சேனைகளின் கர்த்தர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்.

 பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார், அவர் அதைக் காத்துக் தப்பப்பண்ணுவார், அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார்.  ஏசாயா 31:5.

தாய்பறவை தன் குஞ்சுகள் மேல் பறந்து, காத்து, தப்புவித்து, ஆதரவாயிருப்பது போல, சேனைகளின் கர்த்தர் உங்களுக்கு ஆதரவாயிருப்பார். நாம் அனேக வேளைகளில், கர்த்தருடைய உதவியை, ஆதரவை தேடாமல், மனுஷர்களுடைய ஆதரவை தேடுகிறோம். மனுஷனின் உதவியை எதிர்ப்பார்ப்பது தவறல்ல. ஆனாலும், யாராலும் உதவிசெய்யக்கூடாத நேரங்கள் நம் வாழ்க்கையில் வரும். கர்த்தர் ஒருவரே இக்கட்டு நேரங்களில், எல்லா சூழ்நிலைகளிலும் உதவிசெய்கிறவர். ஆகையால்தான் சங்கீதக்காரன், சங். 60:11-ல் இக்கட்டில் எங்களுக்கு உதவி செய்யும், மனுஷனுடைய உதவி விருதா, என்று அறிக்கையிடுகிறான். நான் கர்ப்பத்தில் உற்பவித்தது முதல் உம்மால் ஆதரிக்கப்பட்டேன் (சங். 71:6) என்றும் நன்றியோடு கூறுகிறான். என் ஆபத்து நாளிலே எனக்கு எதிரிட்டு வந்தார்கள், கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார் (2 சாமு. 22:19) என்று கர்த்தர் தாவீதை அவனுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைக்கும் நீங்கலாக்கி விடுவித்தபோது, கர்த்தருக்கு முன்பாகப் பாடி துதிக்கிறான். கர்த்தர் உங்களுக்கு ஆதரவாயிருக்கும்போது, சத்துருக்கள் உங்களை மேற்கொள்ளுவதில்லை. அவர், தாயின் கர்ப்பத்தில் நீங்கள் உற்பவித்தது முதல், கடைசிமட்டும் கைவிடாமல் ஆதரவாயிருப்பார்.

யோசேப்பு தன் சகோதரர்களை விசாரித்து வரும்படி எபிரோன் பள்ளத்தாக்கிலிருந்து  சீகேமுக்கு போனான். அவர்கள் தோத்தானுக்கு போனார்கள் என்று கேள்விப்பட்டு, அவர்களைத்தேடி அங்கே போனான். தன் சொந்த குடும்பத்தினர்கள் தனக்கு கேடுவிளைப்பதில்லை, உதவியாய், ஆதரவாய்தான் இருப்பார்கள் என்று கருதியிருக்கக்கூடும். ஆனால் அவர்களோ கடைசியில் அவனை இஸ்மவேலர்கள் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். ஆனால் கர்த்தர் அவனோடு கூட இருந்தார் (ஆதி. 31:2,21,23), அவனுக்கு ஆதரவாயிருந்தார், உதவியாயிருந்தார். அதினிமித்தம் அவன் உயர்த்தப்பட்டான். பார்வோனின் அடுத்த இடத்தில் அவன் உயர்த்தப்பட்டான். கர்த்தர் உங்களுக்கு ஆதரவாயிருக்கும்போது, நீங்கள் உயர்த்தப்படுவீர்கள், ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.

இஸ்ரவேல் ஜனங்கள் வனாத்திரத்தில் காணப்பட்ட நாட்களில், தாய்ப்பறவை குஞ்சுகளின் மேல் பறந்து, காத்து, தப்பப்பண்ணி, விடுவிப்பது போல, கர்த்தர் அவர்கள் மேல் அக்கினி ஸ்தம்பமாய், மேகஸ்தம்பமாய் காணப்பட்டார். ஒருசேதமும் அணுகாமல் அவர்களை நடத்திச்சென்றார், அவர்களுக்காய் யுத்தம்செய்தார், அவர்களை போஷித்தர், உடுத்துவித்தார், கண்மணிபோல காத்தருளினார். அதுபோல கர்த்தர் உங்கள் ஒவ்வொருக்கும் ஆதரவாயிருந்து, உதவிகள் செய்து, காத்து தப்புவித்து, ஆசீர்வதிப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar
https://www.wogim.org

Uyir Thantha Yesuvae, Uthamiyae Vol. 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *