ஆதலால், அவர் தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். எபிரேயர் 2:18
சோதிக்கப்படுதல் என்பது, பாவம் செய்யத் தூண்டப்படுதல், கவர்ச்சிக்கப்படுதல், இழுக்கப்படுதல் என்பதாகக் காணப்படுகிறது. சோதிக்கப்படுதல் என்பது பாவமல்ல, சோதனையில் விழுவது தான் பாவம். இயேசு எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருந்தார், என்று எபிரேயர் 4:15 கூறுகிறது. சாத்தானுடைய பெயர்களில் ஒன்று சோதனைக்காரன் (மத்தேயு 4:3). இயேசு ஊழியம் செய்யத் துவங்குவதற்கு முன்பாகவே, அவன் இயேசுவை நாற்பது நாட்கள் சோதித்தான் (லூக்கா 4:2). அவருடைய மூன்றரை வருஷ ஊழியத்தின் நாட்களிலும், கல்வாரி சிலுவையில் ஜீவனைக் கொடுக்குமட்டும் சோதனைகள் தொடர்ந்தது. ஆகிலும் அவர் பாவம் செய்யவில்லை. ஆகையால், அவர் தாமே சோதிக்கப்பட்டபடியால், அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்கிற கர்த்தர்;.
சீமோன் பேதுருவை சத்துரு சோதிப்பதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான். ஆனால், இயேசு உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன், நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்று கூறினார். அதிலிருந்து நம்முடைய விசுவாச ஜீவியத்திலிருந்து நம்மைத் தள்ளிப்போடுவதற்கு பிசாசு முயற்சித்தாலும் நமக்காக எப்பொழுதும் பிதாவின் வலது பாரிசத்திலிருந்து இயேசு வேண்டுதல் செய்கிறவராய் காணப்படுகிறார். உங்கள் விசுவாச சோதனைகள் எதுவாக காணப்பட்டாலும் அதிலிருந்து தப்பிப்போகிற மார்க்கத்தை கர்த்தர் உங்களுக்கு காண்பிப்பார். அப்போஸ்தலனாகிய பவுல், அவருக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் அவர் தன்னை உயர்த்தாதபடிக்கு, அவர் மாமிசத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருந்தது. அது அவருடைய சரீர பிரச்சனையாயிருந்து, அவரை குட்டும் சோதனையாயிருந்தது. ஆகிலும் கர்த்தர் கிருபையைக் கொடுத்து சோதனையை தாங்கும் படிக்கு உதவிசெய்தார். கர்த்தர் நம்முடைய பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிற தேவன். ஆகையால் சோர்ந்துபோகாதிருங்கள்.
நாம் சிலவேளைகளில் கஷ்டங்களினால் சோதிக்கப்படும்போது, கர்த்தர் நம்மைச் சோதிக்கிறார் என்று நினைப்பதுண்டு. சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக. தேவன் பொல்லாங்கினால் சோதிக்கிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான் (யாக்கோபு 1:13,14) என்று வேதம் கூறுகிறது. தேவன், யோபுவின் சோதனையைப் போல, சிலவேளைகளில் அனுமதி கொடுக்கலாம். அவர் அனுமதித்தால் இரட்டிப்பான பலன் உண்டாகும். ஆனால் இயேசு நம்மைச் சோதிக்கிறவரல்ல. அவர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கிறவர் (2 பேதுரு 2:9). நம்முடைய திராணிக்கு மேலாகச் சத்துருவால் நாம் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடுப்பதில்லை. ஆனால் சிலவேளைகளில் நம்முடைய சுய இச்சைகளினால் நாம் சோதிக்கப்படுகிறோம். தாவீது, ராஜாக்கள் யுத்தம் செய்யும் காலத்தில் போர்முனையில் காணப்படவேண்டியவன் தன் அரண்மனை உப்பரிக்கையில் மேல் உலாத்திக்கொண்டு தன் கண்களை அலையவிட்டதினால், அவனுடைய சுய இச்சையினிமித்தம் பத்சேபாளோடு பாவம் செய்தான். அதன் நிமித்தம் அனேக பாடுகளையும் வேதனைகளையும் அனுபவித்தான். ஆகையால், நம்முடைய சோதனைகளுக்குக் காரணம் என்ன என்பதையும் ஆராய்ந்துபார்க்கவேண்டும். நம்முடைய வழிகளையும் சரிப்படுத்தவேண்டும் என்றும் கர்த்தர் விரும்புகிறார்.
இயேசு ஒருபோதும் உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அற்பமாயெண்ணுவதில்லை. அருவருப்பதில்லை. அவனுக்கு தம்முடைய முகத்தை மறைப்பதுமில்லை. அவன் தம்மை நோக்கி கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளி பதில்செய்கிறவர் (சங்கீதம் 22:24). காரணமில்லாமல் உபத்திரவங்கள், சோதனைகள் உங்கள் வாழ்க்கையில் காணப்படுகிறதா? கர்த்தருடைய முகத்தை நோக்கிப்பாருங்கள். அவர் உங்களுக்கு உதவிசெய்வார். உங்களை விடுவித்து மகிழச்செய்வார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar
https://www.wogim.org