சங் 118:8. மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/hyAWljNndhw
முழுவேதாகமத்தின் மைய வசனம் என்ன சொல்லுகிறது? மனிதனை நம்பாதே, கர்த்தரை நம்பு, கர்த்தரை பற்றிக்கொள் என்று நமக்கு கற்று கொடுக்கிறது. சிலர் சொல்லுவார்கள் இந்த நபர் எனக்கு வலதுகையை போல எனக்கு நம்பிக்கைக்குரியவனாக காணப்படுகிறான் என்பதாக. நாம் நமது நம்பிக்கையை கர்த்தருடைய வலதுகரத்தின் மீதே வைக்க வேண்டும் என்று வேதம் கூறுகிறது. இதே சங்கீதம் 118ல் மூன்றுமுறை கர்த்தருடைய வலதுகரம் என்று எழுதப்பட்டிருக்கிறது. நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீரசத்தம் உண்டு; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும். கர்த்தரின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும் என்று 15,16 வசனங்கள் கூறுகிறது.
ஆசா என்ற ராஜாவிற்கு கர்த்தர் எத்தனையோ ஜெயத்தை கொடுத்திருந்தார். அப்படியிருக்கும்போது, அவன் கர்த்தரை சார்ந்துகொள்ளாமல், சீரிய இராஜாவை சார்ந்துகொண்டான். இதை கர்த்தர் மதியீனம் என்று அழைத்தார் (2 நாளா 16:7-9). நாமும் எந்தவொரு காரியத்திலும் கர்த்தரை சார்ந்துகொள்ளாமல், மனிதர்களை சார்ந்துகொள்ளுவோமென்றால், ஆண்டவர் நம்மை பார்த்து மதியில்லாதவர்கள் என்றே அழைப்பார். நாம் மதியற்ற ஜனங்களாக ஒருநாளும் காணப்படாமல், எல்லாவற்றிலும் கர்த்தரை சார்ந்து, அவரை நம்பி ஜீவிக்கிறவர்களாய் காணப்படவேண்டும்.
அப்படியென்றால் நாம் எந்தவொரு காரியத்திலும் மனிதர்களின் உதவியை நாடக்கூடாதா? இந்த உலகத்திலிருக்கும் நாள் வரையில் எவ்வகையிலாவது மனிதர்களின் உதவி தேவைப்படுகிறதே என்று நீங்கள் கேட்கலாம். ஒரு முறை ஒரு சகோதரன் தன்னுடைய வேலைக்காக பல மனிதர்களின் உதவியை நாடினான். உலகத்தின் பல்வேறு பகுதியிலிருக்கும் தன்னுடைய உற்றார், உறவினர், நண்பர்களை தொடர்புகொண்டு அவர்கள் தனக்கு உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தான். இந்நாட்களில் பல தொழில் நிறுவனங்களில் இருக்கும் Human Resource Managers என்றழைக்கப்படும் தலைவர்களை எளிதாக LinkedIn போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் அணுகிவிடலாம். ஆகையால் அந்த நபர் பல்வேரு மேலதிகாரிகளை தொடர்புகொண்டு அவர்கள் மூலம் தனக்கு வேலை கிடைக்கும் என்றே முழுவதும் நம்பிக்கொண்டிருந்தான். இப்படியே அவர்களை நம்பி நாட்களும் மாதங்களும் உருண்டோடிக்கொண்டிருந்தது. அவனுக்கு அவன் நம்பியிருந்த மனிதர்கள் மூலம் எந்தவொரு பதிலும் வரவில்லை. அப்பொழுது பரிசுத்த ஆவியானவரால் உணர்த்தப்பட்டு ஒரு நாள் தன்னுடைய ஜெப அறைக்கு நேராக சென்று, ஆண்டவரை நோக்கி ஜெபம் செய்தான். ஆண்டவரே, மனிதர்கள் எனக்கு உதவுவார்கள் என்று நான் அவர்களை நம்பினேன், ஆனால் ஒருவரும் எனக்கு உதவவில்லை. இப்பொழுது நாம் உம்மை மாத்திரம் நம்புகிறேன், எனக்கு ஒரு வேலையை கொடும் என்று பிரார்த்தனை செய்தான். கர்த்தர் அவன் ஜெபத்தை கேட்டார். ஆண்டவர் சொன்னார், நீ முதலாவது என்னை சார்ந்துகொள்ள வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். இப்பொழுது நீ என்னை சார்ந்துகொண்டதால், நீ முயற்சி செய்த மனிதர்கள் மூலமாக உன் காரியம் வாய்க்கும்படி, மனித தயவை நான் கட்டளையிடுகிறேன் என்று கர்த்தர் சொன்னார். அதற்குப்பின்பு சில நாட்களில் LinkedIn சமூகவலைத்தளம் மூலமாக யாரை அவன் அணுகினானோ, அவர்களில் ஒருவர் மூலம் ஒரு அழைப்பு தானாக வந்தது. அவன் நல்ல ஒரு பணியில் அமர்த்தப்பட்டான். இப்படித்தான் மனிதர்கள் மூலம் நாம் பயனை பெற்றுக்கொள்ளும்படி கர்த்தர் செய்கிறார். ஆகையால் நாம் எல்லாவற்றிலும் மனிதர்களை நம்பாமல், கர்த்தரை நம்புவோம், அவர் மேல் பற்றுதலாய் இருப்போம். இதுவே தேவன், முழுவேதகமத்தின் மைய வசனத்தின் மூலம் நமக்கு கற்றுக்கொடுக்கிற பாடமாய் காணப்படுகிறது.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org