என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம் (எபி. 2:9).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/hau8JpYhoks
இயேசு கல்வாரிச் சிலுவையில் நம் ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசி பார்த்தார். பூமியில் இதுவரைப் பிறந்தவர்கள், இனிப்பிறக்கப் போகிறவர்கள் அத்தனை பேருக்காகவும் அவர் மரணத்தை ருசித்தார். ஏனெனில், பிதாவாகிய தேவன், நம்முடைய இரட்சிப்பின் அதிபதியாகிய இயேசுவை, உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்ற தாயிருந்தது. ஆகையால் கல்வாரிச் சிலுவையில் இயேசு அனேக உபத்திரவங்களைச் சகித்தார். அவர் நெருக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும், நொறுக்கப்பட்டும் இருந்தார். கெத்சமனே துவங்கி, கொல்கொதா மட்டும் அனேக அடிகளையும், அவமானங்களையும், துன்பங்களையும் அடைந்தார். அதன்பின்பு அவரைச் சிலுவையில் ஆணிகளினால் அடித்துத் தொங்க விட்டார்கள். அவருடைய அகோரத் தோற்றத்தைக் கண்டவர்கள் பிரமிப்படைந்து பயந்தார்கள். இயேசு அடைந்த உபத்திரவங்கள் அவரைப் பூரணப்படுத்தியது. அது அவருக்கு மகிமையையும் கனத்தையும் கொண்டுவந்தது.
இயேசுவின் பாடுகள் நம்முடைய வாழ்க்கையில் அனேக ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது என்று அதே எபிரேய நிருபத்தின் பிந்திய வசனங்கள் கூறுகிறது. முதலாவது, அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்ப்பதற்காக அவர் உபத்திரவப்பட்டார் என்று எபி. 2:10 கூறுகிறது. பிதாவாகிய தேவன் அவருக்குப் பங்காகக் கொடுத்த பலவான்களாய் நாம் காணப்படுகிறோம். ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும் என்றும், தலைமுறை தலைமுறையாக அவர்கள் ஆண்டவருடைய சந்ததி என்னப்படும் என்ற சிலுவையின் பாட்டாகிய சங்கீதம் 22:30ன் படி பிதாவாகிய தேவன் இயேசுவுக்குக் கொடுத்த சந்ததிகளாய் நாம் காணப்படுகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு நாள் நம்மை மகிமையில் கொண்டு சேர்த்து அவரோடு சிங்காசனத்தில் அமரும் படிக்குச் செய்வார். இரண்டாவது மரணத்தின் அதிகாரியாகிய பிசாசினிடத்திலிருந்து முழு விடுதலையைத் தந்தார் என்று எபி. 2:15 கூறுகிறது. மரண பயம் எல்லா பயங்களை விடக் கொடூரமானது. கிறிஸ்து இல்லாமல் மரிக்கிற அத்தனை பேரையும் இந்த பயம் சூழ்ந்து கொள்ளும். இயேசு, பிசாசினுடைய அதிகாரங்களை எல்லாம் சிலுவையில் உரிந்து போட்டு, அவனுடைய தலையை நசுக்கி மகிமையாய் வெற்றி சிறந்தார். சிலுவையண்டை வந்து, சிலுவை நாதரின் இரத்தத்தால் பாவங்களறக் கழுவப்பட்டு, பரிசுத்தத்தோடும் பயபக்தியோடும் வாழ்பவர்களுக்கு மரணத்தைக் குறித்த பயமில்லாமல் சந்தோஷமாய் வாழமுடியும்.
மூன்றாவது, இயேசு தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார் என்று எபி. 2:18 கூறுகிறது. அவர் உபத்திரவப்படுகிறவர்களுடைய உபத்திரவத்தை ஒரு நாளும் அற்பமாய் கருதுவதில்லை. நீங்கள் கடந்து செல்லுகிற சோதனையின் பாதைகள் எதுவாய் காணப்பட்டாலும் அவர் உங்களுக்கு உதவி செய்வார். இயேசு கழுதைக்குட்டியின் மேல் ஏறி எருசலேமுக்கு வந்த வேளையில் ஓசன்னா என்று சொல்லி ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள். அது உதவிசெய்யும் என்ற கூக்குரலாய் (Cry for help) காணப்பட்டது. ரோமர்களுடைய அடிமைத்தனத்திலிருந்து எங்களுக்கு விடுதலையைத் தந்து, உதவி செய்யும் என்ற வேண்டுதலாய் காணப்பட்டது. கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் சோதனைகளும் வேதனைகளும் எதுவாய் காணப்பட்டாலும் சிலுவை நாதரை நோக்கிக் கூப்பிடுங்கள், அவர் உங்களுக்கு உதவி செய்து உங்களை விடுவிப்பார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae