதங்களை வாஞ்சிக்கிறோம், ஆனால் அதைச் சுதந்தரிப்பதற்குரிய காரியங்களைச் செய்யத் தவறுகிறோம். நீங்கள் ஓய்வுநாட்களை ஆசரித்து, கர்த்தருடைய ஆலயத்தைக் குறித்து பயபக்தியோடு காணப்படும் போது, உங்கள் வாழ்க்கையில் ஆசீர்வாத மழை பெய்யும், நீங்கள் ஆசீர்வாதமாய் காணப்படுவீர்கள்

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *