நீங்கள் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன் குறிக்கப்பட்டவர்கள்.

தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார். ரோமர் 8:29

கர்த்தருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் கொஞ்சம் கொஞ்சமாக கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக மாறவேண்டும் என்பது தேவனுடைய விருப்பம். அவர் நம்மை முன்குறித்து அழைத்ததின் நோக்கமும் அதுவாய் காணப்படுகிறது. ஆவியானவரும் நம்மைக் கிறிஸ்துவின் சாயலாக மறுரூபப்படுத்துகிறார் என்று வேதம் கூறுகிறது. நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம். 2 கொரி. 3:18.

நீங்கள் அடுப்பினடியில் கிடந்தவர்களாயிருந்தாலும், வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட புறாச்சிறகுகள்போலவும், பசும்பொன் நிறமாகிய அதின் இறகுகளின் சாயலாகவும் இருப்பீர்கள் (சங்கீதம் 68:13) என்று  மூன்றுவிதமான சாயல்களைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. முதலாவது, அடுப்பினடியில் கிடந்த சாயல். அது கறுகறுத்துபோன பாவ சாயலைக் குறிக்கிறது. ஆதிபெற்றோராகிய ஆதாமும், ஏவாளும் தேவசாயலில் சிருஷ்டிக்கப்பட்டவர்கள். ஆனால் பாவம் செய்யதபின்பு அவர்கள் தேவசாயலை இழந்தார்கள். இரண்டாவது, வெள்ளிக்கொப்பான சாயல். அது, மீட்பின் சாயலைக் குறிக்கிறது.வேதத்தில் வெள்ளி மீட்பின் அடையாளமாக காணப்படுகிறது. மீட்கும் பணமாகவும் பழையஏற்பாட்டில் வெள்ளி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நாம், அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே (1 பேதுரு 1:18,19). இயேசுக்கிறிஸ்து சிலுவையில் தன்னுடைய இரத்தத்தைக் கிரயமாய் ஊற்றிக்கொடுத்து, நம்மை கறுகறுத்துப்போன பாவத்தின் அடிமைத்தனத்தில் இருந்து மீட்டெடுத்தார். கிருபையினால் நம்மை இரட்சித்தார். வேதவார்த்தைகளைக் கற்றுக்கொடுத்து, நல்ல சபை ஐக்கியத்தைக் கொடுத்து, அவருடைய சாயலில் நம்மை மாற்றுகிறார்.

மூன்றாவது சாயல், பொன்னிற சாயல். அது இயேசுவின் சாயலைக் குறிக்கிறது.  1 யோவான் 3:2 கூறுகிறது, பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை, ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம். இயேசுக்கிறிஸ்துவின் வருகையில் நாம், அவர் இருக்கிற வண்ணமாக இருந்து அவரைப்போல இருப்போம். மீட்கப்பட்ட நிலையிலிருந்து அவருடைய வருகையில் அவரைப்போல மாறுவதற்குக் கர்த்தர் கிருபையாய் கொடுத்த நாட்கள்தான் நம்முடைய வாழ்நாட்களாய் காணப்படுகிறது.

இயேசுகிறிஸ்துவின் வருகை எப்பொழுது வேண்டுமென்றாலும் இருக்கலாம். ஆனால், அவருடைய சாயல் நம்மில் காணப்படுகிறதா? அவருடைய சாயலில் நாம் மாறுவதற்கு பிரயாசப்படுகிறவர்களாய் காணப்படுகிறோமா? கிறிஸ்து இயேசுவில் இருந்த சிந்தை நம்மில் காணப்படுகிறதா? நாம் தேவசாயலாக மாறினால் ஒழிய, தேவனுடைய வருகையில் போகமுடியாது. அனுதின வாழ்க்கையின் காரியங்களில் தேவசாயலை அணிய பிரயாசப்படுவோம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவருக்கும் அனுதினமும் பொன்னிறசாயலாய் மாறுவதற்குரியக் கிருபைகளை தந்தருளி ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar
https://www.wogim.org

Yesuvae Ummai Pola, Uthamiyae Vol. 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *