யோவா 20:27 பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/YdSOY59Bg9w
இயேசு உயிரோடு எழுந்து பரமேறி செல்வதற்கு முன், நாற்பது நாட்களில், பத்து முறை தரிசனமானார்; ஆறாவதாக, இயேசு உயிரோடெழுந்தபிறகு , தோமா உட்பட பதினொருபேருக்கு தன்னை வெளிப்படுத்தினார்.
இந்தியா இலங்கை தேசங்களுக்கு வந்த இயேசுவின் சீஷனாகிய தோமாவிற்கு விசுவாசக்குறைச்சல் இருந்தது. அவன் பழைய ஏற்பாட்டு காலத்தில் வாழ்ந்த பரிசுத்தவான்களை போல தரிசித்து விசுவாசிக்கிறவனாக காணப்பட்டான். தோமா சொன்னான், அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான்.
உண்மையா? பொய்யா? உண்மைச் செய்தியா? பொய்ச் செய்தியா? இது தான் இன்று உலகத்தையே வாட்டி வதைக்கும் ஒரு கேள்வி. ஊடகங்கள், பேஸ்புக், டுவிட்டர் மூலம் தகவல்கள் பல ஆயிரம் பேருக்கு பரப்பப்படுகிறது. அதில் உண்மையான தகவல்களும் பொய்யான தகவல்களும் கலந்து பரப்பப்படுகின்றன. ஆகையால் அநேக காரியங்களை நம்புவதே அநேகருக்கு கடினமாக உள்ளது. தமிழில் ஒரு பழமொழி உண்டு; கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்! என்பதாக. தோமா அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் இருந்தான். இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதை நான் கண்டு மாத்திரமல்ல, அவருடைய காயங்களில் என் விரலையும், விலாவில் என் கையையும் விட்டால் தான் நான் விசுவாசிப்பேன் என்று சொன்னான்.
உலக காரியங்களை நாம் தீர விசாரிக்கலாம். ஆனால் கர்த்தருடைய வார்த்தையை, அவருடைய வல்லமையை, நாம் வேதத்தின்படி அப்படியே விசுவாசிக்கிறவர்களாக காணப்பட வேண்டும். கிறிஸ்தவ வாழ்க்கையே விசுவாச வாழ்க்கைதான். கண்களினால் காண்பவைகளை அல்ல; காணாதவைகளை விசுவாசிக்க வேண்டும். நாம் நம்முடைய பெற்றோர்களுக்கு பிள்ளைகளாய் இருக்கிறோம். நம்முடைய பெற்றோர்களுக்கு திருமணம் நடந்தபோது நாம் பிறக்கவில்லை; ஆனால் காணாத அந்த பெற்றோர்களின் திருமணத்தை அப்படியே விசுவாசிக்கிறோம். அதுபோல தான் கர்த்தர் உங்களுக்கு செய்யப்போகும் வார்த்தைகளை அப்படியே விசுவாசியுங்கள். ஈசாக்கு ஆபிரகாமின் விசுவாசத்தால் உருவாக்கப்பட்டான். ஆபிரகாமின் விசுவாசத்தை கர்த்தர் நீதியாக கண்டு, ஈசாக்கை பெற்றெடுக்கும்படி செய்தார்.
எபிரெயர் நிருபத்தை எழுதிய ஆக்கியோன் சொல்லுவான், விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும் (எபி 11:6). ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்று ஆண்டவர் கூறினார் (லுக் 18:8). நம்முடைய தேசத்திற்கு வந்த தோமாவிடம் உயிர்த்தெழுந்த இயேசு கூறியது, விசுவாசமாயிரு என்று கூறினார். ஆகையால், நாம் அதிக கவனத்துடன் அவிசுவாசத்திற்கு இடம் கொடாமல் காணப்பட வேண்டும். விசுவாசத்தில் நாம் பெருகுகிறவர்களாக காணப்பட வேண்டும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org