பிலி 3:13,14 சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/GODAljHc4hA
முதலில், அப்போஸ்தலன் பவுல் இந்த வார்த்தைகளை தன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கையில் தொடங்கிய ஒரு இளம் வயதில் எழுதப்படவில்லை என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அவருடைய நிறைவான வாழ்க்கையின் முடிவில் ஒரு முதிர்ந்த வயதில் கூறுகிற வார்த்தையாய் இந்த வார்த்தை காணப்படுகிறது. பவுல் மனம் திரும்பி முப்பது ஆண்டுகள் கடந்துவிட்டது. அந்த ஆண்டுகளில், பல சபைகளை நிறுவ ஆண்டவர் அவனை பயன்படுத்தினார், அடையாளங்கள் மற்றும் அற்புதங்களால் அவனது ஊழியத்தை பலமாக உறுதிப்படுத்தினார். முதல் ஆண்டிலிருந்து பவுல் சுவிசேஷப் பணியில் தன்னைத் தாராளமாகச் செலவிட்டார், தொடர்ந்து பயணம் செய்து பெரும் துன்பங்களை அனுபவித்தார். மூன்றாம் வானத்திற்கு உயர்த்தப்பட்ட ஒரு தனித்துவமான அனுபவத்தையும் அவர் பெற்றார்.
இருந்தாலும், இவை அனைத்தின் முடிவிலும், ஆண்டவர் தனது வாழ்க்கைக்காக நோக்கம் கொண்ட அனைத்தையும் இன்னும் அடையவில்லை என்றே அவர் கூறுகிறார். எல்லா காலத்திலும் சிறந்த அப்போஸ்தலனாக வாழ்ந்த பவுல், தனது வாழ்க்கையின் முடிவில், இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் என்று கூறுகிறார். பெரும்பாலான விசுவாசிகளுக்கு, இரட்சிப்பு ஞானஸ்நானம் போன்றவற்றோடு கிறிஸ்தவ வாழ்க்கையின் இலக்கு முடிந்து விடுகிறது என்று நினைக்கிறார்கள். கிறிஸ்து தன்னை ஒரு நோக்கத்துடன் பிடித்திருந்தார் என்ற தனது உறுதியான நம்பிக்கையை பவுல் கொண்டிருந்தார். பதிலுக்கு, எந்த விலை கொடுத்தாவது அந்த நோக்கத்தைப் பிடிக்க அவர் உறுதியாக இருந்தார்.
இப்படிப்பட்ட உறுதி இந்நாட்களில் நமக்கு காணப்பட வேண்டும். பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி முன்னேறிச்செல்லுங்கள். கடந்த கால வாழ்க்கையில் வந்த வீழ்ச்சிகள், தோல்விகள், குறைகளையே சிந்தித்துக்கொண்டிருக்கமால், பவுல் சொன்னதுபோல, ஒன்று செய்யுங்கள். என்னவென்றால், லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணுங்கள். கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருங்கள். அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்றும்; குப்பையுமாக எண்ணுங்கள். உங்களுக்கென்று ஆண்டவர் வைத்திருக்கிற இலக்கை அடைய ஆசையாய் தொடருங்கள். வாழ்க்கையில் நீங்கள் பல காரியங்கள் செய்தாலும், இந்த ஒன்றை செய்யுங்கள். கர்த்தரை அறிகிற அறிவில் ஒவ்வொருநாளும் வாஞ்சையோடு அவரை நாடுங்கள்.
ஒரு வாரத்திற்கு மேல் பழைய சாட்சியை யாரும் வழங்கக்கூடாது என்ற விதியை ஜான் வெஸ்லி விதித்தார். முந்தைய ஏழு நாட்களில் கர்த்தர் தன்னுடன் நடந்துகொண்ட விதத்தைப் பற்றிச் சொல்ல எந்தக் கதையும் இல்லாத எவரும், தன்னை ஒரு பின்வாங்கியவராகக் கருதிக் கொள்ள வேண்டும் என்று கூறுவார். நம்மில் எத்தனை பேர் அந்தச் சோதனையைத் தாங்க முடியும்? அந்த மாதிரியான ஒரு கூட்டத்தில் நாம் மௌனமாக உட்கார வேண்டுமா? இல்லை சாட்சியுள்ள வாழ்க்கை வாழ வேண்டுமா? சாட்சியுடன் வாழ வேண்டுமென்றால் உங்கள் வாழ்க்கையில் ஒன்று செய்யுங்கள். பின்னோக்கியல்ல, முன்னோக்கி பாருங்கள். தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org