3 யோவா 2 பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/RjxXo4Lcqdo
நன்றாக உடற்பயிற்சி செய்து சரீரம் சுகமாய் இருக்கும்படி நாம் கவனமாக இருக்க வேண்டும். நம்முடைய சரீரம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். காரணம் சரீரம் ஆரோக்கியமாயிருந்தால் தான் நாம் ஆண்டவருக்காக ஏதாகிலும் செய்யமுடியும். அதே வேளையில் சரீரம் சுகமாய் இருந்தால் போதும் என்றெண்ணி ஆத்துமாவை கவனிக்காமல் இருப்போமென்றால், ஆத்துமாவில் சுகம் இல்லையென்றால், சரீரம் சுகமாய் இருந்தாலும் அதனால் ஒரு பயனுமில்லை. சரீரம் சிக்ஸ் பேக்காக இருந்தாலும், ஆத்துமா பெலவீனமாக இருந்தால், அதனால் லாபம் ஒன்றுமில்லை. ஆகையால் தான் ஆண்டவர் நம்மை ஆசீர்வதிக்கும்போது, முதலாவது ஆத்துமா சுகமாய் இருக்க வேண்டும், அதன்பின்பு, மற்றெல்லாவற்றிலும் சுகமாய் இருக்கவேண்டும் என்று கூறுகிறார்.
பன்னிரண்டு வருஷமாய் ஒரு பெரும்பாடுள்ள ஸ்த்ரீ வியாதியினால் அவஸ்தைபட்டுக்கொண்டிருந்தாள். அவள் பார்க்காத மருத்துவமும் மருத்துவர்களும் இல்லை. இந்நாட்களில் இருப்பதுபோல சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், ஆங்கில மருத்துவம் என்று எல்லாவகையான மருந்து மாத்திரைகளை சாப்பிட்டும், 12 வருஷமாய் அவளுக்கிருந்த வியாதி நின்றபாடில்லை. இந்த வியாதியினிமித்தம் ஒருபுறம் சரீரத்தில் பெலவீனம், மறுபுறம் மனதும் வியாகுலப்பட்டிருந்தது. ஒரு நாள் இரண்டு நாள் காய்ச்சல் வந்தாலே, நம்முடைய சரிரத்தில் மெலிவு காணப்படும், சரீரம் சோர்ந்துபோகும். அப்படியென்றால் 12 வருஷமாய் கொடிய வியாதியிலியிருந்த இந்த ஸ்திரீயின் நிலைமை எப்படியாக இருந்திருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். அவள் எலும்பும் தோலுமாக தான் காணப்பட்டிருப்பாள், நிற்க கூட பெலனில்லாமல் இருந்திருப்பாள், கையில் இருந்த காசு எல்லாம் செலவழிந்துபோனது, குடும்ப வாழ்க்கை இல்லாமல் அல்லது குடும்ப வாழ்க்கையே கண்ணீராக, அழுகையாக மனதில் மிகவும் காயமடைந்தவளாக இருந்தாள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவள் இயேசுவை குறித்து கேள்விப்பட்டாள். இயேசுவை குறித்து கேள்விப்பட்ட கோடிக்கணக்கான ஜனங்கள் இந்த உலகில் இருக்கிறார்கள். அவர்களில் கேள்விப்பட்டதோடு அநேகர் நின்று விடுகிறார்கள். இந்த ஸ்த்ரீ, தன்னுடைய பெலவீனத்திலும், நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லி; ஜனக்கூட்டத்துக்குள்ளே அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். அவள் இயேசுவின் வஸ்திரத்தை தொட்டமாத்திரத்தில், அந்நேரத்தில் தானே யாராலும் குணப்படுத்தமுடியாத வியாதிக்கு அன்றோடு ஒரு முடிவு வந்தது. அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்.
அவளை பார்த்து நீ சுகமாயிரு என்று சொன்ன கர்த்தர் உங்களை பார்த்தும் சொல்லுகிறார் நீங்கள் ஆத்துமாவிலும், எல்லாவற்றிலும் சுகமாய் இருப்பீர்கள் என்பதாக. ஜீவனை கொடுக்கவும் அது பரிபூரணமடையவுமே வந்தவர் (யோவா 10:10), நீங்கள் எல்லாவற்றிலும் சுகமாய் இருக்கும்படியாகவே விரும்புகிறார். என் தேவன் உங்கள் குறைவையெல்லாம் நிறைவாக்குவார் என்ற வசனத்தின்படி உங்கள் குறைவுகளை நிறைவாக்கி, நீங்கள் சுகமாய் இருக்கும்படி கர்த்தர் செய்வார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org