கர்த்தாவே, உம்மைப் பகைக்கிற யாவரும் இப்படியே அழியக்கடவர்கள், அவரில் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல இருக்கக்கடவர்கள் என்று பாடினார்கள். பின்பு தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது (நியா. 5:31).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/70yDJqA4KTs
தெபொராளும், பாராக்கும் கர்த்தரைப் புகழ்ந்து பாடின பாடலின் கடைசி வரிகள் கர்த்தரைப் பகைக்கிறவர்கள் அழிவார்கள் என்றும் அவரிடத்தில் அன்பு கூருகிறவர்கள் வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல இருப்பார்கள் என்றும் கூறுகிறது. கர்த்தருடைய ஜனங்களைப் பகைத்த கானானியருடைய ராஜாவாகிய யாபீனுடைய சேனாதிபதியாகிய சிசெராவையும் அவனுடைய சேனையையும் கர்த்தர் அழித்துப் போட்டார். கர்த்தருடைய ஜனங்களைப் பகைப்பதும் கர்த்தரைப் பகைப்பதும் ஒன்றாய் காணப்படுகிறது. உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான். உங்கள் எதிரிகளோடு நீங்கள் சண்டைக்குச் செல்ல வேண்டாம், வாக்குவாதம் செய்யவும் வேண்டாம். உங்களைப் பகைக்கிறவர்கள் அழிவார்கள் என்று கர்த்தர் வாக்கு கொடுக்கிறார். அவர்களை நீங்கள் தேடியும் காணாதிருக்கும் படிக்குக் கர்த்தர் செய்வார். அசீரிய ராஜாவின் சேனாதிபதியாகி ரப்சாக்கே எசேக்கியாவையும் அவன் ஜனங்களையும் இகழ்ந்தான், அவர்கள் தேவன் மேல் கொண்டிருந்த நம்பிக்கையும் இகழ்ந்தான். கர்த்தர் அதைக் கேட்டு, ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் வார்த்தையை அனுப்பினார். யாரை நிந்தித்துத் தூஷித்தாய்? யாருக்கு விரோதமாய் உன் சத்தத்தை உயர்த்தினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாயல்லவோ உன் கண்களை மேட்டிமையாக ஏறெடுத்தாய்? என்று கர்த்தர் கூறினார். அன்று இராத்திரி கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம்பேரை சங்கரித்து, அழித்துப் போட்டான். கர்த்தருடைய பிள்ளைகளே உங்களைப் பகைக்கிறவர்களுக்கும் கர்த்தர் அப்படியே செய்வார்.
ஒரு புதிய மாதத்தில் பிரவேசித்திருக்கிற நீங்கள் இன்னும் கர்த்தரில் அன்புகூருகிறவர்களாய் காணப்படுங்கள். அவரில் அன்பு கூர்ந்து அவருடைய சமூகத்தைத் தேடுங்கள், அன்பு கூர்ந்து ஆராதியுங்கள், கிறிஸ்துவின் அன்பு உங்களை நெருக்கி ஏவுவதின் மூலம் ஊழியம் செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் வல்லமையாய் உதிக்கிற சூரியனைப் போல இருப்பீர்கள். உங்கள் முகங்களைக் கர்த்தர் பிரகாசிக்கும் படிக்குச் செய்வார். பெனியேலில் வைத்து யாக்கோபுடைய வாழ்க்கையில் சூரியன் உதயமானது, அவனுடைய பெயரை இஸ்ரவேல் என்று கர்த்தர் மாற்றினார். அதுவரை அவனுடைய வாழ்க்கையில் போராட்டங்களும், ஏமாற்றங்களும், பயங்களும், திகில்களும் காணப்பட்டது. அதின் பின்பு அவனுடைய வாழ்க்கை ஆசீர்வாதமாய் மாறினது. கர்த்தருடைய பிள்ளைகளே, நீதியின் சூரியனாகிய இயேசுவின் பிரசன்னம் உங்கள் மேல் உதிக்கும் போது நீங்கள் ஆரோக்கியமாய் காணப்படுவீர்கள், உங்கள் வாழ்க்கையில் நம்பிக்கையை இழந்து மரித்துப் போன நிலையில் காணப்படுகிற காரியங்கள் எல்லாம் உயிர்பெறும். உங்கள் காத்திருப்புகள் முடிவுக்கு வரும். சந்திரனைப்போல் அழகும், சூரியனைப்போல் பிரகாசமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமுள்ளவளாய், அருணோதயம்போல் உதிக்கிற இவள் யார்? என்று உங்களைக் குறித்து கூறுவார்கள். நீங்கள் மேன்மையடைவீர்கள், உங்கள் காரியங்கள் ஜெயமாயிருக்கும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae