நூற்றுக்கு அதிபதியின் தாழ்மையும் விசுவாசமும் (The Centurion’s Humility and Faith)

மத் 8:8 நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/lGALUNWyHJc

நூற்றுக்கு அதிபதி ஒரு ரோமானிய இராணுவ வீரன், அவனுக்கு கீழ் சுமார் நூறு வீரர்கள் பொறுப்பில் இருந்தனர். இவன் தனக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தப் பழகிய ஒரு மனிதன், ஆனாலும் இயேசுவைச் சந்திக்க எங்கு சென்றாலும், திமிர்வாதத்தால் அதாவது பக்கவாதத்தால் வீட்டில் படுத்திருந்த தனது வேலைக்காரனைப் பற்றிச் சொல்ல, அவர் எங்கு சென்றாலும் பயணம் செய்யத் தயாராக இருந்ததில் அவரது மனத்தாழ்மையைக் காண்கிறோம். இந்த நூற்றுக்கு அதிபதி நேரம் எடுத்து, பயணத்தை பார்க்காமல், அலுப்பை பார்க்காமல் இயேசுவை சந்திக்க சென்றது தன்னுடைய மகனுக்காகவோ, தன்னுடைய உறவினருக்காகவோ, தன்னுடைய நண்பனுக்காகவோ இல்லை. அவன் இயேசுவை சந்திக்க சென்றதின் நோக்கம் அவன் வீட்டில் வேலை செய்யும் சாதாரண வேலைக்காரனுக்காக கடந்து சென்றான். இந்த நூற்றுக்கு அதிபதியிடம் இருந்த சுபாவம் நமக்கு இருக்குமென்றால் எத்தனை நல்லது. நாம் நமக்காக, நம்முடைய பிள்ளைகளுக்காக அதிகமாக பிரயாசப்படுகிறோம். நம்முடைய வேலை ஸ்தலங்களில் நமக்கு கீழே வேலை செய்யும் ஒரு நபருக்காக ஆண்டவரின் பாதத்தில் அமர்ந்து, அவர்களின் உயர்வுக்காக ஆசீர்வாதத்திற்காக ஜெபித்தது தான் எத்தனை முறை என்று யோசித்துப்பாருங்கள்.

இந்த நூற்றுக்கு அதிபதி அதிகாரமுள்ளவன்; அவன் சொல்லுவதை கேட்டு கீழ்ப்படிகிற நூற்றுக்கணக்கான நபர்கள் இருந்தார்கள். இருந்தாலும் அவன் இயேசுவை தேடி வந்தான். தன்னுடைய வேலைக்காரனை சுகப்படுத்த ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டான். இயேசு அப்பொழுது, சரி, நான் உன்னுடைய வீட்டில் வந்து அவனை சுகமாக்குகிறேன் என்று கூறினார். அப்பொழுது நூற்றுக்கு அதிபதி சொல்லுவான், இல்லை ஆண்டவரே, நீர் என் வீட்டிற்கு வருவதற்கு நான் பாத்திரனல்ல. நீர் பரிசுத்தமுள்ளவர்; நான் நூற்றுக்கு அதிபதியாக இருந்தாலும், நான் பாவியான மனுஷன் என்று கூறினான். அவன் ஆண்டவருக்கு முன்பாக முழுமையாக தன்னை தாழ்த்தினான்.

மத் 8:8ல், முதல் பகுதி நூற்றுக்கு அதிபதியின் தாழ்மையை குறிக்கிறது. அவன் சொல்லுகிறான், நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல என்பதாக. அந்த வசனத்தின் அடுத்த பகுதி அவனுடைய விசுவாசத்தை குறிக்கிறது. அவன் சொல்லுகிறான், ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான் என்பதாக. அவனுக்குள்ளாக தாழ்மையும் இருந்தது, விசுவாசமும் இருந்தது. நமக்கு விசுவாசம் இருந்து தாழ்மை இல்லையென்றால், அதனால் ஒரு பயனும் இல்லை. மத் 8 :10 ல் இயேசு அவனை மெச்சிக்கொண்டார். இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின் செல்லுகிறவர்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். நமக்கு தாழ்மையும் விசுவாசமும் இணைந்து காணப்படுமென்றால், நமக்கு ஆண்டவர் அற்புதத்தை செய்வார்; அதேவேளையில், நம்முடைய விசுவாசத்தை குறித்து அவர் மெச்சிக்கொள்ளுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *